ஜெயலலிதாவுக்கு அரசு செலவில் நினைவு மண்டபம் கட்டியது ஏற்கக்கூடியதல்ல: கே.ஆர்.ராமசாமி எம்எல்ஏ பேட்டி

தேவகோட்டை தியாகிகள் பூங்கா அருகே சாலையைச் சீரமைக்க வலியுறுத்தி பேரணியாகச் செல்லத் தயாராக இருந்த காங்கிரஸார்.
தேவகோட்டை தியாகிகள் பூங்கா அருகே சாலையைச் சீரமைக்க வலியுறுத்தி பேரணியாகச் செல்லத் தயாராக இருந்த காங்கிரஸார்.
Updated on
1 min read

முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவிற்கு அரசு செலவில் நினைவு மண்டபம் கட்டியது ஏற்கக் கூடியதல்ல என்று கே.ஆர்.ராமசாமி எம்எல்ஏ தெரிவித்தார்.

தேவகோட்டையில் மழையால் பாதிக்கப்பட்ட விளை நிலங்களுக்கு நிவாரணம் வழங்க வேண்டியும், சாலையைச் சீரமைக்காத நெடுஞ்சாலைத் துறையைக் கண்டித்தும், தமிழக சட்டப்பேரவை காங்கிரஸ் குழு தலைவரும், எம்எல்ஏவுமான கே.ஆர்.ராமசாமி, அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி உறுப்பினர் கருமாணிக்கம் முன்னிலையில் பேரணி இன்று நடந்தது.

தியாகிகள் பூங்காவில் தொடங்கிய இந்தப் பேரணி கோட்டாட்சியர் அலுவலகம் வரை சென்றது. இதில் மாநிலச் சிறப்புப் பேச்சாளர் அப்பச்சி சபாபதி, மாவட்டத் தொழில் சங்கத் தலைவர் புஷ்பாராஜா, முன்னாள் நகராட்சித் தலைவர்கள் வேலுச்சாமி, ஜான்சிராணி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

பிறகு கே.ஆர்.ராமசாமி செய்தியாளர்களிடம் கூறும்போது, ''குற்ற வழக்குத் தீர்ப்பின்போது ஜெயலலிதா உயிருடன் இருந்திருந்தால், சிறைக்குச் சென்றிருப்பார். இதனால் அவருக்கு அரசு செலவில் நினைவு மண்டபம் கட்டியது ஏற்கக் கூடியதல்ல. ஊழல்வாதிகள் அமைச்சர்களாக நிறைந்திருக்கும் கட்சிதான் அதிமுக. மக்களைப் பற்றிக் கவலைப்படாத முதல்வராகப் பழனிசாமி உள்ளார். அதனால்தான் விவசாயிகள் நடுரோட்டில் நின்று போராடுகின்றனர். விவசாயிகளின் பாவம், பழி அனைத்துக்கும் ஆளும் கட்சிதான் பொறுப்பேற்க வேண்டும்.

காரைக்குடி தொகுதி விவசாயிகளுக்கு இதுவரை பயிர்க் காப்பீடு வழங்கவில்லை. தேவகோட்டை சாலையைச் சீரமைக்க முதல்வரிடம் மனு கொடுத்தும் நடவடிக்கை இல்லை. சிவகங்கை மாவட்டத்தில் நெடுஞ்சாலைத் துறை செயல்படவில்லை. சாலையைச் சீரமைக்காவிட்டால் 7-ம் நாள் மீண்டும் போராட்டம் நடத்துவோம்'' என்று தெரிவித்தார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in