Published : 29 Jan 2021 06:32 PM
Last Updated : 29 Jan 2021 06:32 PM

மழையால் பாதிக்கப்பட்ட விவசாயிகள் குறித்த கணக்கெடுப்பு: மாவட்ட ஆட்சியர்கள் கூட்டத்தில் முதல்வர் பழனிசாமி அறிவுறுத்தல் 

சென்னை

சமீபகாலம் வரை மழை பெய்துள்ளதால் டெங்கு கொசு உருவாகி காய்ச்சல் ஏற்படும் சூழ்நிலை உருவாகிவிடக் கூடாது. தற்போது, காய்ச்சல் டெங்கு கொசுவால் உருவாகிறதா? அல்லது கரோனா வைரஸால் உருவாகிறதா? என்று கண்டுபிடிக்க முடியாத ஒரு சூழ்நிலை உள்ளதால் சுகாதாரத்துறை விழிப்புடன் செயல்பட வேண்டும் என மாவட்ட ஆட்சியர்கள் கூட்டத்தில் முதல்வர் பழனிசாமி பேசினார்.

மாவட்ட ஆட்சித் தலைவர்களுடனான கரோனா வைரஸ் நோய்த் தொற்றுத் தடுப்புப் பணிகள் குறித்த ஆய்வுக் கூட்டத்தில் முதல்வர் பழனிசாமி பேசியதாவது:

“கரோனா வைரஸ் பரவலைத் தடுப்பதற்கு மாவட்ட நிர்வாகமும், சுகாதாரத் துறையும் எடுத்த நடவடிக்கைகள் பலனைத் தந்துள்ளன. இந்தியாவிலேயே அதிக அளவில் பிசிஆர் பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டு அறிகுறிகள் தென்பட்டவர்களுக்கு உரிய சிகிச்சை அளித்த காரணத்தால் இன்றைய தினம் தமிழ்நாடு கரோனா தொற்று கட்டுப்படுத்தியதில் முதல் மாநிலமாகத் திகழ்ந்து கொண்டிருக்கிறது.

அரசு, பாதிக்கப்பட்டவர்களுக்குப் படுக்கை வசதி, மருத்துவ வசதிகள் என அனைத்து வசதிகளையும் செய்து கொடுத்து உரிய சிகிக்சை அளித்த காரணத்தால், மக்கள் எவ்வித பாதிப்பிற்கும் ஆளாகாமல், தொற்று ஏற்பட்டவர்கள் பெரும்பாலும் குணமடைந்து வீடு திரும்புகிற நிலை உருவாகியுள்ளது.

தலைமைச் செயலாளர் குறிப்பிட்டதைப் போல, மாவட்ட நிர்வாகத்தில் பல்வேறு பணிகள் முடுக்கி விடப்பட்டு, வேகமாக நடைபெற வேண்டும். பல ஆண்டுகளாக வசித்து வருபவர்களின் வீட்டு மனைக்கு இதுவரை பலருக்குப் பட்டா கிடைக்காமல் உள்ளது. அதற்கு மாவட்ட ஆட்சித் தலைவர்கள் உடனடி நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். பட்டா மாறுதல் கேட்டுள்ள விண்ணப்பங்கள் மீது உடனடியாக நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.

பல்வேறு மாவட்டங்களில் மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சிப் பகுதிகளிலும் இன்னும் பல ஊர்களிலும் மழைக் காலங்களில் பல்வேறு பகுதிகளில் தேங்கியுள்ள தண்ணீரை உடனடியாக அகற்ற மாவட்ட நிர்வாகமும், சுகாதாரத் துறையும் விழிப்போடு இருந்து செயல்பட வேண்டும். டெங்கு கொசு உருவாகி காய்ச்சல் ஏற்படும் சூழ்நிலை உருவாகிவிடக் கூடாது. ஏனென்றால், தற்போது, காய்ச்சல் டெங்கு கொசுவால் உருவாகிறதா? அல்லது கரோனா வைரஸால் உருவாகிறதா? என்று கண்டுபிடிக்க முடியாத ஒரு சூழ்நிலை ஏற்பட்டுவிடும். அடிக்கடி கிருமி நாசினி தெளித்து சுத்தம் செய்ய வேண்டும்.

கல்லூரிகள், பள்ளிகள் திறக்கப்படுவதால் மாவட்ட நிர்வாகமும், கல்வித் துறையும் தொடர்ந்து கண்காணித்து கரோனா வைரஸ் தொற்று ஏற்படாவண்ணம் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்வதுடன், விழிப்புணர்வையும் ஏற்படுத்த வேண்டும். ஒவ்வொரு திங்கட்கிழமையன்றும் மக்கள் குறை தீர்க்கும் கூட்டம் நடத்தப்பட்டு வருவதை, இனி, அரசு அறிவித்த வழிமுறைகளைப் பின்பற்றி மாவட்ட ஆட்சித் தலைவர்கள் உரிய பாதுகாப்புடன் தொடரலாம்.

