

குடியரசுத் தலைவர் உரை, கிராமங்களின் துடிப்பை பிரதிபலிக்கவில்லை என்று முத்தரசன் விமர்சித்துள்ளார்.
இதுகுறித்து இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் முத்தரசன் இன்று வெளியிட்ட அறிக்கை:
“கூட்டத்தொடரைத் தொடங்கிவைத்து குடியரசுத் தலைவர் ஆற்றிய உரை பெருவணிக குடும்பங்களின் கோரிக்கைகளில் கவனம் செலுத்தியுள்ளது. கரோனா நோய்ப் பெருந்தொற்றுப் பரவல் தடுப்பு நடவடிக்கைகளில் நாடு முன்னோடியாகத் திகழ்வதாகப் புகழ்ந்துள்ளது. மாநில உரிமைகள் பறிக்கப்படுவதையும், குடிமக்களை மத அடையாளத்துடன் பிளவுபடுத்தும் குடியுரிமைச் சட்டத் திருத்தத்தையும் நியாயப்படுத்தி உள்ளது.
பன்னாட்டு நிறுவனங்களுக்குப் பச்சைக் கொடி காட்டி, சிவப்புக் கம்பளம் விரித்துக் காத்திருப்பதாக அறிவித்துள்ளது. அதேசமயம் எதிர்க்கட்சிகள் அவையில் இல்லாத நேரத்தில் தொழிலாளர் சட்டங்கள் திருத்தப்பட்டது குறித்தோ, எதிர்க்கட்சிகளின் கடுமையான எதிர்ப்பைப் புறக்கணித்து நிறைவேற்றிய விவசாயிகள் விரோதச் சட்டங்கள் குறித்தோ வாய் திறக்காத குடியரசுத் தலைவர் உரை கடந்த ஒன்பது மாதங்களாக வாழ்வுரிமை காக்கப் போராடி வரும் லட்சோப லட்சக்கணக்கான விவசாயிகளின் கோரிக்கைகள் குறித்தும் மௌனம் காக்கிறது.
ஜனநாயகத்தில் மாற்றுக்குரல்களும், விமர்சனங்களும் காது கொடுத்துக் கேட்கப்பட வேண்டும் என்பது நியதியாகும். ஆனால், நாட்டின் கொந்தளிப்பை மூடி மறைத்து, அடக்குமுறையால் ஒடுக்கிவிடலாம் எனக் கருதுவது, “அடுப்பை எரியவிட்டு, உலையை மூடும் முயற்சியாகும்’’ அவையில் உள்ள 16 எதிர்க்கட்சிகளும் குடியரசுத் தலைவரின் உரையைப் புறக்கணித்த நிலை பற்றி குடியரசுத் தலைவர் கவலைப்பட்டதாகத் தெரிவிக்கவில்லை.
ஒரு தரப்பு ஆட்டத்தை ஊக்கப்படுத்துவது ஜனநாயகத்தை அழித்தொழிக்கும் என்பதை அனைவரும் உணர வேண்டும். குடியரசுத் தலைவரின் உரை நாட்டு மக்களின் துயரங்களை மறைத்துப் பசுமை சித்திரம் தீட்டியுள்ளது. கிராமங்களின் உரிமைக் குரலை எதிரொலிக்கத் தவறியுள்ளது. மொத்தத்தில் ஆளும் தரப்புக்கு “ஆமாம்’’ போடுவதாக அமைந்துள்ளது”.
இவ்வாறு முத்தரசன் தெரிவித்துள்ளார்.