Last Updated : 31 Jan, 2021 09:25 AM

 

Published : 31 Jan 2021 09:25 AM
Last Updated : 31 Jan 2021 09:25 AM

உற்பத்தி திறன், குறைபாடுகளை சரி செய்ய சினை மாடுகளுக்கு அடர் தீவனம் அவசியம்

நமது கடலூர், விழுப்புரம் மாவட் டங்களில் வயலும் வயல் சார்ந்த கால்நடைத் தொழில்களிலும் ஈடு படுவோர் அதிகளவில் உண்டு. அவர்களில், கறவை மாடுகளை வைத்திருப்பவர்கள் சத்து பற்றாக்குறை யால், பால் உற்பத்தி குறைந்து பாடாய் படுவதுண்டு. அந்தப் பிரச்சினையைத் தீர்க்க, சினை மாடுகளுக்கு அடர் தீவனம் அளிப்பதன் மூலம் சரி செய்யலாம் என்கின்றனர் கடலூர் கால்நடை மருத்துவ பல்கலைக்கழக பயிற்சி மற்றும் ஆராய்ச்சி மையத்தின் மருத்துவர்கள் பி.முரளி, முனைவர் ந.வெங்கடபதி. அவர்கள் தரும் தகவல்கள் இதோ...

அடர் தீவனம் என்பது தானியம், புண்ணாக்கு, தவிடு, தாது உப்பு மற்றும் சமையல் உப்பு கலந்த ஒரு சமச்சீரான கலப்பு தீவனமாகும். இவ்வாறு தயாரிக்கப்பட்ட தீவனத்தையே மாடுகளின் உற்பத்தி மற்றும் சினை பருவத்திற்கேற்றவாறு கணக்கிட்டு அளிக்கப்பட வேண்டும். கலப்பு தீவனம் கிடைக்காத கிராமப் பகுதிகளில் மக்கா சோளம், கம்பு,சோளம் ஆகியன 30 சதவீதம், பருத்தி,கடலை, தேங்காய் புண்ணாக்கு 32 சதவீதம், அரிசி மற்றும் கோதுமை தவிடு 35 சதவீதமம், தாது உப்பு 2 சதவீம், சமையல் உப்பு 1 சதவீதம் கலந்து தயார் செய்து தரலாம்.

கால்நடை வளர்ப்போர் பொதுவாக தங்களின் கறவை மாடுகளுக்கு அதிகப்படியான தானியம் கோதுமை தவிடு, அரிசி தவிடு மற்றும் சிறிதளவு புண்ணாக்கையே தீவனமாகத் தருகின்றனர். சமயங்களில் சினை மாடுகளுக்கு குறைவான அளவு தவிடு மட்டுமே தருகின்றனர். சினை பருவத்தில் பால் வற்றிய சினைக் காலமான கடைசி 60 முதல் 65 நாட்களில்தான் கன்றின் வளர்ச்சி அதிகமாகக் காணப்படும் அதனால் கண்டிப்பாக அடர் தீவனம் கொடுக்கப்பட வேண்டும். மாடுகளின் உற்பத்தி மற்றும் சினைப்பருவத்திற்கேற்றவாறு தீவனம் அளிக்கப்படாத போது கன்று ஈன்ற மாடுகளில் பால் உற்பத்தி குறைபாடு நோய்கள் ஏற்படுகின்றன.

மேலும் சினைமாடுகளில் கன்றின் வளர்ச்சி பாதிப்படைதல், கன்று ஈனுவதில் சிரமம் ஏற்படுதல், நஞ்சுக்கொடி தங்குதல், சத்து குறைபாட்டால் சில மாடுகளில் குறை மாதத்தில் கன்றை விசுருதல் மற்றும் அடுத்த பருவத்தில் சினை பிடிக்காமை ஆகிய பிரச்சினைகளும் ஏற்படுத்தும். சினை மாடுகளுக்கு நாள் ஒன்றுக்கு 400 கிராம் அடர் தீவனம், சினை பருவத்திற்கு ஒரு கிலோ தீவனம் கொடுக்கப்பட வேண்டும். அதாவது 7 லிட்டர் பால் கறக்கும் சினை மாட்டிற்கு பால் உற்பத்திக்கு 2.8 கிலோ தீவனமும் அதனுடன் சினை பருவத்திற்கு 1 கிலோவும் சேர்த்து மொத்தம் 3.8 கிலோ தீவனத்தை ஒரு வேளைக்கும், 1.9 கிலோ என இரண்டு வேளையாகவும் கொடுக்க வேண்டும்.

பால் வற்றிய சினை மாடுகளுக்கு ஒரு நாளைக்கு 2.50 கிலோ அடர் தீவனத்தை ஒரு வேளைக்கு 1.25 கிலோ வீதம் இரு வேளைக்கு கொடுக்க வேண்டும். இத்துடன் நாள் ஒன்றுக்கு 20 கிலோ பசும் புல் மற்றும் 5 கிலோ வைக்கோல் கொடுக்கப்பட வேண்டும். அடர் தீவனத்தில் தாது உப்பு சேர்க்கப்படவில்லை என்றால் ஒரு நாளைக்கு 50 கிராம் தாது உப்பை தீவனத்துடன் கலந்து கொடுக்க வேண்டும்.

பலர் தீவனச் செலவைக் கருத்தில் கொண்டே சினை மாடுகளுக்கு தீவனம் சரிவர கொடுக்கப்படுவதில்லை. ஒரு நாளைக்கு 2.5 கிலோ தீவனத்தின் செலவு ரூ.62.50 என கணக்கிட்டால், பால் வற்றிய காலமான 60 நாளைக்கு மொத்தம் ரூ.3,750 மட்டுமே செலவாகும். இவ்வாறு முறையாக தீவனம் கொடுக்கும்போது சத்துப்பற்றாக்குறையால் ஏற்படும் உற்பத்தி திறன் குறைபாடு நோய் சார்ந்த இழப்பு, கன்று மற்றும் கிடேரியின் வளர்ச்சி குறைபாடு ஆகியவற்றைத் தவிர்க்கலாம்.

அதன் பின் வரும் பால் உற்பத்தியை கணக்கிடும் போது ரூ. 3,750 என்பது மிக குறைந்ததாகவே இருக்கும். அடர் தீவனம் கொடுத்தால் கன்று அதிக வளர்ச்சி அடையும் என்பதும் உண்மையல்ல, முறையாக தீவனம் அளித்தால் கன்று சராசரியான 25-30 கிலோ எடையில் இருக்கும். அதுமட்டுமில்லாமல் தாயும் உரிய ஊட்டச்சத்து பெறுவதால் கன்று ஈனுவதில் எந்த சிரமமும் ஏற்படுவதில்லை. கால்நடை வளர்ப்பவர்கள் சினை மாடுகளுக்கு முறையான தீவனம் வழங்கி பண்ணைப் பொருளாதாரத்தை பெருக்கலாம் என்கின்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x