

கை வலிக்க எழுதிய காலம் போய், கணினியில் தட்டச்சு செய்வதை வழக்கமாக்கிக் கொண்டு விட்டோம். பேனா தொட்டு எழுதியது புராதானக் காலம் என்பது போல நினைக்கத் தொடங்கி விட்டோம். கடிதங்கள் காலாவதியாகி மின்னஞ்சல் மிடுக்காய் வலம் வருகிறது.
பள்ளி, கல்லூரிகளில் மாணவர்கள் கூட கணினி திரைகளிலேயே தேர்வெழுதும் காலத்தை நோக்கி சென்று கொண்டிருக்கின்றனர்.
ஆனாலும், எழுதுகோல் பற்றி இலகுவாய் எழுதுவது ஒரு தனி சுகம். இந்த சுகத்தை உணர்ந்து, எழுதிப் பழகாமல் இருப்பவர்கள் எழுதும் எழுத்து அவசரத்தில் பிழிந்த முறுக்கு போல் ஆகி விடுகிறது.
அங்கொன்றும் இங்கொன்றுமாய் கையெழுத்துச் சுகத்தை ரசித்து வருவோர் இருக்கின்றனர். அதில் தனித்திறனை வளர்த்தும் வருகின்றனர். அவர்களில் ஒருவர் நெய்வேலியைச் சேர்ந்த என்எல்சி நிறுவன ஊழியரான தண்டபாணி. பள்ளிப் பருவம் முதலே கண்ணில் ஒற்றிக் கொள்ளும் படியான கையெழுத்தை வரமாக பெற்றவர். தமிழ் ஆங்கில எழுத்துக்களை இயல்பாகவும் வித்தியாசப்படுத்தியும் எழுதுகிறார்.
“பள்ளிப் பருவத்தில் எனது ஆசிரியர்கள் எனது கையெழுத்தைப் பார்த்தே மதிப்பெண் அளித்ததுண்டு. என் கையெழுத்தைப் பார்த்து சிறு வயதில் பலர் ஆர்வமாக கடிதங்களை எழுதி வாங்கிச் சென்றதுண்டு. அதன்மூலம் குறிப்பிட்ட காரியங்கள் சரியாக நடக்க, என் கையைப் பிடித்து கண்ணில் ஒற்றிக் கொண்டதுண்டு. அப்போதெல்லாம் எனக்கு சந்தோஷம் பீறிடும். என் கையெழுத்துக் கலையை மேலும் மெருகேற்றி, அலுவலகக் கோப்புகளில் முத்திரைப் பதித்தேன். அழகாக எழுதி, தலைப்பிட்டு வைப்பேன்.
அழகிய கையெழுத்துடன் கூடிய கோப்பு பராமரிப்பைக் கண்ட அதிகாரிகள், என்னைப் பாராட்டுவதுண்டு. இதற்காக தனிப் பயிற்சி எதுவும் எடுக்கவில்லை. ‘கையெழுத்து ரொம்ப முக்கியம்’ என்று எழுதி பழக்கிய என் அம்மாவின் வழிகாட்டுதல்தான் இந்த பாராட்டுதல்களுக்கு காரணம். எனது எழுத்துப் பணியை தொடர்ந்து மேற்கொள்வதோடு, தற்போதைய தலைமுறையினருக்கும் எழுத்துக் கலையை பயிற்றுவிக்க ஆசைப்படுகிறேன்” என்கிறார்.