இஸ்ரேல் தூதரகம் முன்பு குண்டு வெடித்ததை தொடர்ந்து தமிழக விமான நிலையங்களில் 7 அடுக்கு பாதுகாப்பு

இஸ்ரேல் தூதரகம் முன்பு குண்டு வெடித்ததை தொடர்ந்து தமிழக விமான நிலையங்களில் 7 அடுக்கு பாதுகாப்பு
Updated on
1 min read

டெல்லியில் இஸ்ரேல் தூதரகம் முன்பு குண்டு வெடித்ததைத் தொடர்ந்து, தமிழகம் முழுவதும் விமான நிலையங்களில் 7 அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

டெல்லியில் உள்ள இஸ்ரேல் தூதரகம் முன்பு குண்டு வெடித்ததை தொடர்ந்து நாடு முழுவதும் பாதுகாப்பை பலப்படுத்த மத்திய அரசு எச்சரிக்கை விடுத்துள்ளது. அதைத் தொடர்ந்து தமிழகம் முழுவதும் மக்கள் அதிகமாக கூடுகின்ற விமான நிலையங்கள், ரயில் நிலையங்கள், முக்கிய பேருந்து நிலையங்கள், வழிபாட்டு தலங்களில் கூடுதல் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

தமிழகத்தின் அனைத்து விமான நிலையங்களின் பயணிகள் மற்றும் சரக்ககப் பகுதிகளில் நேற்று காலை முதல் கூடுதல் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. விமான நிலையங்களுக்குள் வரும் அனைத்து வாகனங்களும் கடுமையான சோதனைக்கு பின்பே உள்ளே அனுமதிக்கின்றன. பயணிகளுக்கு வழக்கமான சோதனைகளுடன் கூடுதல் சோதனைகள் நடத்தப்படுகின்றன. விமான நிலைய பாதுகாப்பு அதிகாரிகளின் வழக்கமான பரிசோதனை முடிந்து விமானத்துக்குள் ஏறும்போது, அந்தந்த விமான நிறுவனங்களின் பாதுகாப்பு அதிகாரிகள் பயணிகளின் உடைமைகளை மீண்டும் சோதனையிடுகின்றனர்.

விமான நிலையத்துக்குள் மத்திய தொழில் பாதுகாப்பு படையினர் 5 அடுக்கு பாதுகாப்பிலும்,விமான நிலையத்துக்கு வெளியே தமிழக போலீஸார் 2 அடுக்கு பாதுகாப்பிலும் ஈடுபட்டுள்ளனர். வெடிகுண்டு சோதனை நிபுணர்கள் கூடுதலாக பணி அமர்த்தப்பட்டுள்ளனர்.

மேலும் கூடுதல் கண்காணிப்பு கேமராக்களும் பொருத்தப்பட்டுள்ளன. விமானங்களுக்கு எரிபொருட்கள் நிரப்பும் இடங்கள், பார்சல்கள், பயணிகளின் உடமைகளை ஏற்றும் இடங்களில் கூடுதல் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. வரும் 6-ம் தேதி வரை இந்த பாதுகாப்பு ஏற்பாடுகள் தொடரும் என்று அறிவிக்கப்பட்டுள்ளன.

இதேபோல் சென்னை சென்ட்ரல் ரயில் நிலையம், எழும்பூர் ரயில் நிலையம், கோயம்பேடு பேருந்து நிலையம், முக்கிய வழிபாட்டுத் தலங்கள் மற்றும் பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களில் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in