Published : 18 Nov 2015 08:37 AM
Last Updated : 18 Nov 2015 08:37 AM

வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டு காரில் சிக்கிய 5 பேர் மீட்பு; ஒருவர் கதி என்ன?

கனமழை மற்றும் ஆந்திர பகுதியில் உள்ள அம்மப்பள்ளி தடுப்பணை திறக்கப்பட்டதால் கொசஸ்தலை ஆற்றில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது. இதனால், திருத்தணி அருகே என்.என்.கண்டிகை - நெமிலி இடையே கொசஸ்தலை ஆற்றின் குறுக்கே உள்ள தரைப்பாலம் தண்ணீரில் மூழ்கியது. போக்குவரத்து நிறுத்தி வைக்கப்பட்டிருந்த நிலையில் நேற்று காலை ஆற்றில் குறைந்த அளவு நீர் சென்றது. இதனால், தரைப்பாலத்தில் நீர் வராததால் வாகனங்கள் செல்ல அனுமதிக்கப்பட்டது.

இந்நிலையில், ஆந்திர மாநிலம் சித்தூர் மாவட்டம் எள்ளசமுத்திரத்தைச் சேர்ந்த கஜேந்திரன்(35), தன் மகன் யஷ்வந்த் (5) மற்றும் உறவினர்கள் முனுசாமி(60), அவரது மனைவி ஈஸ்வரம்மா(52), மனோகரன்(33), ஆவடியைச் சேர்ந்த கோதண்டன்(70) ஆகிய 5 பேருடன் காரில் திருத்தணி வந்துகொண்டிருந்தார்.

என்.என்.கண்டிகை - நெமிலி தரைப்பாலத்தின் மீது ஏறிய போது, எதிர்பாராதவிதமாக தரைப் பாலம் உடைந்தது. இதனால், கார் கொசஸ்தலை ஆற்றின் வெள்ளத்தில் அடித்து செல்லப் பட்டது. காரில் இருந்தவர்களின் அலறல் சத்தம் கேட்டு அப் பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள் 10-க்கும் மேற்பட்டோர், ஆற்றில் குதித்து காரின் கண்ணாடியை உடைத்து உள்ளே இருந்த கஜேந்திரன், யஷ்வந்த், முனுசாமி, ஈஸ்வரம்மா, மனோ கரன் ஆகிய 5 பேரை மீட்டனர்.

கோதண்டனை மீட்பதற்குள் கார் வேகமாக நீரில் இழுத்து செல்லப்பட்டது. அவர் காருடன் நீரில் மூழ்கினார். அவரை தேடும் பணியில் திருத்தணி தீயணைப்புத்துறையினர் மற்றும் பொதுமக்கள் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x