Published : 29 Jan 2021 04:31 PM
Last Updated : 29 Jan 2021 04:31 PM

அக்கறையின்மையால் கைநழுவும் அபாயத்தில் மதுரைக்கு அறிவித்த ‘மெகா திட்டங்கள்’ - முதல்வர் கவனிப்பாரா?

அதிமுகவினரின் அரசியலில், அதிகாரிகளின் அக்கறையின்மையால் மதுரைக்கு அறிவித்த ‘எய்ம்ஸ்’, ‘பஸ்போர்ட்’, இரண்டாவது உள்வட்ட சாலை, கோரிப்பாளையம் - பெரியார் பஸ்நிலையம் இடையேயான பறக்கும் பாலம் உள்ளிட்ட பிரமாண்ட திட்டங்கள் அனைத்தும் கைநழுவிப்போகும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

தென் தமிழகத்தின் தலைநகரான மதுரை, தமிழகத்தின் பழமையான பராரம்பரிய நகராக திகழ்கிறது. மற்ற நகரங்களை போல் இல்லாமல் கிராமங்களையும், நகரப்பகுதிகளையும் உள்ளடக்கிய வித்தியாசமான வாழ்விட சூழலை கொண்டுள்ளது.

தூங்கா நகரம் என்ற பெயருக்கேற்றால்போல் இரவு, பகலாக மக்கள் நடமாட்டமும், தொழிலாளர்கள் உழைப்பும் கொண்டுள்ளது. ஆனால், சென்னை, கோவை, திருச்சி, சேலம் போன்ற நகரங்களை ஒப்பிடும்போது மதுரையில் போதிய வாகனப்போக்குவரத்து கட்டமைப்பு வசதிகள் இல்லாமல் நெரிசலால் மக்கள் ஒரிடத்தில் இருந்து மற்றொரு இடத்திற்கு எளிதாக வாகனங்களில் சென்றுவர முடியவில்லை. உதாரணமாக 15 நிமிடத்தில் செல்லக்கூடிய கோரிப்பாளையத்தில் இருந்து பெரியார் பஸ்நிலையம் வரையிலான 3.7 கி.மீ., தொலைவினை கடக்க 30 நிமிடங்கள் முதல் 45 நிமிடங்கள் வரை ஆகுகிறது.

நகர்பகுதியில் வாகனங்கள் ஊர்ந்து செல்லும் நிலை உள்ளதால் முக்கிய ஆன்மீக சுற்றுலாஸ்தலமான மதுரைக்கு ஒரு முறை வந்தவர்கள் மீண்டும் வருவதற்கு தயங்குகின்றனர். மதுரையின் போக்குவரத்தை ஒழுங்கமைக்கவும், சுற்றுலா மட்டுமில்லாது மற்ற துறைகளிலம் மதுரையை மற்ற நகரங்களை மேம்படுத்தவும் கடந்த 10 ஆண்டுகளில் மதுரைக்கு அறிவிக்கப்பட்ட ‘எய்ம்ஸ்’ மருத்துவமனை, பஸ்போர்ட், மோனோ ரயில் திட்டம், கோரிப்பாளையம் முதல் பெரியார் பஸ்நிலையம் வரையிலான பறக்கும் பாலம், சமயநல்லூர்-உத்தங்குடி வரையிலான உள்வட்ட சாலை உள்ளிட்ட பல திட்டங்கள் வெறும் அறிவிப்புடனும், ஆரம்பகட்டநிலையுடன் நிற்கின்றன.

உதாரணமாக ‘எய்ம்ஸ்’ மருத்துமனைக்கு அடிக்கல் நாட்டி 2 ஆண்டுகளாகிவிட்டது. பிரதமரே நேரடியாக வந்து அடிக்கல் நாட்டிய இந்த திட்டத்திற்கு நிதி ஒதுக்கீட்டை பெற்று கட்டுமானப்பணியை தொடங்க மாவட்ட நிர்வாகமும், தமிழக அரசும் ஆர்வம் காட்டவில்லை. அதுபோல், ஒப்புதல் வழங்கப்பட்ட கோரிப்பாளையம்-பெரியார் பஸ்நிலையம் பறக்கும் பாலம் திட்டத்தில் உள்ள பிரச்சனைகளுக்கு தீர்வு கண்டு, அதற்கான பணிகளை தொடங்க அதிகாரிகளும், உள்ளூர் அமைச்சர்களும் நடவடிக்கை எடுக்க அக்கறை காட்டவில்லை.

