வடபழனி முருகன் கோயிலில் முகூர்த்த நாட்களில் அதிக திருமணங்கள் நடத்தப்படுவதை எதிர்த்து வழக்கு: உண்மை நிலை அறிய சட்ட ஆணையர் நியமனம்

வடபழனி முருகன் கோயிலில் முகூர்த்த நாட்களில் அதிக திருமணங்கள் நடத்தப்படுவதை எதிர்த்து வழக்கு: உண்மை நிலை அறிய சட்ட ஆணையர் நியமனம்
Updated on
1 min read

வடபழனி முருகன் கோயிலில் அதிக அளவில் திருமணங்கள் நடப்பதால் போக்குவரத்து நெரி சல் ஏற்படுவதாக கூறி உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப் பட்டுள்ளது. இந்த பிரச்சினையில் உண்மை நிலையை அறிந்து கூற சட்ட ஆணையரை நியமித்து நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர்.

சென்னை வடபழனியை சேர்ந்த வி.பாண்டியராஜன் என்பவர் உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவில் கூறியிருந்ததாவது:

வடபழனி முருகன் கோயிலில் முகூர்த்த நாட்களில் 50 திருமணங்கள் வரை நடக்கின்றன. இதனால் போக்குவரத்து இடையூறு ஏற்பட்டு அப்பகுதியினர் பெரிதும் அவதிப்படுகின்றனர். மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோயிலிலும் இது போன்ற நிலைதான் இருந்தது. அந்த கோயில் ஆணையர் எடுத்த நடவடிக்கையால், இப்போது முகூர்த்த நாட்களில் தலா 3 திருமணங்கள் என ஆண்டுக்கு 84 திருமணங்கள் மட்டுமே நடக் கின்றன. இதேபோல, வடபழனி முருகன் கோயிலில் நடவடிக்கை எடுத்து, போக்குவரத்துப் பிரச் சினைக்கு தீர்வு காணக் கோரி அரசிடம் கடந்த மார்ச் 21-ம் தேதி மனு கொடுத்தேன். அதன் மீது நடவடிக்கை எடுக்கப்படவில்லை. அந்த மனு மீது நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும். இவ்வாறு மனுவில் அவர் கூறியிருந்தார்.

உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி எஸ்.கே.கவுல், நீதிபதி புஷ்பா சத்தியநாராயணா ஆகியோர் கொண்ட முதல் அமர்வு முன்பு இந்த மனு விசாரணைக்கு வந்தது. அவர்கள் அளித்த உத்தரவு:

இந்த வழக்கில் சட்ட ஆணையராக வழக்கறிஞர் ஏ.ஜெ.ஜாவத் நியமிக்கப்படுகிறார். அவர், வடபழனி முருகன் கோயிலில் முகூர்த்த நாட்களில் நடைபெறும் திருமணங்களை புகைப்படம், வீடியோ எடுக்க வேண்டும். இதற்கு போலீஸார் உதவ வேண்டும். முகூர்த்த நாட்களில் 2 அல்லது 3 முறை நேரில் ஆய்வு செய்து, உண்மை நிலவரத்தை அறிந்து ஆலோசனை கூறவேண்டும். சட்ட ஆணையரின் சம்பளமாக ரூ.40 ஆயிரம் நிர்ணயிக்கப்படுகிறது. இதில் ரூ.20 ஆயிரத்தை கோயில் நிர்வாகமும், ரூ.20 ஆயிரத்தை மனுதாரரும் வழங்க வேண்டும்.

இவ்வாறு உத்தரவிட்ட நீதிபதிகள், விசாரணையை 2016 ஜனவரி 19-ம் தேதிக்கு தள்ளிவைத்தனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in