நல்ல மழை பெய்து ஏரிகள், குளங்கள், குட்டைகள் நிரம்பியுள்ளதை நாம் முழுமையாகப் பாதுகாக்க வேண்டும். பலவீனமான கரைகள் இருந்தால் அதனைப் பலப்படுத்துவதற்கு, மாவட்ட ஆட்சித் தலைவர்கள் நேரடியாகச் சென்று கள ஆய்வு செய்து, சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளுக்கு அறிவுரை வழங்கி சரிசெய்யும் நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். பிரதமர் வீடு கட்டும் திட்டத்தை வேகமாக, துரிதமாகச் செயல்படுத்த வேண்டும்.

நிதி போதாது என்று சொன்னதற்கும் அரசு போதிய நிதி ஒதுக்கீடு செய்துள்ளது. பல்வேறு நகரங்கள் மற்றும் கிராமப்புறங்களில் தெருவிளக்குகள் சரியாக எரிவதற்கான நடவடிக்கைகளை மாவட்ட நிர்வாகம் மேற்கொள்ள வேண்டும். சம்பந்தப்பட்ட அதிகாரிகள் அதை கவனமாகக் கண்காணிக்க வேண்டும்.

நிவர், புரெவிப் புயல்களால் வேளாண் மக்கள் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள். பாதிக்கப்பட்ட இடங்களை மத்திய அரசின் குழு பார்வையிட்டுச் சென்றவுடன், அரசு வேளாண்மைத் துறை அதிகாரிகள் மூலமாக கணக்கீடு செய்து அவர்களுக்கு உண்டான நிவாரணம் வங்கியின் மூலமாக வழங்கப்பட்டிருக்கின்றன. நிவர் மற்றும் புரெவி புயல்களுக்குப் பிறகு பெய்த தொடர் மழையின் காரணமாக, அறுவடைக்குத் தயாராக இருந்த நெற்பயிர்கள் மற்றும் சோளம், மக்காச் சோளம், உளுந்து போன்ற மானாவாரிப் பயிர்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுவிட்டன.

ஆகவே, பாதிக்கப்பட்ட அனைத்து விவசாயிகளுக்கும் அரசு இழப்பீட்டுத் தொகை தரத் தயாராக உள்ளது. எனவே, மாவட்ட நிர்வாகம், வேளாண்மைத்துறை அதிகாரிகள், கவனமாக மானாவரிப் பயிர் விவசாயிகள் பாதிக்கப்பட்டிருந்தாலும், நெற்பயிர் விவசாயிகள் பாதிக்கப்பட்டிருந்தாலும், கணக்கீடு எடுத்து அரசுக்குச் சமர்ப்பிக்க வேண்டுமென்று இந்த நேரத்தில் கேட்டுக் கொள்கிறேன்.

டெல்டா மாவட்டம் மட்டுமல்ல, பல்வேறு மாவட்டங்களிலும் அறுவடைக்குத் தயாராகயிருந்த நெற்பயிர்கள் கனமழையின் காரணமாக தண்ணீரில் மூழ்கி நெல் முளைத்து விட்டதால், விவசாயிகள் கடுமையாக பாதிக்கப்பட்டார்கள்.

அப்படி பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்குவதற்கு அரசால் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. ஆகவே, நமது அதிகாரிகள் முழு கவனம் செலுத்தி, பாதிக்கப்பட்ட விவசாயிகளைக் கண்டறிந்து உடனடியாக அரசுக்கு அதுகுறித்த அறிக்கையைச் சமர்ப்பிக்க வேண்டுமென்று அன்போடு இந்த நேரத்தில் கேட்டுக் கொள்கிறேன்.

மேலும், மாவட்ட நிர்வாகம், சுகாதாரத்துறை மற்றும் அவர்களோடு இணைந்து பணியாற்றிய உள்ளாட்சித் துறை, வருவாய்த் துறை, காவல்துறை, கூட்டுறவுத் துறை, உணவுத் துறை போன்ற பல துறைகளும் ஒன்றாக இணைந்து போர்க்கால அடிப்படையில் பணியாற்றிய காரணத்தினால், இந்திய நாட்டிலேயே, கரோனா வைரஸ் பரவல் தமிழகத்தில் கட்டுப்படுத்தப்பட்டுள்ளது.

மிகச் சிறப்பாகச் செயல்பட்ட அனைத்து மாவட்ட ஆட்சித் தலைவர்களுக்கும் நன்றியைத் தெரிவித்து, இன்னும் ஒருசில மாவட்டங்களில் இன்னும் வேகமாக, துரிதமாக கவனம் செலுத்தி, கரோனா வைரஸ் பரவலைத் தடுப்பதற்கு நடவடிக்கை மேற்கொள்ள வேண்டுமென்று கேட்டுக்கொள்கிறேன்”.

இவ்வாறு முதல்வர் பழனிசாமி பேசினார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x