

வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல், நீக்கல் தொடர்பான மனுக்கள் தொடர்பாக வாக்குச் சாவடி அதிகாரிகள் கள ஆய்வுக்கு வரும் போது மனுதாரர்கள் ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சந்தீப் சக்சேனா வேண்டுகோள் விடுத்துள்ளார்.
இதுகுறித்து அவர் நேற்று வெளியிட்ட செய்திக்குறிப்பு: இந்திய தேர்தல் ஆணையத்தின் உத்தரவுப்படி, வாக்காளர் பட்டியல் சிறப்பு சுருக்க முறை திருத்தப் பணிகள் நடந்து வருகின்றன. கடந்த செப்டம்பர் 15-ம் தேதி வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப் பட்டது.
வாக்காளர் பட்டியல் பெயர் சேர்த்தல், நீக்குதல், திருத்தம் தொடர்பான மனுக்கள் செப்டம்பர் 15 முதல், அக்டோபர் 24-ம் தேதி வரை பெறப்பட்டன. மாவட்ட வாரியாக பெறப்பட்ட மனுக்கள் பரிசீலிக்கப்பட்டு, மனுக்களின் நிலை குறித்த தகவல் மனுதாரர் கள் அளித்த கைபேசி எண்ணுக்கு குறுஞ்செய்தியாகவும், மின்னஞ் சல் முகவரிக்கும் அனுப்பப்பட்டது.
தற்போது பெறப்பட்ட மனுக்கள் தொடர்பான தகவல் பதிவு முடிந்துவிட்டது. வாக்குச்சாவடி நிலை அதிகாரிகள், மனுக்கள் மீதான கள ஆய்வை நடத்தி வருகின்றனர். போலிப் பதிவுகள் இருப்பின் நீக்குதல் தொடர்பான அறிக்கை அளிக்கப்படுகிறது. கள ஆய்வுக்கு வரும் வாக்குச்சாவடி அதிகாரிகளுக்கு மனுதாரர்கள் ஒத்துழைக்க வேண்டும்.
தங்களது மனு மீதான நடவடிக்கை நிலையை elections.tn.gov.in என்ற இணையதளத்தில் வாக்காளர்கள் அறிந்து கொள்ள லாம். கைபேசி எண்ணை பதிவு செய்துள்ளவர்களுக்கு குறுஞ் செய்தி மூலம் அவ்வப்போது மனு தொடர்பாக தகவல் தெரிவிக்கப் படும் என்று அந்த செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள்ளது.