மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகே எம்ஜிஆர், ஜெயலலிதா கோயில் இன்று திறப்பு: முதல்வர் பழனிசாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் பங்கேற்பு

மதுரையில் இன்று திறக்கப்படும் எம்ஜிஆர், ஜெயலலிதா கோயிலில் நிறுவப்பட்டுள்ள எம்ஜிஆர், ஜெயலலிதா சிலைகளைப் பார்வையிடும் வருவாய்த் துறை  அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் மற்றும் அதிமுக நிர்வாகிகள்.
மதுரையில் இன்று திறக்கப்படும் எம்ஜிஆர், ஜெயலலிதா கோயிலில் நிறுவப்பட்டுள்ள எம்ஜிஆர், ஜெயலலிதா சிலைகளைப் பார்வையிடும் வருவாய்த் துறை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் மற்றும் அதிமுக நிர்வாகிகள்.
Updated on
1 min read

மதுரையில் 7 அடி உயர வெண்கலச் சிலைகளுடன் கட்டப்பட்டுள்ள எம்ஜிஆர், ஜெயலலிதா கோயிலை இன்று காலை முதல்வர் பழனிசாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் திறந்து வைக்கின்றனர்.

மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகே டி. குண்ணத்தூர் அருகே எம்ஜிஆர், ஜெயலலிதாவுக்காக சுமார் 12 ஏக்கர் பரப்பளவில் வருவாய்த் துறை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் கோயில் கட்டியுள்ளார். இக்கோயிலில் எம்ஜிஆர், ஜெயலலிதாவுக்கு 7 அடி உயர வெண்கலச் சிலைகள் அமைக்கப்பட்டுள்ளன.

இந்தக் கோயிலை இன்று (ஜன.30) முதல்வரும், துணை முதல்வரும் திறந்து வைக்கின்றனர். இதற்காக அவர்கள் சென்னையிலிருந்து விமானத்தில் இன்று காலை மதுரை வருகின்றனர். அவர்களுக்கு அமைச்சர்கள் செல்லூர் கே.ராஜூ, ஆர்.பி.உதயகுமார் மற்றும் விவி.ராஜன் செல்லப்பா எம்எல்ஏ தலைமையில் வரவேற்பு அளிக்கப்படுகிறது.

கோயில் திறப்பு விழாவை முன்னிட்டு நேற்று முன்தினம் யாகசாலை பூஜைகள் தொடங்கின. அதில் 11 ஹோம குண்டங்களில் 21 சிவாச்சாரியார்கள் இன்று காலை பூஜைகளைச் செய்கின்றனர். அதன்பிறகு புனிதநீர் கலசத்தில் தெளித்த பிறகு கோயில் திறப்புவிழா நடக்கிறது. கோயில் திறப்புவிழா ஏற்பாட்டைச் செய்துவரும் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் செய்தியாளர்களிடம் கூறியதாவது:

எம்ஜிஆர், ஜெயலலிதா கோயில் திறப்பு விழாவை முன்னிட்டு இன்று காலை கோ பூஜை நடைபெறுகிறது. தொடர்ந்து 120 கட்சி நிர்வாகிகளுக்கு கோ தானத்தை முதல்வரும், துணை முதல்வரும் வழங்குகின்றனர். மேலும், தமிழகம் முழுவதும் உள்ள 234 நலிவடைந்த நிர்வாகிகளுக்குப் பொற்கிழி வழங்குகின்றனர்.

ஜெயலலிதாவின் கோயில் அமைப்பதற்கு உரிய அனுமதி வழங்கிய முதல்வருக்கும், துணை முதல்வருக்கும் ஜெ. பேரவை சார்பில் நன்றி தெரிவிக்கிறோம் என்றார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in