4-வது நாளாக வெள்ளம் வடியவில்லை: தொற்று நோய் பரவும் அபாய நிலையில் தூத்துக்குடி

4-வது நாளாக வெள்ளம் வடியவில்லை: தொற்று நோய் பரவும் அபாய நிலையில் தூத்துக்குடி
Updated on
1 min read

தூத்துக்குடியில் பல இடங்களில் குடியிருப்புகளை 22-ம் தேதி முதல் 4-வது நாளாக மழை வெள்ளம் சூழ்ந்து நிற்பதால் தொற்று நோய்கள் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

தூத்துக்குடி மாவட்டத்தில் கடந்த வாரம் பெய்த பலத்த மழை காரணமாக 22-ம் தேதி முத்தம்மாள் காலனி, ஆதிபராசக்தி நகர், தாமோதரன் நகர், ஐயப்பன் நகர், அந்தோணியார்புரம், அத்திமரப்பட்டி, காலாங்கரை, வீரநாயக்கன்தட்டு, முத்தையா புரம், முள்ளக்காடு, முடுக்குகாடு, திருவிக நகர், இந்திரா நகர், தபால் தந்தி காலனி பகுதிகளில் குடியிருப்புகளை வெள்ளம் சூழ்ந்தது.

வெள்ளம் முழுமையாக வடிவதற்குள் கடந்த 22-ம் தேதி இரவு பெய்த பலத்த மழையால் 23-ம் தேதி அதிகாலையில் காட்டாற்று வெள்ளம் ஏற்பட்டது. இதனால் இந்த பகுதிகள் மீண்டும் வெள்ளத்தில் தத்தளித்தன.

காட்டாற்று வெள்ளம் நின்று 2 நாட்களாகியும் பல பகுதிகளில் வெள்ளம் வடியவில்லை. புறநகர் பகுதிகளில் தேங்கிய மழை வெள்ளம் அனைத்தும் நகர்ப்பகுதிக்குள் புகுந்தது. இதனால் 3-ம் மைல், பசும்பொன் நகர், முருகேசன் நகர், திரவியரத்தினம் நகர், மடத்தூர், ராஜீவ் நகர், சாந்தி நிகிலேசன் நகர், புஷ்பா நகர், கதிர்வேல் நகர், கணேஷ்நகர், மில்லர்புரம், அன்னை தெரசா நகர், ராஜகோபால் நகர், பால்பாண்டி நகர், அண்ணாநகர், குறிஞ்சி நகர், ஸ்டேட் பேங்க் காலனி பகுதிகளில் வீடுகளை சூழ்ந்து இடுப்பளவுக்கு மேல் தண்ணீர் தேங்கியுள்ளது.

நாய், பன்றி போன்றவை இறந்து மிதப்பதாலும், குப்பைக் கூழங்கள், சாக்கடை கலந்திருப்பதாலும் பல இடங்களில் துர்நாற்றம் வீசுகிறது. இதனால் தொற்று நோய்கள் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

இடுப்பளவுக்கு மேல் நிற்கும் தண்ணீரை கடந்து வெளியே வரமுடியாமல் மக்கள் வீடுகளுக்கு உள்ளேயே முடங்கி கிடக்கின்றனர். சிறப்பு நிவாரண முகாம்களில் உள்ள மக்களும் வீடுகளுக்கு திரும்ப முடியவில்லை.

தூத்துக்குடி மாநகரம் பூகோள ரீதியாக கடல் மட்டத்தைவிட சற்று தாழ்வாக இருப்பதால் மழைநீர் வேகமாக வடிந்து கடலுக்கு செல்ல முடியாமல் ஆங்காங்கே தேங்கி நிற்கிறது. மழை நீரை வெளியேற்றும் பணியில் அதிகாரிகள் ஈடுபட்டுள்ளனர்.

தண்ணீர் முழுமையாக வடிய மேலும் சில நாட்கள் ஆகும். மீண்டும் மழை பெய்தால் நிலைமை இதைவிட மோசமாகிவிடும் என, அதிகாரிகள் தெரிவித்தனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in