

விதிமீறி கட்டப்பட்ட கட்டிடங்களுக்கு குடிநீர், கழிவுநீர், மின் இணைப்புகள் தரக்கூடாது என்று சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சமூக ஆர்வலர் டிராபிக் ராமசாமி சென்னை உயர் நீதிமன்றத்தில் ஒரு மனு தாக்கல் செய்திருந்தார். ‘சென்னை பாரிமுனை ஜார்ஜ்டவுன் பகுதியில் குறிப்பாக சவுகார் பேட்டையில் ஏராளமான கட்டிடங்கள் விதிமீறி கட்டப்பட்டுள்ளன. இதுகுறித்து ஆய்வு செய்து, சம்பந்தப்பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என்று அதில் கோரியிருந்தார்.
இந்த வழக்கை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி எஸ்.கே.கவுல், நீதிபதி டி.எஸ்.சிவஞானம் ஆகியோர் கொண்ட அமர்வு விசாரித்து, விதிமீறி கட்டப்பட்ட கட்டிடங்களை ஆய்வு செய்து அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிட்டனர். அதன்படி, அதிகாரிகள் ஆய்வு செய்து அறிக்கை தாக்கல் செய்தனர். ‘ஜார்ஜ் டவுன் பகுதியில் உள்ள 11,304 கட்டிடங்கள் ஆய்வு செய்யப்பட் டன. இதில், விதிகளை முழுவதுமாக பின்பற்றி கட்டப்பட்டவை 72 கட்டிடங்கள் மட்டுமே’ என்று அறிக்கையில் கூறப்பட்டிருந்தது.
இந்த வழக்கு மீண்டும் விசாரணைக்கு வந்தபோது, நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவு: விதிமீறி கட்டப்பட்ட கட்டிடங்களுக்கு ஒரே தீர்வு அவற்றுக்கு சீல் வைப்பதுதான். யாரும் அங்கு குடிபோகாமல் தடுக்கும் விதமாக, அந்த கட்டிடங்களுக்கு குடிநீர், கழிவுநீர், மின் இணைப்புகள் தரக்கூடாது. இதை செயல்படுத்த வீட்டுவசதி துறை, நகராட்சி நிர்வாகம், குடிநீர் வழங்கல் துறை, சென்னைப் பெருநகர வளர்ச்சிக் குழுமம், சென்னை மாநகராட்சி ஆகியவை ஒரு செயல்திட்டம் உருவாக்கி அதை அறிக்கையாக தாக்கல் செய்ய வேண்டும்.
இவ்வாறு உத்தரவிட்ட நீதிபதி கள், விசாரணையை டிசம்பர் 18-ம் தேதிக்கு தள்ளிவைத்தனர்.