

விளாத்திகுளம் அருகே வவ்வால்தொத்தி கிராமத்தில் அறுவடை செய்யாமல் நிலத்தில் கைவிடப்பட்ட வெள்ளைச்சோளப் பயிரில் மேய்ச்சலுக்கு சென்ற 101 ஆடுகள் உயிரிழந்தன.
தொடர் மழை காரணமாக கோவில்பட்டி கோட்டத்தில் உள்ளசுமார் ஒரு லட்சம் ஹெக்டேர் மானாவாரி நிலங்களில் பயிரிடப்பட்ட பயிர்கள் முற்றிலும் சேதமடைந்தன. பயிர்களை அறுவடை செய்யாமல் பெரும்பாலான விவசாயிகள் அப்படியே விட்டுள்ளனர். விளாத்திகுளம் அருகே வவ்வால்தொத்தி ஊராட்சியில் சுமார் 500 ஏக்கர் தோட்டப்பாசனம் உள்ளது. இங்கு, அறுவடைக்கு தயாராக இருந்த வெள்ளைச்சோளம், மக்காச்சோளம், உளுந்து, பாசி, சின்ன வெங்காயம் உள்ளிட்ட பல்வேறு பயிர்கள், ஜனவரியில் பெய்த மழையால் பாதிக்கப்பட்டன.
விவசாயிகள் சிலர், பயிர்களை நிலத்திலேயே கைவிட்டுவிட்டனர். இதனால் அப்பயிர்களை கால்நடைகள் மேய்ந்து வந்தன. நேற்று முன்தினம் வவ்வால்தொத்தி கிராமத்துக்கு மேற்கே அயன்வடமலாபுரம் கிராம எல்லையில் வெள்ளைச்சோளம் பயிரில் சிலர்ஆடுகளை மேயவிட்டனர். வெள்ளைச்சோளப் பயிர்களை ஆடுகள் தின்றன.
இரவு வீடுகளுக்கு திரும்பியதும் தொழுவத்தில் தண்ணீர் குடித்த ஆடுகளுக்கு வயிறு உப்பிசமாகி, மூச்சுவிட திணறின. சில மணி நேரங்களிலேயே 100-க்கும் மேற்பட்ட ஆடுகள் உயிரிழந்தன. மீதமுள்ள ஆடுகளை காப்பாற்ற அதனை வளர்ப்போர் தங்களுக்கு தெரிந்த கை வைத்தியத்தை செய்தனர்.
வவ்வால்தொத்தியை சேர்ந்த மாயாண்டி மகன் முருகன் வளர்த்த20 ஆடுகள், ஆறுமுகம் காளிமுத்துவுக்கு சொந்தமான 25 ஆடுகள், ஆறுமுகம் மகன் பரமசிவம் வளர்த்த25 ஆடுகள், சுப்பையா மகன் கோபாலகிருஷ்ணன் வளர்த்த 31 ஆடுகள் என மொத்தம் 101 ஆடுகள் உயிரிழந்தன.
தகவல் அறிந்து நேற்று காலை கால்நடைத் துறை உதவி அதிகாரிகள் மற்றும் மருத்துவர்கள் நேரில்வந்து, தொழுவத்தில் அடைக்கப்பட்டிருந்த மீதமுள்ள ஆடுகளுக்கு சிகிச்சை அளித்தனர். இறந்த ஆடுகளுக்கு உடற்கூராய்வு செய்த னர். அதன் மாதிரிகளை ஆய்வு செய்தவற்காக எடுத்துச்சென்றனர்.
மேலும், உடனடியாக வவ்வால்தொத்தி மற்றும் சுற்றுவட்டார கிராமங்களில் விழிப்புணர்வு முகாம்கள் நடத்த ஏற்பாடு செய்தனர். அதேபோல், அறுவடை செய்யாமல் விடப்பட்ட பயிர்கள் உள்ள நிலத்தில் கால்நடைகளை மேய்ச்சலுக்கு விட வேண்டாம் என விவசாயிகளிடம் அறிவுறுத்தி உள்ளனர்.
கரிசல் பூமி விவசாயிகள் சங்கதலைவர் அ.வரதராஜன் கூறும்போது, “மழை காரணமாக வெள்ளைச்சோளம் கதிரிலேயே கெட்டுபோய்விட்டது. கோழித் தீவனத்துக்கு அனுப்பப்பட்ட வெள்ளைச்சோள கதிர்களை திரும்ப அனுப்பிவிட்டனர். இங்குள்ள நிலத்தில்அறுவடை செய்யாமல் விடப்பட்ட வெள்ளைச்சோள கதிர்களை தின்ற ஆடுகளுக்கு வயிற்று உபாதை ஏற்பட்டு இறந்துள்ளன. எனவே, இதுகுறித்து கால்நடை மற்றும் வருவாய்த்துறை சார்பில் விழிப்புணர்வு செய்ய வேண்டும். இறந்த ஆடுகளுக்கு இயற்கை பேரிடர் நிவாரண நிதியில் இருந்து நிவாரண தொகை வழங்க வேண்டும், என்றார்.