Published : 31 Jan 2021 03:15 AM
Last Updated : 31 Jan 2021 03:15 AM

பாஜகவிடம் இருந்து திமுகவினர் ஒழுக்கம், பண்பை கற்றுக் கொள்ள வேண்டும்: தமிழக பாஜக தலைவர் எல்.முருகன் பேச்சு

தமிழக பாஜக சார்பில் சட்டப் பேரவைத் தேர்தல் பிரச்சாரப் பொதுக்கூட்டம் மதுரை பாண்டி கோயில் அருகே உள்ள அம்மா திடலில் நேற்று இரவு நடைபெற்றது. இதில் தமிழக பாஜக தலைவர் எல்.முருகன் பேசியதாவது:

தேர்தல் பரப்புரையை அன்னை மீனாட்சி ஆசியோடு மதுரையில் தொடங்கியுள்ளோம். பாஜகவிடம் இருந்து ஒழுக்கம், பண்பை திமுகவினர் கற்றுக் கொள்ள வேண்டும். ஓட்டுக்காக இரட்டை வேஷம் போடுபவர் மு.க.ஸ்டாலின். தற்போது இந்துக்களுக்குப் பாதுகாவலர் என்று போலியான வேஷம் போடுகிறார். நாம் வெற்றி வேல் யாத்திரையை திருத்தணியில் தொடங்கியதுபோல், ஸ்டாலினை யும் வேலை தூக்க வைத்தது நமக்கு கிடைத்த வெற்றி. திமுக தமிழுக்கும், தமிழருக்கும் விரோதமானது.

ஹைட்ரோ கார்பன், நீட் தேர்வு உட்பட பல்வேறு திட்டங்களில் காங்கிரஸ், திமுக கூட்டணி சேர்ந்து கையெழுத்திட்டனர். தற்போது அதை எதிர்த்து இரட்டை வேடம் போடுகின்றனர். இலங்கைத் தமிழர்களுக்கு தொடர்ந்து துரோகம் செய்தது திமுக, காங்கிரஸ். இலங்கையில் கொத்து கொத்தாக தமிழர்கள் கொல்லப்பட்டபோது வேடிக்கை பார்த்தவர் கருணாநிதி.

ஊழல் செய்ய வேண்டும், கட்டப் பஞ்சாயத்து, கமிஷன் வாங்க வேண்டும், ஏழை மக்களின் நிலங்களை அபகரிக்க வேண்டும் என்பதற்காக மீண்டும் ஆட்சிக்கு வர திமுகவினர் நினைக்கின்றனர். திமுகவை நிச்சயமாக தமிழக அரசியலைவிட்டு விரட்டும் நாள் மே மாதம் வரப்போகிறது.

வெற்றி வேல் யாத்திரை இரண்டு வெற்றியை பெற்றுத் தந்துள்ளது. ஒன்று மு.க.ஸ்டாலினை வேலை தூக்க வைத்தோம். அடுத்து தைப் பூசத்துக்கு அரசு விடுமுறை கொடுக்க வைத்ததாகும்.

சமூக நீதியை பாதுகாக்காத திமுகவுக்கு நாம் வரும் மே மாதத்தில் தக்க பாடம் புகட்ட வேண்டும். அதற்கு நமது கரத்தை வலுப்படுத்த வேண்டும்.

இவ்வாறு அவர் பேசினார்.

மேலும் பாஜக மேலிடப் பார்வையாளர் சி.டி.ரவி, பாஜக மூத்த தலைவர்கள் எல்.கணேசன், எச்.ராஜா, பொன்.ராதாகிருஷ்ணன், சி.பி.ராதாகிருஷ்ணன், நிர்வாகிகள் வானதி சீனிவாசன், நயினார் நாகேந்திரன், அண்ணாமலை, கரு.நாகராஜன், கருப்பு முருகானந்தம், செய்தி தொடர் பாளர் குஷ்பு, முன்னாள் எம்.பி. சசிகலாபுஷ்பா உள்ளிட்டோர் பேசினர்.

பொதுக்கூட்டத்துக்கு புறநகர் மாவட்டத் தலைவர் மகா சுசீந்திரன் தலைமை வகித்தார். பொதுச் செயலர் ஆர்.நிவாசன் வரவேற்றார்.

மதுரை மாநகர் மாவட்ட தலைவர் கே.கே.சீனிவாசன், துணைத் தலைவர்கள் ஹரிகரன், கராத்தே ராஜா, புறநகர் மாவட்ட செயலர் நாகராஜன், ஊடகப் பிரிவு தலைவர் தங்கவேல்சாமி உள்ளிட்ட பல்வேறு நிர்வாகிகள் கலந்து கொண்டனர். மாநில துணைத் தலைவர் மகாலெட்சுமி நன்றி கூறினார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x