Published : 30 Jan 2021 01:51 PM
Last Updated : 30 Jan 2021 01:51 PM

திமுக ஆட்சி அமைந்ததும் மக்களின் கோரிக்கைகளை நிறைவேற்ற தனித்துறை: வேலூரில் ஸ்டாலின் உறுதி

திமுக ஆட்சி அமைந்ததும் பொதுமக்களிடம் இருந்து பெறப்பட்டுள்ள கோரிக்கைகளை நிறைவேற்றத் தனித்துறை உருவாக்கப்பட்டு, மாவட்டம் வாரியாகக் குறைகள் பரிசீலித்து நிறைவேற்றப்படும் என்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்தார்.

தமிழக சட்டப்பேரவைத் தேர்தலை எதிர்கொள்ளும் வகையில் திமுக சார்பில் ‘உங்கள் தொகுதியில் ஸ்டாலின்’ என்ற தலைப்பில் பிரச்சாரக் கூட்டம் நடைபெற்று வருகிறது. வேலூர் மாவட்டத்தில் பள்ளிகொண்டா அருகேயுள்ள கந்தநேரி பகுதியில் இன்று (ஜன.30) காலை நடைபெற்ற நிகழ்ச்சிக்கு வேலூர் மத்திய மாவட்டச் செயலாளர் ஏ.பி.நந்தகுமார் தலைமை தாங்கினார். திமுக பொதுச் செயலாளர் துரைமுருகன் முன்னிலை வகித்தார்.

இதில், பொதுமக்கள் அளித்த மனுக்களை திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் பெற்றுக்கொண்டு பேசியதாவது:

''ஸ்டாலின் மீது நம்பிக்கை வைத்து மனுக்களுடன் வந்துள்ளீர்கள். அடுத்தவர் நம்பிக்கையைப் பெறுவது என்பது ஒரு மனிதனின் மாபெரும் சொத்து. நீங்கள் வைத்துள்ள நம்பிக்கையை நிச்சயமாக நான் காப்பாற்றுவேன். 100 சதவீதம் உண்மையாக இருப்பேன். மக்கள் குறைகளை அறிய இந்தப் பயணத்தைத் தொடங்கியுள்ளேன். திமுக ஆட்சிக்கு வந்ததும்100 நாட்களில் மக்கள் குறைகளைத் தீர்ப்பேன் என்று உங்களிடம் வாக்குறுதி கொடுத்திருக்கிறேன்.

இந்தக் கோரிக்கைளை நிறைவேற்ற தமிழக அரசின் சார்பில் தனித் துறை உருவாக்கப்படும். அந்தத் துறையின் மூலம் மாவட்டம் வாரியாகக் குறைகள் பரிசீலித்து நிறைவேற்றப்படும். தொகுதி வாரியாக முகாம் அமைத்து நேரடியாக விசாரணை நடத்தி நிறைவேற்றித் தருவோம். அதிமுக அரசு நிறைவேற்றத் தவறிய கடமையை திமுக நிச்சயம் நிறைவேற்றும். இதன் மூலம் 1 கோடி மக்களின் பிரச்சினை தீரும். ஒரு கோடி குடும்பங்கள், தங்களின் கவலைகளில் இருந்து நிச்சயமாக மீண்டிருப்பார்கள்.

தமிழர்களின் கண்ணீரைத் துடைக்கும் ஆட்சியை நடத்துவோம். கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்றுவதில் திமுக எப்போதும் பின்வாங்கியதில்லை. திமுக ஆட்சியில் கோட்டைக்குப் போகும் முன்பே ரூ.7 ஆயிரம் கோடி விவசாயக் கடனை ரத்து செய்தவர் கருணாநிதி. அனைவருக்கும் வண்ணத் தொலைக்காட்சி கொடுத்தவர், மத்திய அரசு ஊழியர்களுக்கு இணையாக மாநில அரசு ஊழியர்களுக்கும் ஊதியம் கொடுப்பதை நிறைவேற்றியவர் கருணாநிதி.