அதனால், தினமும் மதுரையின் இந்த சாலையில் செல்ல முடியாமல் மக்களும், வாகன ஓட்டிகளும் திண்டாடுகின்றனர். உத்தங்குடி-சமயநல்லூர் உள்வட்ட சாலை அறிவித்தும், அதற்கான பணியை தொடங்காததால் மதுரையின் வடகரைப்பகுதியை சேர்ந்த மக்கள், சேலம், திண்டுக்கல், கரூர், நாமக்கல், கிருஷ்ணகிரி, தர்மபுரி, பெங்களூரு செல்வதற்கும், கோவை செல்வதற்கும் நகர்பகுதியில் வந்து செல்ல வேண்டிய உள்ளது. அதனால், நகர் பகுதியில போக்குவரத்து நெரிசல் அதிகரிக்கிறது.

கோவை, சேலம் நகரத்துடன் சேர்த்து மதுரை அருகே விமானநிலையத்திற்கு இணையான பிரமாண்ட வசதிகளுடன் அமைவதாக அறிவிக்கப்பட்ட ‘பஸ்போர்ட்’ (ஹைடெக் பஸ்நிலையம்), அதிமுகவினரின் அரசியலால் கைவிட்டுப்போய் உள்ளது. திருமங்கலம் அருகே கரடிக்கல் கிராமத்தில், செக்காணூரணி-திருமங்கலம் சாலையில் 4 கி.மீ தொலைவில் உள்ள 56 ஏக்கர் இடமும், திருப்பரங்குன்றம் தொகுதியிலுள்ள மேலக்குயில்குடி கிராமத்தில் உள்ள 54.69 ஏக்கர் இடமும், மாட்டுத்தாவணி பேருந்து நிலையம் அருகேயுள்ள மற்றொரு நிலம் ஆகியவை ஆய்வு செய்யப்பட்டது.

உள்ளூர் அமைச்சர்களின் முயற்சியின்மை காரணமாகவும், இடம் தேர்வு செய்வதில் அதிமுகவினரிடையே ஏற்பட்ட அரசியலால் இந்த திட்டம் என்ன நிலையில் இருக்கிறது என்பது கூட தெரியவில்லை. நில ஆர்ஜிதம் செய்வதில் சிக்கல் மற்றும் நீண்ட கால நடக்கும் மதுரைக்கான பிரமாண்ட திட்டங்களுக்கு தீர்வு காணவும், அதற்கான பணிகளை தொடங்கவும் முயற்சி எடுக்கப்படவில்லை.

எந்த சிக்கலும் இல்லாமல் முடிய கூடிய திட்டங்களுக்கு மட்டுமே மாவட்ட நிர்வாகமும், மாநகராட்சி நிர்வாகமும், அமைச்சர்களும் அக்கறை காட்டுகின்றனர். ஆனால், தொலைநோக்கு பார்வையில் தற்போது மட்டுமில்லாது எதிர்காலத்திற்கு அத்தியாவசியமான திட்டத்திற்கு முக்கியத்துவம் கொடுக்காததால் மதுரையின் வளர்ச்சி தடைப்பட்டுள்ளது. மதுரையில் 30ம் தேதி எம்ஜிஆர்-ஜெயலலிதா கோயிலை திறந்து வைக்க வரும் முதல்வர் கே.பழனிசாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வமும் இந்த திட்டங்களை விரைவாக செயல்படுத்த நேடவடிக்கை எடுக்க வேண்டும் என மக்கள் எதிர்பார்க்கின்றனர்.

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

 
x