

அதிமுகவினரின் உள்ளூர் அர சியல், அதிகாரிகளின் அக் கறையின்மையால் மதுரைக்கு அறிவித்த எய்ம்ஸ், பஸ்போர்ட், இரண்டாவது உள்வட்டச் சாலை, கோரிப்பாளையம் - பெரியார் பேருந்துநிலையம் இடையேயான பறக்கும் பாலம் உள்ளிட்ட திட் டங்கள் கைநழுவிப்போகும் அபாயம் ஏற்பட்டுள்ளது. இன்று மதுரைக்கு வரும் முதல்வர் இது தொடர்பாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற எதிர்பார்ப்பு எழுந் துள்ளது.
பழமையான நகரமான மதுரை, மற்ற நகரங்களைப்போல் இல் லாமல் கிராமங்களையும், நகர்ப் பகுதிகளையும் உள்ளடக்கிய வித்தியாசமான வாழ்விடச் சூழலைக் கொண்டுள்ளது. சென்னை, கோவை, திருச்சி, சேலம் போன்ற நகரங்களை ஒப்பிடும்போது மதுரையில் போதிய வாகனப் போக்குவரத்து கட்டமைப்பு வசதிகள் இல்லாமல் நெரிசலால் மக்கள் ஓரிடத்தில் இருந்து மற்றொரு இடத்துக்கு எளிதாக வாகனங்களில் சென்றுவர முடியவில்லை. உதாரணமாக 15 நிமிடத்தில் செல்லக் கூடிய கோரிப்பாளையத்தில் இருந்து பெரியார் பஸ்நிலையம் வரையி லான 3.7 கி.மீ. தூரத்தைக் கடக்க 30 நிமிடங்கள் முதல் 45 நிமிடங்கள் வரை ஆகிறது.
ஆர்வம் காட்டவில்லை
மதுரையின் போக்குவரத்தை ஒழுங்கமைக்கவும், சுற்றுலா உள்ளிட்ட அனைத்துத் துறை களையும் மேம்படுத்த கடந்த 10 ஆண்டுகளில் அறிவிக்கப்பட்ட எய்ம்ஸ் மருத்துவமனை, பஸ்போர்ட், மோனோ ரயில் திட்டம், கோரிப்பாளையம் முதல் பெரியார் பஸ்நிலையம் வரையிலான பறக்கும் பாலம், சமயநல்லூர்-உத்தங்குடி வரையிலான உள்வட்டச் சாலை உள்ளிட்ட பல திட்டங்கள் வெறும் அறிவிப்புடன், ஆரம்பக்கட்ட நிலையிலேயே நிற்கின்றன.
எய்ம்ஸ் மருத்துவமனைக்கு பிரதமர் மோடி அடிக்கல் நாட்டி 2 ஆண்டுகளாகிவிட்டன.
இந்த திட்டத்துக்கு நிதி ஒதுக்கீட்டை பெற்று கட்டுமானப் பணியைத் தொடங்க ஆர்வம் காட்டவில்லை.
அதுபோல், ஒப்புதல் வழங் கப்பட்ட கோரிப்பாளையம்-பெரியார் பஸ்நிலையப் பறக்கும் பாலம் திட்டத்தில் உள்ள பிரச்சினைகளுக்குத் தீர்வு கண்டு, அதற்கான பணிகளைத் தொடங்க அதிகாரிகளும், உள்ளூர் அமைச்சர்களும் அக்கறை காட்டவில்லை. அதனால், தினமும் மதுரையின் இந்த சாலையில் செல்ல முடியாமல் மக்களும், வாகன ஓட்டுநர்களும் சிரமப்படுகின்றனர்.
உத்தங்குடி-சமயநல்லூர் உள்வட்டச் சாலை திட்டம் அறிவி க்கப்பட்டும், அதற்கான பணியை தொடங்காததால் மதுரையின் வடகரைப் பகுதியைச் சேர்ந்த மக்கள், சேலம், திண்டுக்கல், கரூர், நாமக்கல், கிருஷ்ணகிரி, தருமபுரி, கோவை, பெங்களூரு செல்வதற்கு நகருக்குள் செல்ல வேண்டியுள்ளது. அதனால், நகர் பகுதியில் போக்குவரத்து நெரிசல் அதிகரிக்கிறது.
உள்ளூர் அரசியல்
கோவை, சேலம் நகரத்துடன் சேர்த்து மதுரை அருகே விமானநிலையத்துக்கு இணையான வசதிகளுடன் அமைக்கப்படும் என அறிவிக்கப்பட்ட பஸ்போர்ட் (ஹைடெக் பேருந்துநிலையம்), அதிமுகவினரின் உள்ளூர் அரசியலால் கைநழுவிச் செல் லும் அபாயத்தில் உள்ளது. இத் திட்டத்துக்காக திருமங்கலம் அருகே கரடிக்கல் கிராமத்தில், செக்கானூரணி-திருமங்கலம் சாலையில் 4 கி.மீ தொலைவில் உள்ள 56 ஏக்கர் இடமும், திருப்பரங்குன்றம் தொகுதி யிலுள்ள மேலக்குயில்குடியில் 54.69 ஏக்கர் இடமும், மாட்டுத்தாவணி பேருந்து நிலையம் அருகேயுள்ள மற்றொரு இடமும் ஆய்வு செய்யப் பட்டன. இடம் தேர்வு செய்வதில் அதிமுகவினரிடையே ஏற்பட்ட அரசியலால் இந்தத் திட்டம் என்ன நிலையில் இருக்கிறது என்றே தெரியவில்லை.
தடைபடும் வளர்ச்சிப் பணி
தற்போது எந்தச் சிக்கலும் இல் லாமல் முடியக்கூடிய திட்டங் களுக்கு மட்டுமே மாவட்ட மற்றும் மாநகராட்சி நிர்வாகத்தினரும், அமைச்சர்களும் அக்கறை காட்டு கின்றனர். தொலைநோக்குப் பார் வையுடன் கூடிய திட்டத்துக்கு நிலம் கையகப்படுத்துவதில் சிக் கல் இருந்தால், அதற்குத் தீர்வு கண்டு பணிகளை மேற்கொள்ள முக்கியத்துவம் தரப்படவில்லை. இதனால் மதுரையின் வளர்ச்சி தடைப்பட்டுள்ளது.
மதுரையில் இன்று ஜெயலலிதா கோயிலை திறந்துவைக்க வரும் முதல்வர் பழனிசாமி இந்தத் திட்டங்களை விரைவாகச் செயல்படுத்த நட வடிக்கை எடுக்க வேண்டும் என்பதே மக்களின் எதிர்பார்ப்பாகும்.