நாடாளுமன்றத் தேர்தலின்போது அளித்த வாக்குறுதிப்படி கல்விக் கடன், கூட்டுறவு வங்கியில் 5 பவுனுக்கு உட்பட்ட நகைக் கடன் ரத்து, விவசாயக் கடன்கள் ரத்து செய்யப்படும். இதன் மூலம் ஏழை எளிய மக்களின் வாழ்க்கைக்கான பொறுப்பை அரசு ஏற்கிறது. கார்ப்பரேட் கம்பெனிக்குப் பல லட்சம் கோடி கடன் ரத்து செய்யும் மத்திய அரசு, அப்பாவி மக்களின் கடனை ரத்து செய்யும்போது மட்டும் கேள்வி கேட்கிறது.

ஏழைகளுக்குச் செய்வது கடன் ரத்து இல்லை. வாழ்க்கையில் ஒளி ஏற்றும் திட்டம். இலவசம் என்பது மக்களின் வாழ்க்கையில் ஒளி ஏற்றுவது. இதைத் திமுக அரசு செய்யும். மக்கள் பிரச்சினைகளை உடனடியாகத் தீர்க்க திமுகவால்தான் முடியும் என்று மக்கள் இங்கு மனுக்களை வழங்கியுள்ளனர். மக்களின் அரசாக, மக்கள் விரும்பும் அரசாக திமுக இருக்கும்’’.

இவ்வாறு ஸ்டாலின் பேசினார்.

வேலூர் மாவட்டம் பள்ளிகொண்டா அருகே நடைபெற்ற ‘உங்கள் தொகுதியில் ஸ்டாலின்’ நிகழ்ச்சியில் பெறப்பட்ட மனுக்களைப் பெட்டியில் பூட்டி, சாவியைக் காண்பித்த திமுக தலைவர் மு.க.ஸ்டாலின்.

நீட் தேர்வுக்கு விலக்கு

முன்னதாக நிகழ்ச்சியில் பங்கேற்றவர்கள் எழுப்பிய கேள்விகளுக்கு மு.க.ஸ்டாலின் பதில் அளித்தபோது, ‘‘ஜெயலலிதா இருந்தவரை தமிழ்நாட்டில் நீட் தேர்வு நுழையவில்லை. அவர் மறைவுக்குப் பிறகு நீட் தேர்வு கொண்டு வரப்பட்டது. திமுக ஆட்சி அமைந்ததும் நீட் தேர்வுக்கு நிச்சயம் விலக்கு பெறப்படும். முறைப்படி உள்ளாட்சித் தேர்தல் நடத்தப்படும். தகுதியுள்ள அனைவருக்கும் முதியோர் உதவித்தொகை வழங்கப்படும். நெசவாளர்கள் பிரச்சினை தீர்க்கப்படும்’’ என்று தெரிவித்தார்.

அமைச்சர் வீரமணி மீது தாக்கு

நிகழ்ச்சியில் ஸ்டாலின் பேசும்போது, ‘‘இந்த மாவட்டத்தின் அமைச்சர் வீரமணி, அவரது அதிகாரத்தைப் பயன்படுத்தி மக்களுக்கு எந்த நன்மையும் செய்ய முன்வரவில்லை. அவரது வீட்டிலும், அவரது பினாமிகள் வீடுகள் உள்ளிட்ட 31 இடங்களில் மத்திய வருமான வரித்துறையினர் சோதனை நடத்தினர். இடங்களை வளைத்து மிரட்டி விலைக்கு வாங்குவதை முழுநேரத் தொழிலாகச் செய்து வருகிறார். அவர் மீது நடவடிக்கை எடுக்க அரசின் அனுமதி தேவையில்லை என்று நீதிமன்றமே கூறியுள்ளது'' என்று தெரிவித்தார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x