வெள்ளம் பாதித்த பகுதிகளில் முறைகேடில்லாமல் நிவாரணப் பணிகள் மேற்கொள்ள விஜயகாந்த் வேண்டுகோள்

வெள்ளம் பாதித்த பகுதிகளில் முறைகேடில்லாமல் நிவாரணப் பணிகள் மேற்கொள்ள விஜயகாந்த் வேண்டுகோள்
Updated on
1 min read

தமிழகத்தில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் முறைகேடு இல்லாமல் நிவாரணப் பணிகள் மேற்கொள்ளவும், நிவாரண உதவிகள் கிடைக்கவும் அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என தேமுதிக தலைவர் விஜயகாந்த் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

இதுகுறித்து இன்று அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், ''தமிழகத்தில் உள்ள ஏரி, குளம், ஓடை மற்றும் அவற்றுக்கு நீர் வரும் வழிகள் ஆக்கிரமிக்கப்படுவது, ஆறுகளில் வரம்பின்றி மணல் அள்ளுவது, மரங்களை வெட்டுவது உள்ளிட்ட காரணங்களால் பேரழிவு தொடர்கிறது.

ஆந்திராவில் 5 மாதத்தில் 174 கி.மீ தூரத்துக்கு கால்வாய் அமைத்து கிருஷ்ணா-கோதாவரி நதி நீர் இணைப்பை செய்து நீர் வளத்தில் தன்னிறைவு அடைந்துள்ளனர். தமிழகத்தில் மழை நீரை சேமிப்பதற்குரிய கட்டமைப்பையும், நதி நீர் இணைப்பையும் செய்திருந்தால் தற்போது பெய்த மழை நீர் கடலில் சென்று கலப்பதை தவிர்த்திருக்கலாம்.

பாலாற்றில் வெள்ளம் கரைபுரண்டு ஓடியும், மதுராந்தகம், செம்பரம்பாக்கம், பூண்டி ஏரிகள் நிரம்பி வழிந்தும் வெளியேறிய தண்ணீர் வீணாகியது. அணைகள் கட்டி, ஏரிகளை தூர் வாரி ஆழப்படுத்தியிருந்தால் நீரை சேமித்து வெள்ள சேதங்களை தவிர்த்திருக்கலாம். இந்த நீரை விவசாயத்துக்கும், குடிநீருக்காகவும் பயன்படுத்தியிருக்கலாம். தண்ணீருக்காக தமிழகம் அண்டை மாநிலங்களை சார்ந்திருக்கும் நிலை ஏற்பட்டிருக்காது.

காமராஜர் ஆட்சிக்குப் பிறகு தமிழகத்தில் பெரிய அணைகள், நீர் ஆதாரங்கள் உருவாக்கப்படவில்லை. தமிழக அரசு இதை செய்யாமல் வாக்குகளை பெறுவதற்காக இலவசங்களை கொடுத்து மக்களை ஏமாற்றி வருகிறது.

கடலூர் மாவட்டத்தில் மழை, வெள்ள சேதத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு வழங்கப்படும் நிவாரணங்கள் முறையாக போய்ச் சேரவில்லையென்றும், லஞ்சமும், ஊழலும் தலை விரித்தாடுவதாகவும், நிவாரணத் தொகையில் 25 சதவிகிதம் வரை கமிஷனாக பெற்ற பிறகே நிவாரணத் தொகை வழங்கப்படுவதாகவும் பொதுமக்கள் பகிரங்கமாக குற்றம் சாட்டுகின்றனர்.

எனவே, அதிமுக அரசு கடும் நடவடிக்கை எடுத்து எவ்வித முறைகேடும் இல்லாமல், நிவாரண பணிகளும், உதவிகளும் வழங்கவேண்டும்'' என்று விஜயகாந்த் கூறியுள்ளார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in