

தலைமைச் செயலர் க.சண்முகம் நாளையுடன் ஓய்வுப்பெறுகிறார். அவரது பதவி ஜூலை 2020-ன் முடிவடைய இருந்த நிலையில் கரோனா சூழல் காரணமாக அவரது பதவி இரண்டு முறை நீட்டிக்கப்பட்ட நிலையில் நாளையுடன் அவர் ஓய்வுப்பெறுகிறார். 47-வது தலைமைச் செயலராக ராஜிவ் ரஞ்சன் பதவி ஏற்க வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
தமிழகத்தின் 46-வது தலைமைச் செயலாளராக பதவி வகிக்கும் சண்முகம் கடந்த 2019-ம் ஆண்டு ஜூன் மாதம் 29-ம் தேதி நியமிக்கப்பட்டார். சண்முகம் 1960-ம் ஆண்டு ஜூலை மாதம் 7-ம் தேதி சேலம் மாவட்டத்தில் உள்ள வாழப்பாடியில் பிறந்தவர்.
இவர் கோயம்புத்தூரில் உள்ள தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைகழகத்தில் முதுநிலை வேளாண் பட்டப்படிப்பு முடித்தார். பின்னர் சிவில் தேர்வு எழுதி இந்திய ஆட்சிப் பணி தேர்வில் வென்று 1985-ம் ஆண்டு தமிழக கேடர் ஐஏஎஸ் அதிகாரியாக தேர்வானார்.
பயிற்சி சப் கலெக்டராக தஞ்சையில் பணியாற்றிய அவர், நெல்லை சேரன்மாதேவி சப் கலெக்டராகவும் பணியாற்றினார். பின்னர் வணிவரித்துறை துணை ஆணையர், பட்டுவளர்ச்சி இயக்குனர் உள்ளிட்ட பொறுப்புகளை வகித்தார். 1995 முதல் 1998 வரை சிவகங்கை, புதுக்கோட்டை மாவட்டங்களில் கலெக்டராக பணியாற்றியானார்.
2001-ம் ஆண்டு ஊரக வளர்ச்சித் துறை இயக்குனராக மாற்றப்பட்டார். பின்னர் மத்திய நிதித்துறை இணையமைச்சர் எஸ்எஸ் பழனிமாணிக்கத்தின் கீழ் நிதித்துறை செயலாளராக அயல்பணியில் சில ஆண்டுகள் பணியாற்றினார். 2010-ம் ஆண்டு திமுக ஆட்சியில் நிதித்துறை செயலாளராக நியமிக்கப்பட்டார்.
அதிமுக ஆட்சியிலும் நிதித்துறை செயலாளராக தொடர்ந்தார். தொடர்ந்து நிதித்துறைச் செயலராக தொடர்ந்த அவர் கிரிஜா வைத்தியநாதன் ஓய்வுக்குப்பின் தலைமைச் செயலராக பதவியேற்றார். அவரது பதவிக்காலம் 2020 ஜூலை.31-டன் முடிவடைந்தது.
ஜூலை 31- ல் அவர் ஓய்வு பெற்றிருக்கவேண்டும். ஆனால் கரோனா தொற்றுப் பிரச்சினையில் டாஸ்க் அமைப்பின் தலைமைப் பொறுப்பை ஏற்றுள்ள சண்முகத்தின் நீண்ட கால அனுபவம் காரணமாக பல்வேறு ஆய்வுக்கூட்டங்களை வழி நடத்தி வருகிறார்.
கரோனா தொற்று பேரிடர் கால பிரச்சினையை எதிர்கொள்ளும் வகையில் தலைமைச் செயலர் சண்முகத்தின் அனுபவம் தேவைப்படுவதாக தமிழக அரசு கருதியதன் பேரில் அவரது பணியை நீட்டிக்க வேண்டும் என தமிழக அரசு வைத்த கோரிக்கையின் அடிப்படியில் மத்திய அரசு அவரது பதவி காலத்தை 2 முறை நீட்டித்து உத்தரவிட்டது.
இதன்படி ஜனவரி.31 அன்று (நாளை) அவர் ஓய்வு பெறுகிறார். புதிய தலைமைச் செயலராக மூத்த ஐஏஎஸ் அதிகாரியான மீனாட்சி ராஜகோபால் 1984-ம் ஆண்டு பேட்சை சேர்ந்தவர் கடந்த முறையே பரிசீலிக்கப்பட்டார். ஆனாலும் 1985-ம் பேட்ச் அதிகாரி சண்முகத்தை தலைமைச் செயலராக அரசு நியமித்தது. 1985-ம் ஆண்டு பேட்ச் அதிகாரிகளில் முதலில் இருந்த ராஜீவ் ரஞ்சன் அயல்பணியில் இருந்த காரணத்தால் அதற்கு அடுத்த இடத்திலிருந்த நிதித்துறையில் மிகுந்த அனுபவம் பெற்றிருந்த சண்முகம் தலைமைச் செயலர் ஆனார்.
இந்நிலையில் நாளையுடன் அவர் ஓய்வு பெறும் நிலையில் மீண்டும் 1984-ம் ஆண்டு பேட்ச் அதிகாரி மீனாட்சி ராஜகோபால் முன்னணியில் இருந்தாலும், அவர் ஓய்வு பெற 2 மாதங்களே இடையில் உள்ளதால் சீனியர் ஐஏஸ் அதிகாரியான 1985-ம் ஆண்டு பேட்ச் அதிகாரி ராஜீவ் ரஞ்சன் நியமிக்கப்படலாம் என்ற பேச்சு அடிபட்டது.
அதற்கு ஏற்றாற்போல் மத்திய அரசுப்பணியிலிருந்து அவர் விடுவிக்கப்பட்டு தமிழகம் அனுப்பி வைக்கப்பட்டுள்ளதால் ராஜீவ் ரஞ்சன் தலைமைச் செயலாளராக வருவதற்கே வாய்ப்பு அதிகம் என்று கூறப்படுகிறது. ராஜீவ் ரஞ்சன் 1985-ம் ஆண்டு பேட்ச் அதிகாரி, ஜார்கண்ட் மாநிலத்தைச் சேர்ந்த இவர் பிஎஸ்சி மற்றும் அறிசார் சொத்துரிமை பிரிவில் டாக்டர் பட்டம் வாங்கியுள்ளார். இவர் இந்த ஆண்டு செப்டம்பர் மாதத்தில் ஓய்வு பெறுகிறார்.
ராஜீவ் ரஞ்சனுக்கு அடுத்து 1985-ம் ஆண்டு பேட்ச் அதிகாரியாக ஒரே ஒருவர் உள்ளார், அவர் ஜக்மோகன் சிங் ராஜு ஆவார். இவருடன் 1985-ம் ஆண்டு பேட்ச் முடிகிறது. அடுத்து 1986-ம் ஆண்டு பேட்ச் அதிகாரியாக ஹன்ஸ் ராஜ் வர்மா உள்ளார்.