Last Updated : 30 Jan, 2021 03:15 AM

 

Published : 30 Jan 2021 03:15 AM
Last Updated : 30 Jan 2021 03:15 AM

கடும் சிக்கலில் புதுச்சேரி அரசியல் களம்- யாரை முன்னிறுத்தி தேர்தலைச் சந்திப்பது என்பதில் குழப்பம்

புதுச்சேரி

சட்டப்பேரவைத் தேர்தல் நெருங்கியுள்ள சூழலில் இந்த முறை யாரை முன்னிறுத்தி தேர்தலை எதிர்கொள்வது என்பதில் இரு கூட்டணியிலும் கடும் குழப்பம் நிலவுகிறது.

புதுச்சேரியில் கடந்த சட்டப்பேரவைத் தேர்தலில் காங்கிரஸ் - திமுக கூட்டணி வெற்றி பெற்று ஆட்சி அமைத்தது. நாராயணசாமி முதல்வராக தேர்வு செய்யப்பட்டார். அதே சூழலில், மத்திய அரசு ஆதரவுடன் துணைநிலை ஆளுநராக கிரண்பேடி பொறுப்பேற்றார். அதைத் தொடர்ந்து புதுச்சேரி அரசுக்கும், ஆளுநர் கிரண்பேடிக்கும் தொடர் மோதல் நீடித்தது. இயல்பாக நடந்து வந்த பல திட்டங்களும் கிடப்பில் போடப்பட்டன. இதனால் மக்கள் கடும் அதிருப்தியில் உள்ளனர்.

இந்தச் சூழலில் காங்கிரஸ் கூட்டணியில் இடம்பெற்றுள்ள திமுக, சட்டப்பேரவைத் தேர்தலை மற்றொரு கூட்டணியில் சந்திக்க விரும்பி, ஆளும் அரசை கடுமையாக விமர்சித்து வந்தது. என்.ஆர்.காங்கிரஸுடன் கூட்டணி அமைக்க முயற்சித்தது. ‘காங்கிரஸ்-திமுக கூட்டணியில் குழப்பம் இல்லை’ என்று தெரிவித்து திமுக தலைவர் ஸ்டாலின் அதற்கு முற்றுப்புள்ளி வைத்தார். ஆனாலும் புதுச்சேரி திமுக, காங்கிரஸை விட்டு விலகியே நிற்கிறது.

இந்தப் பிரச்சினைக்கு மத்தியில்புதுவை காங்கிரஸில் முக்கியமானவரான முன்னாள் அமைச்சர் நமச்சிவாயம், நாராயணசாமி மீதான அதிருப்தியால் தற்போது பாஜகவில் இணைந்திருக்கிறார். இதற்கு மத்தியில், காங்கிரஸ் முக்கியஸ்தர்கள் இம்முறை தொகுதி மாறி நிற்க விரும்புகின்றனர். இதுவும் காங்கிரஸுக்கு பின்னடைவாக கருதப்படுகிறது.

இந்தச் சூழலில் நாராயணசாமி மீண்டும் போட்டியிடுவாரா? அவர் போட்டியிடாத பட்சத்தில் காங்கிரஸ் யாரை முன்னிறுத்தி தேர்தலைச் சந்திக்கும் என்ற கேள்வி எழுந்துள்ளது.

இதேபோல் பாஜக கூட்டணியிலும் சிக்கல் நிலவுகிறது. இக்கூட்டணியில் என்ஆர்.காங்கிரஸ், அதிமுக இடம்பெற்றுள்ளன.

புதுவையைப் பொறுத்தவரை என்ஆர்.காங்கிரஸ்தான் பிரதான எதிர்க்கட்சி. ‘கூட்டணிக்கு என்ஆர்.காங்கிரஸ்தான் தலைமையேற்க வேண்டும்’ என அக்கட்சியின் நிறுவனர் ரங்கசாமி விரும்புகிறார். ஏற்கெனவே ஆட்சியில் இருந்த கட்சி என்ஆர்.காங்கிரஸ். வரும் சட்டப்பேரவைத் தேர்தலில் மொத்தம் உள்ள 30 தொகுதிகளில் 20 தொகுதிகளில் போட்டியிட ரங்கசாமி விரும்புகிறார். பாஜக தலைமையோ தங்களுக்கு கூடுதல் தொகுதிகளை பெற வேண்டும் என விரும்புகிறது.

அதே நேரத்தில், புதிதாக சேர்ந்துள்ள நமச்சிவாயமும் பாஜகவில் முன்னிலைப்படுத்தப்படுகிறார். கடந்த 2016 தேர்தலில், புதுச்சேரி மாநிலத் தலைவராக இருந்த நமச்சிவாயத்தை முதல்வர் வேட்பாளராக முன்னிலைப்படுத்தியே காங்கிரஸ் வெற்றி பெற்றது. புதுவையில் கால் பதிக்க விரும்பும் பாஜக இதையும் கருத்தில் கொள்வதால், இக்கூட்டணியில் புதிய சிக்கல் ஏற்பட்டிருக்கிறது.

பாஜக தேசியத் தலைவர் ஜே.பி.நட்டா நாளை (ஜன. 31) புதுச்சேரி வந்து கூட்டணி தலைவர்களுடன் இதுதொடர்பாக பேசுகிறார். இரு கூட்டணிகளிலும் நிலவும் சிக்கல்கள் அடுத்தடுத்த கட்ட நகர்வுகளில் சரியாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x