

‘இ.ஐ.டி.பேரிஸ்’ என்ற பெயர் விவசாயிகளிடத்தில் கசப்பான உணர்வை ஏற்படுத்தினாலும், பலரது நாவில் இனிப்பு உணர்வை ஏற்படுத்தும் என்றால் மிகையல்ல. கடலூர் மாவட்டத்தைப் பொறுத்தவரை நெல்லிக்குப்பம் என்றாலே ‘இ.ஐ.டி பேரிஸ் சர்க்கரை ஆலை’தான் அனைவருக்கும் நினைவில் வரும். பல்வேறு வரலாற்றுச் சுவடுகளை தன்னகத்தே கொண்டிருக்கிறது இந்த ஆலை.
அதன் இனிப்பான வரலாற்றை நாம் வாசித்து ருசிப்போம் உலகில் பழமை வாய்ந்த அதேநேரத்தில் தமிழகத்தின் முதல் சர்க்கரை ஆலை என்ற பெயரை தன்னகத்தே கொண்டு கம்பீரமாக 178 ஆண்டுகளாக இயங்கி வருகிறது கடலூர் மாவட்டம் நெல்லிக்குப்பத்தில் உள்ள இ.ஐ.டி சர்க்கரை ஆலை. இங்கிலாந்தைச் சேர்ந்த தாமஸ்பாரி என்னும் 20 வயது இளைஞர் 1788 ஜூலை 17-ல் சென்னை வந்திறங்கிய போது, அரசிடம் தன்னை வர்த்தகராக பதிவுசெய்து கொண்டதோடு1795-ல் ‘தாமஸ் பாரி அண்ட் கோ’ என்ற நிறுவனத்தை உருவாக்கினார்.
பின்னர் 1891-ல் ஜான் வில்லியம் என்பவரை தனது பங்குதாரராக இணைத்துக் கொண்டு ‘பாரி-டேர்’ என பெயர் மாற்றம் செய்தார். பாரி டேர் நிறுவனம் கேரளாவில் வயநாட்டில் காப்பி பயிர்களை பயிரிட்டு வந்த நிலையில், கடலூர் மாவட்டம் வண்டிப்பாளையத்தில் அவுரிச் செடியிலிருந்து சாயம் தயாரிக்கும் தொழிலில் இறங்கியது. அத்தொழில் சரிவர நடைபெறவில்லை. அந்த நிலையில் தான், கடலூர் மாவட்டத்தில் சாகுபடியாகும் பயிர்கள் குறித்து கேட்டறிந்த அவர் கரும்பு மீது கவனம் செலுத்தினார். 1842-சர்க்கரை தொழிலில் இறங்கி, நெல்லிக்குப்பத்தில் முதன்முதலாக சர்க்கரை ஆலை நிறுவப்பட்டது.
‘பாரி டேர்’ நிறுவனம் நாளடைவில் ‘ஈஸ்ட் இந்தியா டிஸ்ட்ரலரீஸ் பேரி’ என மாறியது. இங்கு உற்பத்தி செய்யப்படும் சர்க்கரை உலகத் தரம் வாய்ந்ததாக அன்று முதல் இன்று வரை கருதப்பட்டு வருகிறது. 1900 ஆண்டுகளிலேயே கடலூர் துறைமுகத்திலிருந்து இங்கிலாந்துக்கு சர்க்கரை ஏற்றுமதி செய்யப்பட்டு அங்கு உலகத் தரம் வாய்ந்த மிட்டாய்கள் தயாரிக்கப்பட்டு பல்வேறு நாடுகளுக்கு ஏற்றுமதியும் செய்யப்பட்டது. சென்னை, ராணிப்பேட்டை, கொல்கத்தா, வயநாடு என பல்வேறு பகுதிகளில் விரிவடைந்திருக்கும் இந்நிறுவனத்தை முருகப்பா குழுமம் தற்போது நிர்வகித்து வருகிறது.