‘உங்கள் தொகுதியில் ஸ்டாலின்’ நிகழ்ச்சியால் இரவு நேரத்தில் வங்கிக் கணக்கிற்கு வந்த ரூ.2 லட்சம் அரசின் நிவாரண உதவி: திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தகவல்

ராணிப்பேட்டை மாவட்டம் பனப்பாக்கத்தில் நடைபெற்ற ‘உங்கள் தொகுதியில் ஸ்டாலின்’ நிகழ்ச்சியில் பேசும் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின்.
ராணிப்பேட்டை மாவட்டம் பனப்பாக்கத்தில் நடைபெற்ற ‘உங்கள் தொகுதியில் ஸ்டாலின்’ நிகழ்ச்சியில் பேசும் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின்.
Updated on
2 min read

ஆரணியில் நடைபெற்ற ‘உங்கள் தொகுதியில் ஸ்டாலின்’ நிகழ்ச்சியால் இரண்டு மாதங்களாக கிடைத்தாத அரசின் நிவாரண உதவி, பாதிக்கப்பட்டவரின் வங்கிக் கணக்கிற்கு இரவு நேரத்தில் அனுப்பியுள்ளனர் என்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்தார்.

ராணிப்பேட்டை மாவட்டம் சோளிங்கர் சட்டப்பேரவை தொகுதிக்கு உட்பட்ட பனப்பாக்கத்தில் திமுக சார்பில் ‘உங்கள் தொகுதியில் ஸ்டாலின்’ என்ற தேர்தல் பிரச்சார கூட்டம் இன்று (ஜன.30)மாலை நடைபெற்றது. இதில்,ராணிப்பேட்ட மாவட்ட செயலாளர் ஆர்.காந்தி வரவேற்றுப் பேசினார். திமுக பொதுச் செயலாளர் துரைமுருகன், நாடாளுமன்ற உறுப்பினர் ஜெகத்ரட்சகன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

இதில், பொதுமக்களிடம் இருந்து கோரிக்கை மனுக்களை பெற்றுக்கொண்ட திமுக தலைவர் ஸ்டாலின் பேசும்போது, ‘‘திமுக தனி மனித இயக்கம் அல்ல. திமுக தமிழர்களின் இயக்கம், தமிழர்களுக்கான இயக்கம். தமிழினத்துக்கான, தமிழர்களின் மேன்மைக்கான, தமிழர்களின் வளர்ச்சிக்கான இயக்கம்.

தமிழர்களை மானமுள்ள, மொழிப்பற்றும், இனப்பற்றும் உள்ளவர்களாக வளர்க்க நினைத்தார் பேரறிஞர் அண்ணா. இந்தியாவிலே வளர்ச்சி பெற்ற மாநிலமாக தன்னிறைவு பெற்ற மாநிலமாக உருவாக்க பாடுபட்டார் கருணாநிதி.

கல்வியில் சிறந்த தமிழ்நாட்டை நீட் தேர்வில் தற்கொலை செய்துகொள்ளும் மாநிலமாக அதிமுக அரசு மாற்றிவிட்டது.தொழில் துறையில் முன்னேறிய தமிழ்நாட்டை 14-வது இடத்துக்கு கொண்டு சென்றுவிட்டனர். நிம்மதியாக இருந்த விவசாயிகளை விரட்டும் அரசாக மாறிவிட்டது. வேலையில்லாதவர்கள் அதிகம் வாழும் மாநிலமாக இந்த அரசு மாற்றிவிட்டது. கழகம் உருவாக்கிய தமிழகத்தை உருக்குலைக்க ஒருகாலும் நாம் விடமாட்டோம்.

நான் சென்னை மாநகராட்சி மேயராக இருந்தபோது முதல் முறையாக மழலையர் பள்ளிகளை தொடங்கினேன். தனியார் பள்ளிக்கு இணையாக மாநகராட்சி பள்ளிகளை தரம் உயர்த்தினேன்.அடுத்து திமுக ஆட்சிதான் அமையும். உங்கள் கவலைகள் யாவும் தீரும்’’ என்றார்.

முன்னதாக நிகழ்ச்சியில் கோரிக்கை வைத்தவர்கள் மத்தியில் மு.க.ஸ்டாலின் பேசும்போது, ‘‘தமிழ்நாட்டில் ஊழல் பட்டியலில் எடப்பாடி முதல் அமைச்சர்கள் வரை கணக்கெடுத்தால் யார் அதிகம் லஞ்சம் வாங்கியது என்று பார்த்தால் உள்ளாட்சி துறை அமைச்சர்தான் முதலில் உள்ளார்.கரோனா பரிசோதனை கருவியிலும் கொள்ளையடித்தனர். எம்எல்ஏ அமைச்சராக இருந்தாலும் சிறைக்கு செல்லும் நிலை வரும். ஒட்டுமொத்த தமிழ்நாடு முழுவதும் மாசு ஏற்படுத்தும் பிரச்சினைகளுக்கு திமுக துணை நிற்காது என்ற உறுதியை அளிக்கிறேன்’’ என்றார்.

இரவில் கிடைத்த ரூ.2 லட்சம் நிவாரணம்:

‘‘ஆரணியில் வெள்ளிக்கிழமை மாலை நடைபெற்ற ‘உங்கள் தொகுதியில் ஸ்டாலின்’ நிகழ்ச்சியில் எழிலரசி என்பவர் இரண்டு மாதங்களுக்கு முன்பு பக்கத்து வீட்டில் ஏற்பட்ட சிலிண்டர் விபத்தில் தனது வீட்டின் சுவர் இடிந்து விழுந்ததில் தனது தாய் இறந்துவிட்டார் என்று தெரிவித்தார். இப்போது, தானும் தனது சகோதரரும் நடுத்தெருவில் இருக்கிறோம்.

கடந்த ஆண்டு நவம்பர் மாதம் தமிழக அரசு சார்பில் அறிவிக்கப்பட்ட ரூ.2 லட்சம் நிவாரண உதவி கிடைக்கவில்லை. பல இடங்களில் மனு அளித்தும் பதில் இல்லை என்று தெரிவித்திருந்தார். எழிலரசியின் தந்தை ராணுவத்தில் பணியாற்றியவர் என்பதால் டெல்லியில் இருந்த நாடாளுமன்ற உறுப்பினர் டி.ஆர்.பாலு மூலமாக ராணுவ அமைச்சருக்கு கோரிக்கை மனு அளிக்கப்பட்டது.

இந்த நிகழ்ச்சியை நம்மைவிட அதிமுகவினர் அதிகம் பார்க்கின்றனர். அதுவும் அமைச்சர்கள் பார்த்துவிடுகிறார்கள். எழிலரசியின் புகாரை கேள்விபட்டதும் அவரை அழைத்து கூட நிவாரணம் வழங்காமல் இரவோடு இரவாக அவரது வங்கிக் கணக்கு ரூ.2 லட்சம் பணத்தை அனுப்பியுள்ளனர். இதுதான் இந்த நிகழ்ச்சிக்கு கிடைத்த வெற்றிக்கு ஆதாரம்’’ என்று ஸ்டாலின் தெரிவித்தார்.

முன்னதாக, ராணிப்பேட்டை மாவட்டத்தில் கரோனா ஊரடங்கு காலத்தில் சமூக சேவையாற்றியவர்கள், விளையாட்டுப் போட்டிகளில் சிறப்பிடம் பிடித்த மாணவர்களுக்கு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் நினைவு பரிசுகளை வழங்கி பாராட்டினார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in