

வன்னியர்களுக்கு இட ஒதுக்கீடு வழங்க வலியுறுத்தி தமிழகம் முழுவதும் மாவட்ட ஆட்சியர் அலுவலகங்கள் முன்பு பாமக, வன்னியர் சங்கத்தினர் போராட்டம் நடத்தினர்.
தமிழகத்தில் கல்வி, வேலைவாய்ப்பில் வன்னியர்களுக்கு 20 சதவீத உள் ஒதுக்கீடு கோரிக்கையை வலியுறுத்தி வருகின்றனர்.
இந்நிலையில், ஏற்கெனவே அறிவித்தபடி, 6-வது கட்டமாக அனைத்து மாவட்ட ஆட்சியர் அலுவலகங்கள் முன்பும் நேற்று போராட்டம் நடத்தப்பட்டு, ஆட்சியர்களிடம் மனு கொடுக்கப்பட்டது.
சென்னை ஆட்சியர் அலுவலகம் முன்பு பாமக தலைவர் ஜி.கே.மணி தலைமையில் போராட்டம் நடந்தது. அவர் பேசியதாவது:
வன்னியர்களுக்கு உரிய இட ஒதுக்கீடு வழங்கக் கோரி பாமக நிறுவனர் ராமதாஸ் 40 ஆண்டுகளாக போராடி வருகிறார். அனைத்து சமூகத்தினருக்கும் உரிய இட ஒதுக்கீடு வழங்க வேண்டும் என்று அவர் வலியுறுத்தி வருகிறார். வன்னியர்களுக்கு தனி இட ஒதுக்கீடு வழங்க தமிழக அரசு தயக்கம் காட்டுவதால் உள் ஒதுக்கீடு கேட்கிறோம். இதற்கு கீழே இறங்கிவர முடியாது.
சட்ட சிக்கலும் இல்லை
கேரளா, ஆந்திரா, கர்நாடகாவில் தனித்தனியாக இட ஒதுக்கீடு வழங்கப்படுகிறது. தமிழகத்தில் இட ஒதுக்கீடு குளறுபடிகள்திருத்தப்பட வேண்டும். அருந்ததியர், முஸ்லிம்களுக்கு உள் ஒதுக்கீடு வழங்கப்பட்டுள்ளதுபோல, வன்னியர்களுக்கு உள் ஒதுக்கீடு வழங்க எந்த தடையும் இல்லை. சட்ட சிக்கலும் இல்லை.
கல்வி, வேலைவாய்ப்பில் பின்தங்கியுள்ள வன்னியர்களுக்கு இட ஒதுக்கீடு வழங்கினால்தான் தமிழகம் வளர்ச்சி அடையும். 6 கட்டங்களாக அமைதியான முறையில் எவ்வித அசம்பாவிதமும் இல்லாமல் போராட்டம் நடத்தப்பட்டுள்ளது. அடுத்தகட்டமாக ராமதாஸ் களம் இறங்குவார். அந்த போராட்டம் எப்படி இருக்கும் என்பதை அவரே முடிவு செய்வார். எனவே, தமிழக அரசு இனியும் காலம் தாழ்த்தாமல் வன்னியர்களுக்கு உள் ஒதுக்கீடு வழங்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார். வடக்கு மண்டல இணை பொதுச் செயலாளர் ஏ.கே.மூர்த்தி மற்றும் பாமக, வன்னியர் சங்க நிர்வாகிகள் ஏராளமானோர் பங்கேற்றனர். பின்னர், ஆட்சியரை ஜி.கே.மணி தலைமையிலான குழுவினர் சந்தித்து கோரிக்கை மனுவை கொடுத்தனர்.