Last Updated : 31 Jan, 2021 03:13 AM

 

Published : 31 Jan 2021 03:13 AM
Last Updated : 31 Jan 2021 03:13 AM

மக்களை மேம்படுத்தும் கலையாகும் பட்டிமன்றங்கள்: பத்மஸ்ரீ விருது பெறும் சாலமன் பாப்பையா பெருமிதம்

மதுரை

மக்களை மேம்படுத்தும் கலையாக பட்டிமன்றங்கள் மாறியுள்ளதாக பத்மஸ்ரீ விருதுக்கு தேர்வான பட்டிமன்ற நடுவர் பேராசிரியர் சாலமன் பாப்பையா (84) தெரிவித்தார்

நாடு முழுவதும் பல்வேறு துறைகளில் சிறந்து விளங்கும் அறிஞர்களுக்கு மத்திய அரசு பத்மஸ்ரீ விருதுவழங்குகிறது. இதில் மூத்த தமிழ் அறிஞரும், பட்டிமன்ற நடுவருமான மதுரை பேராசிரியர் சாலமன் பாப்பையாவும் பத்மஸ்ரீ விருதுக்குதேர்வு செய்யப்பட்டுள்ளார். அவரை நேரில் சந்தித்து பலரும் பாராட்டு தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில், சாலமன் பாப்பையா ‘இந்து தமிழ் திசை’ க்குஅளித்த சிறப்புப் பேட்டி:

பத்ம விருதை நான் எதிர்பார்க்கவில்லை. விருது கிடைத்தது மகிழ்ச்சி. இதுவரை தமிழகமக்களும், இலங்கை, அமெரிக்காஉள்ளிட்ட அயல் மண்ணில் வாழும்மக்களும் என்னை நேசித்து எனக்கு பல விருதுகளை வழங்கினாலும்,நான் பிறந்த மண்ணில் மத்திய அரசு விருது வழங்குவது பெருமை.

இதுவரை நான் பெற்ற விருதுகளின் எண்ணிக்கை தெரியாது. ‘இயற்செல்வன்’ என்ற விருதைகருணாநிதி வழங்கினார். ‘கலைமாமணி’ விருது பெற்றிருக்கிறேன். தமிழகம் கடந்து நமது மக்கள் எங்கெல்லாம் இருக்கிறார்களோ, அங்கெல்லாம் விருதுகளை வழங்கி உள்ளனர்.

சமூகப் பிரச்சினை பற்றி விவாதம்

1961-ம் ஆண்டு முதல் பட்டிமன்றத்தில் பேசுகிறேன். 8 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பட்டிமன்றங்கள் இருக்கும் எனக் கருதுகிறேன். பட்டிமன்றத்தில் பேச என்னை அழைத்தஅழைப்பிதழ்களை சேகரித்து வைத்துள்ளேன். நகைச்சுவை மட்டுமின்றி மது, குடிப்பழக்கம் தவிர்த்தல், கணவன், மனைவி, தாய், மகன்உறவுகள் உள்ளிட்ட சமூகப் பிரச்சினைகள் பற்றியும் பட்டிமன்றத்தில் விவாதிக்கப்படுகின்றன.

குறிப்பாக மருத்துவம் சார்ந்தும் பேசுகிறோம். பட்டிமன்றம் முதலில் மதம் சார்ந்ததாக இருந்தது. நாளடைவில் பலவகை கலைகளையும்ஆய்வு செய்யும் மன்றமாக கம்பன்மாற்றினார். ஆரம்பத்தில் புலவர்கள் அதிகமாகப் பங்கேற்று பொதுமக்களை அடையும் வகையில், தங்களது புலமையைக் காத்திருந்தால், இன்னும் ஒருபடி பட்டிமன்றத்தின் தரம் உயர்ந்திருக்கும்.

பட்டிமன்றத்தில் நான் என்பது இருக்கக் கூடாது. அறிவுத் தேடல் இருக்க வேண்டும். எனது தேடல்தான் உண்மை என கர்வமாக இருக்காது, கூடுதல் தேடலுடன் பேசுவோரை மதிக்க வேண்டும்.

தற்போது, அனைத்து தொலைக்காட்சிகளிலும் பட்டிமன்றத்தை எதிர்பார்க்கும் சூழல் அதிகரித்துள்ளது. பட்டிமன்றப் பேச்சாளர்கள் உடனே நடுவராக வேண்டும் எனக் கருதுகின்றனர். இந்த விருதுமூலம், பட்டிமன்றம் மேலும் வளரும்என்ற நம்பிக்கை உள்ளது.

சாலமன் பாப்பையா 83 வயதைக் கடந்து விட்டாலும் இடையறாது எழுத்துப் பணியிலும் ஈடுபட்டு வருகிறார். புறநானூறு, திருக்குறள் உரைநடைக் கோவை, சிந்தனைக் கதிர்கள், பட்டுக்கோட்டை கல்யாண சுந்தரம் ஒரு பார்வை உள்ளிட்ட புத்தகங்களை அவர்எழுதி உள்ளார். தற்போது எழுதிவரும் அகநானூறு நூல் விரைவில் வெளிவர உள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x