Published : 29 Jan 2021 08:29 PM
Last Updated : 29 Jan 2021 08:29 PM
அதிமுக, திமுக ஆகிய கட்சிகள் தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் பிரச்சாரத்தைத் தொடங்கிவிட்ட நிலையில், மதுரையில் பாஜக நாளை பிரச்சாரத்தைத் தொடங்குகிறது.
தமிழகத்தில் ஓரிரு மாதங்களில் சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற உள்ளது. தேர்தல் தேதி விரைவில் அறிவிக்கப்படுவதற்கு வாய்ப்பு உள்ளது. முதல்வர் எடப்பாடி பழனிசாமியும், திமுக தலைவர் மு.க.ஸ்டாலினும் ஏற்கெனவே பிரச்சாரத்தைத் தொடங்கிவிட்டனர்.
அதிமுக கூட்டணியில் இடம்பெற்றுள்ள பாஜக, தமிழக சட்டப்பேரவைத் தேர்தலுக்கான முதல் பிரச்சாரத்தை மதுரையில் நாளை (ஜன.30) தொடங்குகிறது. பாஜக தேர்தல் பிரச்சாரக் கூட்டம் மதுரை பாண்டிகோவில் அருகேயுள்ள அம்மா திடலில் நாளை மாலை நடைபெறுகிறது. இதில் பாஜக தேசியத் தலைவர் ஜே.பி.நட்டா பங்கேற்கிறார்.
இதில் தமிழக பாஜக தலைவர் எல்.முருகன், மேலிடப் பார்வையாளர் சி.டி.ரவி, மாநில, மாவட்ட நிர்வாகிகள் ஆகியோர் பங்கேற்கின்றனர். பிரச்சாரப் பொதுக்கூட்டத்தில் பங்கேற்பதற்காக ஜே.பி.நட்டா விமானம் மூலம் இன்று இரவு மதுரை வருகிறார். இரவில் வேலம்மாள் விருந்தினர் விடுதியில் தங்குகிறார். நாளை காலை மதுரை மீனாட்சியம்மன் கோயிலுக்குச் செல்கிறார். கோரிப்பாளையத்தில் உள்ள தேவர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்துகிறார்.
பின்னர் விருந்தினர் மாளிகையில் வைத்து கட்சியின் முக்கியப் பிரிவு நிர்வாகிகள், சமூக வலைதளப் பிரிவு நிர்வாகிகள், புதிதாகக் கட்சியில் சேர்ந்தவர்கள், சமுதாய முக்கியஸ்தர்கள், மதுரையின் முக்கியப் பிரமுகர்களை அடுத்தடுத்துச் சந்தித்துப் பேசுகிறார். மாலையில் அம்மா திடல் பொதுக்கூட்டத்தில் பங்கேற்கும் அவர், இரவில் கட்சி நிர்வாகிகளைச் சந்தித்துப் பேசுகிறார்.
Sign up to receive our newsletter in your inbox every day!