

தேர்தல் பணிகள் குறித்து தேமுதிகபொறுப்பாளர்களுடன் பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் ஆலோசனை நடத்தினார். கூட்டணி குறித்த முக்கிய அறிவிப்பை கட்சித் தலைவர் விஜயகாந்த் ஓரிரு நாளில் வெளியிடுவார் என்று கூறப்படுகிறது.
தமிழகத்தில் விரைவில் நடக்க உள்ள சட்டப்பேரவை பொதுத் தேர்தலுக்கு அனைத்து கட்சிகளும் தயாராகி வருகின்றன. பல கட்சிகள் பிரச்சாரத்தையும் தொடங்கிவிட்டன. தேமுதிகவும் 234 சட்டப்பேரவை தொகுதிகளுக்கான பொறுப்பாளர்களை நியமித்து, தேர்தல் பணிகளை தொடங்கியுள்ளது. அதிமுக கூட்டணியில் தேமுதிக நீடித்தாலும்,இன்னும் உறுதிப்படுத்தப்படவில்லை. வரும் தேர்தலிலும் அதிமுக கூட்டணியில் தொடர நினைக்கும் தேமுதிக 41 இடங்களை கேட்டுள்ளதாகவும், அதிமுக தரப்பில் 15 இடங்கள் வரை மட்டுமே ஒதுக்க சம்மதிப்பதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. இதனால், இந்த கூட்டணி தொடருமா என தேமுதிக நிர்வாகிகள், தொண்டர்கள் மத்தியில் குழப்பம் நீடித்து வருகிறது.
இந்நிலையில், தேர்தலுக்காக தேமுதிக சார்பில் புதிதாக நியமிக்கப்பட்ட மண்டல பொறுப்பாளர்கள், மாவட்ட தேர்தல் பொறுப்பாளர்கள், சட்டப்பேரவை தொகுதி பொறுப்பாளர்கள் ஆலோசனை கூட்டம் சென்னை கோயம்பேட்டில் உள்ள தேமுதிக தலைமை அலுவலகத்தில் நேற்று நடந்தது. இதில், தேமுதிக பொருளாளர் பிரேமலதா, கொள்கை பரப்புசெயலாளர் அழகாபுரம் மோகன்ராஜ், துணை செயலாளர்கள்எல்.கே.சுதீஷ், பார்த்தசாரதி உட்பட 7 மண்டல பொறுப்பாளர்களும், 70-க்கும் மேற்பட்ட மாவட்ட பொறுப்பாளர்களும் கலந்துகொண்டு ஆலோசனை நடத்தினர். எத்தனை தொகுதிகள் கேட்பது, உரிய தொகுதிகள் கிடைக்காவிட்டால் எடுக்க வேண்டிய அடுத்தகட்ட நடவடிக்கைகள் குறித்து தீவிர ஆலோசனை நடத்தப்பட்டுள்ளது.
இதுபற்றி கேட்டபோது தேமுதிக மூத்த நிர்வாகிகள் கூறியதாவது:
கடந்த 2011 சட்டப்பேரவை தேர்தலில் அதிமுக கூட்டணியில் இடம்பெற்ற தேமுதிகவுக்கு 41 தொகுதிகள் ஒதுக்கப்பட்டன. அப்போது அதிமுக - தேமுதிக கூட்டணி மாபெரும் வெற்றி பெற்றது. எதிர்க்கட்சி அந்தஸ்தை தேமுதிக பெற்றது. அதுபோலவே, இந்த முறையும் 41 தொகுதிகள் கேட்டுள்ளோம். ஆனால், குறைந்த இடங்களையே ஒதுக்குவதாக அதிமுக தரப்பில் கூறப்படுகிறது.
தேர்தல் அறிவிப்புக்கு பிறகு சூழ்நிலை மாறலாம். சசிகலா வருகையால் தமிழக அரசியலில் மாற்றங்கள் நிகழக்கூடும். அந்த வகையில் தேமுதிக தனித்து போட்டியிடுவது அல்லது 3-வது அணி அமையவும் வாய்ப்பு இருக்கிறது.
மேலும், கடந்த தேர்தலின்போது முழு ஒத்துழைப்பு தராததால், பாமக இடம்பெறும் அணியில் இருக்க வேண்டாம் என்று சில நிர்வாகிகள் கருத்து தெரிவித்துள்ளனர். இதுபோல பல்வேறு மூத்த நிர்வாகிகளும் தங்கள் கருத்துகளை தெரிவித்துள்ளனர். தேமுதிக கூட்டணி தொடர்பான முக்கிய அறிவிப்பை தலைவர் விஜயகாந்த் ஓரிரு நாளில் வெளியிடுவார் என எதிர்பார்க்கிறோம்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.