

கரோனா தடுப்பூசியை அனைவரும் போட்டுக்கொள்ளவேண்டும், கரோனா இல்லாத இந்தியாவை உருவாக்க நாம் அனைவரும் இணைந்து பணியாற்றவேண்டும், என தெலங்கானா ஆளுநர் தமிழிசைசவுந்திரராஜன் தெரிவித்தார்.
தைப்பூசவிழாவை முன்னிட்டு திண்டுக்கல் மாவட்டம் பழநியிலுள்ள தண்டாயுதபாணிசுவாமி மலைக்கோயிலிலுக்கு சுவாமிதரிசனம் செய்ய தெலங்கானா ஆளுநர் தமிழிசைசவுந்திரராஜன் குடும்பத்தினருடன் நேற்று இரவு வருகைதந்தார்.
பழநி கோயில் இணைஆணையர் கிராந்திகுமார்பாடி பூங்கொத்து கொடுத்து ஆளுனரை வரவேற்றார்.
அவரது கணவர் சவுந்திரராஜன் மொட்டை அடித்து நேர்த்திக்கடன் செலுத்தினார். தொடர்ந்து குடும்பத்தினருடன் ரோப்கார் மூலம் மலைக்கோயில் சென்று சுவாமிதரிசனம் செய்தார். அங்கு பூரணகும்ப மரியாதை அளிக்கப்பட்டது. தரிசனம் முடித்துவிட்டு செய்தியாளர்களை சந்தித்த தமிழிசை சவுந்திரராஜன் கூறியதாவது:
கரோனா இல்லாத இந்தியாவை உருவாக்க நாம் அனைவரும் இணைந்து பணியாற்றவேண்டும். நமது விஞ்ஞானிகள் தயாரித்துள்ள தடுப்பூசிகளை தற்போது உலக நாடுகள் அனைத்தும் பாராட்டிவருகின்றன.
150 உலக நாடுகளுக்கு நாம் தடுப்பூசியை ஏற்றுமதி செய்துவருகிறோம். பிரதமர் அளித்த ஊக்கமும், விஞ்ஞானிகளின் ஆற்றலுமே இதற்கு காரணம்.
கரோனா தடுப்பூசியை அனைவரும் போட்டுக்கொள்ளவேண்டும். மக்கள் அடிக்கடி கைகளை சுத்தம் செய்தும், முகக்கவசம் அணிவதையும் தொடரவேண்டும். எதிர்பாரதவிதமாக தமிழக முதல்வர் பழனிச்சாமியை சந்திக்க நேர்ந்தபோது தைப்பூசவிழாவிற்கு பொதுவிடுமுறை அறிவித்ததற்கு நன்றி தெரிவித்தேன்.
இவ்வாறு அவர் கூறினார்.
தெலங்கானா ஆளுநர் தமிழிசை சவுந்திரராஜன் பழநி வருகையால் மூன்றடுக்கு பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன.