

விழுப்புரம் அருகே தளவானூர் தடுப்பணை தடுப்புச்சுவர் சேத மடைந்த விவகாரத்தில் மேலும் 2 பொறியாளர்கள் பணியிடை நீக்கம் செய்யப்பட்டனர்.
விழுப்புரம் அருகே தளவானூரில் தென்பெண்ணையாற் றின் குறுக்கே ரூ.25.35 கோடி மதிப்பில் புதிதாக கட்டப்பட்ட தடுப் பணை கடந்த 4 மாதங்களுக்கு முன்பு திறக்கப்பட்டது. கடந்த சிலநாட்களுக்கு முன் தடுப்பணையின் தடுப்புச்சுவர் சேதமடைந்து தேக்கிவைத்திருந்த தண்ணீர் முழுவது மாக தென்பெண்ணையாற்றில் வீணாக ஓடியது. ஒரு மதகும்தண்ணீரில் அடித்து செல்லப் பட்டது.
இதுதொடர்பாக விசாரணை நடத்தி ஒப்பந்ததாரர், பொதுப் பணித்துறை அதிகாரிகள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பல்வேறு விவசாய சங்கங்களும், அரசியல் கட்சியி னரும் வலியுறுத்தினர்.
இதற்கிடையே பொதுப்பணித் துறை சென்னை மண்டல தலைமை பொறியாளர் (நீர்வள ஆதாரம்) அசோகன் உட்பட 4 பேர் ஏற்கெனவே பணியிடை நீக்கம் செய்யப்பட்டனர்.
இந்நிலையில், தடுப்பணை கட்டும் பணியை தொடர்ந்து கண்காணிக்க தவறியதற்காக பொதுப்பணித்துறை உதவி பொறியாளர்கள் ஞானசேகரன், ஜெகதீசன் ஆகிய இருவரையும் பணியிடை நீக்கம் செய்து பொதுப்பணித்துறை தலைமை பொறியாளர் (பொது) ராமமூர்த்தி உத்தரவிட்டுள்ளார்.