

திருநெல்வேலி மாவட்டத்தில் நடப்பு பிசான பருவத்தில் இலக்கை தாண்டி நெல் சாகுபடி செய்யப்பட்டுள்ளதாகவும், தொடர் மழை பெய்தும் 40 குளங்கள் வறண்டு காணப்படுவதாகவும் வேளாண்மைத்துறை புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன.
திருநெல்வேலி மாவட்டத்தில் ஆண்டு தோறும் இயல்பான மழையளவு 814.80 மி.மீ. ஆகும். கடந்த ஆண்டு டிசம்பர் வரையில் 716.92 மி.மீ. மழை பெய்திருந்தது. இது ஆண்டு வளமையான அளவைவிட 12 சதவீதம் குறைவாகும்.
ஜனவரி மாத இயல்பான மழையளவு 50.20 மி.மீ. இம்மாதம் இதுவரை 349.91 மி.மீ. மழை கிடைக்கப் பெற்றுள்ளது. இது இயல்பைவிட 697 சதவீதம் அதிகமாகும். தற்போது அணைகளில் 97.05 சதவீதம் நீர் இருப்பு உள்ளது. கடந்த ஆண்டு இதே காலத்தில் 79.20 சதவீதம் நீர் இருப்பு இருந்தது.
மாவட்டத்தில் 740 கால்வரத்து குளங்கள், 550 மானாவாரி குளங்கள் என மொத்தம் 1,290 குளங்கள் உள்ளன. இதில் 104 குளங்களில் 3 மாதத்துக்கும், 626 குளங்களில் 2 மாதத்துக்கும், 520 குளங்களில் 1 மாதத்துக்கும் பயன்படுத்தும் வகையில் தண்ணீர் இருப்பு உள்ளது. மாவட்டத்தில் இம்மாத தொடக்கத்தில் தொடர் மழை பெய்து அணைகள் நிரம்பி, தாமிரபரணி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டிருந்த நிலையிலும் 12 கால்வரத்து குளங்கள், 28 மானாவாரி குளங்கள் என மொத்தம் 40 குளங்கள் வறண்டுள்ளதாக வேளாண் மைத்துறை புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன.
இலக்கை தாண்டி நெல் சாகுபடி
மாவட்டத்தில் நடப்பு பிசான பருவத்தில் 37 ஆயிரம் ஹெக் டேரில் நெல் சாகுபடி செய்ய இலக்கு நிர்ணயிக்கப்பட்டிருந்தது. போதிய மழை பெய்து மாவட்டம் முழுவதும் நீர் நிலைகளில் திருப்திகரமாக தண்ணீர் இருப்பதையடுத்து பிசான நெல் சாகுபடியில் விவசாயிகள் ஆர்வம் காட்டியதால் இலக்கை தாண்டி 39,800 ஹெக்டேரில் தற்போது நெல் சாகுபடி செய்யப்பட்டுள்ளது.
கடந்த ஆண்டு இதே காலத்தில் 34,845 ஹெக்டேரில் நெல் சாகுபடி செய்யப்பட்டிருந்தது.
இதுபோல் பயறுவகை பயிர்கள் நிர்ணயித்த இலக்கான 5,700 ஹெக்டேரைத் தாண்டி 7,510 ஹெக்டேரில் சாகுபடி செய்யப்பட்டுள்ளது.
சிறுதானியங்கள் 595 ஹெக்டேரி லும் (இலக்கு 1,900 ஹெக்டேர்), பருத்தி 653 ஹெக்டேரிலும் (இலக்கு 800 ஹெக்டேர்), எண்ணெய் வித்து பயிர்கள் 459 ஹெக்டேரிலும் (இலக்கு 1,300 ஹெக்டேர்) சாகுபடி செய்யப்பட்டுள்ளது.
70 டிஎம்சி தண்ணீர் வீண்
திருநெல்வேலி, தூத்துக்குடி மாவட்டங்களில் சமீபத்தில் பெய்த மழையால் ஆறுகளில் பெருக்கெடுத்து கடலில் சென்று வீணான தண்ணீரின் அளவு 70 டிஎம்சி இருக்கும் என்று தெரியவந்துள்ளது. வெள்ளம் ஆர்ப்பரித்து பாய்ந்ததால் தாமிரபரணி ஆற்றின் நடுவே மணல் திட்டுகளிலும், கரையோரங் களிலும் நின்றிருந்த மரங்கள், செடிகள் அடித்துச் செல்லப் பட்டு, ஆற்றங் கரைகளில் ஆங்காங்கே தேங்கி கிடக்கின்றன. இவற்றை அப்புறப்படுத்த அரசும், தன்னார்வலர்களும், அந்தந்த பகுதி மக்களும் முன்வந்தால் ஆற்றங்கரை சுத்தமாகும் என்று சமூக ஆர்வலர்கள் தெரிவிக்கிறார்கள்.