

இந்திய மொழிகளுக்காக ‘சமன்வாய்’ அமைப்பு நடத்தும் 5-வது ஆண்டு விழா டெல்லியில் உள்ள இந்தியன் ஹேபிடட் மையத்தில் நடந்தது. 28-ம் தேதி அமராவதி திறந்தவெளி அரங்கில் காலச்சுவடு பதிப்பகத்தின் 3 மொழிபெயர்ப்பு நூல்கள் வெளியிடப்பட்டன. 3 நூல்களும் மூல மொழியில் இருந்து நேரடி யாக மொழியாக்கம் செய்யப் பட்டவை.
முதல் நூல், ஊடகவியலாள ரும், அரசியல் விமர்சகருமான சபா நக்வியின் In Good Faith என்ற நூலின் மொழியாக்கமான ‘வாழும் நல்லிணக்கம்’. முடவன்குட்டி முகமது அலி மொழியாக்கம் செய்துள்ளார். இந்நூலை கர்னாடக இசைக் கலைஞரும் சமூக ஆர்வலருமான டி.எம்.கிருஷ்ணா வெளியிட்டார். இதுவே தனது நூலின் முதல் மொழிபெயர்ப்பு என்ற சபா நக்வி, இதை எழுதும் முன்பு இந்தியா முழுவதும் 2 ஆண்டுகள் பயணம் மேற்கொண்டதைப் பற்றி குறிப்பிட்டார்.
மோ யான் சீன மொழியில் எழுதிய ‘சேஞ்ச்’ என்ற குறுநாவல், பயணியால் தமிழில் ‘மாற்றம்’ என்ற பெயரில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளது. அதற்கு முன்னுரை எழுதிய பி.ஏ.கிருஷ்ணன் இந்நூலை வெளியிட்டார்.
மூன்றாவது நூல் ஒரு கவிதைத் தொகுப்பு. திஹார் சிறையின் பெண் கைதிகள் எழுதிய கவிதைகளை வர்த்திகா நந்தாவும், விம்லா மெஹ்ராவும் தொகுத்து ‘திங்க்கா திங்க்கா திஹார்’ என்ற தலைப்பில் இந்தியில் வெளியிட்ட நூலின் மொழியாக்கம். தமிழில் ‘துயர் நடுவே வாழ்வு’ என்ற பெயரில் எம்.கோபாலகிருஷ்ணனால் மொழியாக்கம் செய்யப்பட்டுள் ளது. சிறந்த எழுத்தாளரும், பதிப்பாளருமான ஊர்வசி புட்டாலியா இதை வெளியிட்டார். ஊடகத் துறையில் பணிபுரிந்த போது திஹார் சிறையில் பெண் கைதிகளை சந்தித்தது பற்றியும் அவர்களது படைப் பாற்றல் பற்றியும் வர்த்திகா நந்தா பேசினார். நிகழ்ச்சியை ஆ.இரா.வெங்கடாசலபதி தொகுத்து வழங்கினார்.