அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டில் மாடுபிடி வீரருக்கான முதல் பரிசாகக் கார் வழங்கத் தடை: உயர் நீதிமன்றம் உத்தரவு

கோப்புப்படம்
கோப்புப்படம்
Updated on
1 min read

அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டில் அதிக காளைகளைப் பிடித்ததாக அறிவிக்கப்பட்ட மாடுபிடி வீரருக்கு முதல் பரிசாகக் கார் வழங்குவதற்கு உயர் நீதிமன்றம் இடைக்காலத் தடை விதித்துள்ளது.

மதுரை மேலூரைச் சேர்ந்த கருப்பண்ணன், உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் தாக்கல் செய்த மனு:

''மதுரை அலங்காநல்லூரில் நடைபெற்ற ஜல்லிக்கட்டில் 900 காளைகள் பங்கேற்றன. 700 மாடுபிடி வீரர்கள் பங்கேற்றனர். ஒவ்வொரு சுற்றிலும் 75 வீரர்கள் வீதம் அனுமதிக்கப்பட்டனர். அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டில் அதிக காளைகளைப் பிடிக்கும் மாடுபிடி வீரருக்கு முதல் பரிசாகக் கார் அறிவிக்கப்பட்டது.

இப்போட்டியில் 33-வது எண் பனியன் அணிந்து மாடுகளைப் பிடித்த கண்ணனுக்கு முதல் பரிசு அறிவிக்கப்பட்டது. இந்த எண் கொண்ட பனியன் முதலில் மாடுபிடி வீரர் ஹரிகிருஷ்ணனுக்கு வழங்கப்பட்டது. அவர் முதல் சுற்றில் காயமடைந்து சிகிச்சைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். அவரது பனியனை அணிந்து கண்ணன் ஜல்லிக்கட்டில் பங்கேற்று மாடுகளைப் பிடித்துள்ளார்.

அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டில் முதல் பரிசுக்குரியவரைத் தேர்வு செய்ததில் முறைகேடு நடைபெற்றுள்ளது. இதனை விசாரிக்கக் கோரி அதிகாரிகளுக்கு மனு கொடுத்தும் நடவடிக்கை எடுக்கவில்லை. இவருக்கு முதல் பரிசுக்கான காரை நாளை (ஜன.30) முதல்வர் எடப்பாடி பழனிசாமி வழங்கவுள்ளார்.

கண்ணனுக்கு முதல் பரிசுக்குரிய காரை வழங்கத் தடை விதித்து, முறையாக விசாரணை நடத்தி உண்மையில் அதிக மாடுகளைப் பிடித்த மாடுபிடி வீரரைத் தேர்வு செய்து முதல் பரிசு வழங்க உத்தரவிட வேண்டும்''.

இவ்வாறு மனுவில் கூறப்பட்டிருந்தது.

இந்த மனு நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் முன்பு இன்று விசாரணைக்கு வந்தது. மனுதாரர் சார்பில், 33-வது எண் கொண்ட பனியன் அணிந்து இருவர் 12 காளைகளைப் பிடித்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டது.

இதையடுத்து, கண்ணனுக்கு நாளை கார் பரிசு வழங்க இடைக்காலத் தடை விதித்தும், மனு தொடர்பாக மதுரை மாவட்ட ஆட்சியர் பதிலளிக்க உத்தரவிட்டும் விசாரணையை நீதிபதி ஒத்திவைத்தார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in