Published : 31 Jan 2021 03:14 AM
Last Updated : 31 Jan 2021 03:14 AM

தைப்பூசத்தையொட்டி காளிப்பட்டியில் நாட்டு மாட்டுச் சந்தை: மாடுகள் வரத்து குறைந்ததால் களையிழந்தது

காளிப்பட்டி கந்தசாமி கோயில் திருவிழாவை முன்னிட்டு நடைபெற்ற பிரசித்தி பெற்ற நாட்டு மாட்டுச் சந்தை இந்த ஆண்டு களையிழந்து காணப்பட்டது.

நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு அடுத்த காளிப்பட்டியில் பிரசித்தி பெற்ற கந்தசாமி கோயில் அமைந்துள்ளது. கோயிலில் ஆண்டுதோறும் நடைபெறும் தைப்பூசத் தேரோட்டத்தை முன்னிட்டு நாட்டுமாட்டுச் சந்தை கூடுவது வழக்கம்.

காங்கேயம் காளைகள், மயிலக் காளை வகை, காராம் பசு, ஆலம்பாடி, வடக்கத்தி மற்றும் நாட்டுமாடுகள் என ஆயிரக்கணக்கான மாடுகள் விற்பனைக்கு கொண்டுவரப்படும்.

இவற்றை வாங்க தமிழகம் மட்டுமின்றி கர்நாடகா, ஆந்திரா என வெளி மாநிலங்களில் இருந்தும் வியாபாரிகள் வந்து செல்வது வழக்கம். மொத்தம் 4 நாட்கள் நடைபெறும் நாட்டு மாட்டுச் சந்தை, திருவிழா போல் காட்சியளிக்கும்.

இந்தாண்டு தைப்பூசத் தேர்த் திருவிழாவை முன்னிட்டு நாட்டுமாட்டுச் சந்தை காளிப்பட்டியில் 4 நாட்கள் நடந்தன. எனினும், கரோனா வைரஸ் தொற்று பரவல் காரணமாக விதிக்கப்பட்ட கட்டுப்பாடுகள், மாடுகளுக்கு பரவும் அம்மைநோய் உள்ளிட்ட காரணங்களால் சந்தை களையிழந்து காணப்பட்டது. சந்தைக்கு வந்த குறைந்த எண்ணிக்கையிலான மாடுகளுக்கும் உரிய விலை கிடைக்காததால் விற்பனை செய்யப்படவில்லை.

நாட்டு மாடு உரிமையாளர்கள் கூறுகையில், மாட்டின் பல் மற்றும் சுழி தரம் ஆகியவற்றைப் பொறுத்து விலை கிடைக்கும். ஆனால், இந்தாண்டு மாடுகள் வரத்து இல்லாததால் வியாபாரிகளும் வரவில்லை. மாட்டுச் சந்தையை ஒட்டி வைக்கப்பட்டிருந்த கடைகளும் வியாபாரம் இல்லாமல் களையிழந்துவிட்டன. ஆண்டுதோறும் நடைபெறும் வழக்கமான வியாபாரத்தோடு ஒப்பிட்டால் இந்தாண்டு 20 சதவீதம் கூட வியாபாரம் நடைபெறவில்லை, என்றனர்.

திருவிழாவில் சிறப்பு நீதிமன்றம்

காளிப்பட்டி கந்தசாமி கோயில் தைப்பூசத் திருவிழா காலங்களில் நடைபெறும் சிறு குற்றச் சம்பவங்களுக்கு உடனடி நீதி, தண்டனை வழங்க ஏதுவாக தேரோட்ட நாளில் இருந்து நான்கு நாட்கள் சிறப்பு நீதிமன்ற முகாம் நடத்தப்படுவது வழக்கம். ஆங்கிலேயர் காலந்தொட்டு சிறப்பு நீதிமன்றம் நடத்தப்படுகிறது. இந்தாண்டு தைப்பூச விழாவை முன்னிட்டு காளிப்பட்டி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் சிறப்பு நீதிமன்றம் நடத்தப்பட்டது.

திருச்செங்கோடு குற்றவியல் நடுவர் நீதிமன்ற நீதிபதி சவும்யா மேத்யூ, பல்வேறு வழக்குகளை விசாரித்தார். இந்த நீதிமன்றம் நேற்றுடன் நிறைவு பெற்றது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x