தேக்கடியில் படகு கட்டணம் திடீர் உயர்வு: சுற்றுலா பயணிகள் அதிர்ச்சி

தேக்கடியில் படகு கட்டணம் திடீர் உயர்வு: சுற்றுலா பயணிகள் அதிர்ச்சி
Updated on
1 min read

தேக்கடியில் படகு சவாரிக் கட்டணத்தை கேரள அரசு திடீரென உயர்த்தி உள்ளதால், சுற்றுலாப் பயணிகள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். முல்லைப் பெரியாறு அணை நீர் தேக்கத்தில் சுற்றுலாப் பயணிகளுக்காக படகுகள் இயக்கப்படுகின்றன. இதற்காக தேக்கடியில் இருந்து தினமும் காலை 7.30 மணி,9.30 மணி, 11.15 மணி,1.45 மணி மற்றும் 3.30 மணி என 5 முறை படகுகள் இயக்கப்படுகின்றன. தலா ஒன்றரை மணி நேர பயணத்தின்போது வனப்பகுதியில் இருந்து நீர் அருந்த வரும் யானை, காட்டெருமை, மான் உள்ளிட்ட வனவிலங்குகளை சுற்றுலாப் பயணிகள் பார்வையிடலாம்.

இதற்காக வரும் சுற்றுலாப் பயணிகளின் வாகனங்கள் ஆனவச்சால் என்ற இடத்தில் நிறுத்தப்பட்டு, அங்கிருந்து கேரள வனத்துறை வாகனத்தின் மூலமே தேக்கடி படகு குழாமுக்குச் செல்ல முடியும். இதற்காக நுழைவுக்கட்டணம் ரூ.60-ம், படகு பயணத்துக்கு ரூ. 255-ம் கட்டணம் பெறப்பட்டு வந்தது. இந்நிலையில் இக்கட்டணத்தை கேரள சுற்றுலாத்துறை திடீரென உயர்த்தி உள்ளது.

இதன்படி நுழைவுக்கட்டணம் ரூ.70 ஆகவும், படகு சவாரிக்கு ரூ.385-ம் ஆக கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது. இதுதவிர கேமரா, வாகன நிறுத்தக் கட்டணங்களும் தனியே வசூலிக்கப்படுகிறது. இதனால் படகு பயணத்துக்கு ஒருவருக்கு ரூ. 500 வரை செலவாகும் நிலை ஏற்பட்டுள்ளது. கரோனாவுக்கு பிறகு இங்குள்ள தனியார் தங்கும் விடுதிகள், ஓட்டல்கள், ரிசார்ட்ஸ் உள்ளிட்டவை கட்டணத்தைக் குறைத்து சுற்றுலாப் பயணிகளை கவர்ந்து வருகின்றன. இந்நிலையில் கேரளா சுற்றுலா வளர்ச்சிக் கழகத்தின் கட்டண உயர்வு சுற்றுலாப் பயணிகளை அதிர்ச்சி அடைய வைத்துள்ளது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in