Published : 29 Jan 2021 11:43 AM
Last Updated : 29 Jan 2021 11:43 AM

மெரினா கடற்கரையில் நம்ம CHENNAI அடையாளச் சிற்பமா? -தமிழை அவமதிக்கும் மொழிக்கலப்பு சின்னமா?- வைகோ கண்டனம்

சென்னை

சென்னை மெரினா கடற்கரையில், மாநகராட்சியால் கட்டப்பட்டுள்ள, நம்ம CHENNAI என்ற அடையாளச் சின்னத்தை நேற்று தமிழக முதல்வர் திறந்து வைத்துள்ளார். இது அடையாளச் சின்னமாகத் தெரியவில்லை, மாறாக, நம் தாய்த் தமிழ் மொழியை அவமதிக்கும் சின்னமாக உள்ளது, மொழிக் கலப்பை ஊக்கப்படுத்துகிறதா தமிழக அரசு? என வைகோ கேள்வி எழுப்பியுள்ளார்.

இதுகுறித்து மதிமுக பொதுச் செயலாளர் வைகோ இன்று வெளியிட்டுள்ள அறிக்கை:

சென்னை மெரினா கடற்கரையில், மாநகராட்சியால் கட்டப்பட்டுள்ள, நம்ம CHENNAI என்ற அடையாளச் சின்னத்தை நேற்று தமிழக முதல்வர் திறந்து வைத்துள்ளார். இது அடையாளச் சின்னமாகத் தெரியவில்லை. மாறாக, நம் தாய்த் தமிழ் மொழியை அவமதிக்கும் சின்னமாக உள்ளது.

சென்னை சீர்மிகு நகரத்திட்டத்தின் கீழ், மெரினா கடற்கரையில் ரூ. 24 லட்சம் செலவில் ராணி மேரி கல்லூரி அருகில், சென்னையின் பெருமை, மாண்பை கொண்டாடும் விதத்திலும், பொதுமக்கள் தாங்களே சுய புகைப்படம் (செல்ஃபி) எடுத்து, சென்னை மாநகரத்தின் மீதுள்ள அன்பை வெளிப்படுத்திடவும் இந்தச் சிற்பத்தை அமைத்ததாகக் கூறப்படுகின்றது.

இனி சென்னையில் ஒரு முக்கிய அடையாளமாக திகழும். உலகின் பல நாடுகளிலும், டெல்லி, ஐதராபாத், பெங்களூரு நகரங்களில் உருவாக்கப்பட்டுள்ள சிற்பங்களின் தொடர்ச்சியாகவும், இந்தச் சிற்பம் உருவாக்கப்பட்டுள்ளதாக, சென்னை மாநகராட்சி நிர்வாகம் பெருமை பேசுகின்றது.

அண்ணா முதல்வராக இருந்தபோது, இதே சென்னை கடற்கரையில், தமிழுக்குத் தொண்டு ஆற்றிய திருவள்ளுவர், ஒளவையார், வீரமா முனிவர், பாரதி, பாரதிதாசன் என தமிழ்ப் புலவர்களுக்கு சிலை அமைத்துத் திறந்தார்.

அதேபோல, கருணாநிதி திருவள்ளுவருக்கு அமைத்த கோட்டம் செம்மாந்து நிற்கின்றது. நாகரிக வளர்ச்சியில் உலகத்தோடு ஒத்துப் போக வேண்டும் என்பதில் மாற்றுக் கருத்து இல்லை. அதற்காக மொழிக் கலப்புக்கு அரசு துணை போகக் கூடாது. தமிங்கில மொழியில் எழுதக்கூடாது.

தமிழ் வளர்ச்சித் துறை என்ற துறையை உருவாக்கி, ஒரு அமைச்சர் பொறுப்பு வகிக்கும் நம் மாநிலத்தில் இப்படி தமிழைச் சிதைக்கும் பணிகளில் ஈடுபடக்கூடாது. ஒரு புறம் மத்திய அரசால் புகுத்தப்படும் இந்தித் திணிப்பு, மறுபுறம் தமிழக அரசின் மொழிச் சிதைப்பு வேதனை அளிக்கின்றது.

தில்லியில் நடந்த குடியரசு தின அணிவகுப்பில் தமிழக அரசின் சார்பில் அனுப்பப்பட்ட அலங்கார ஊர்தியில், தமிழ் மொழியை முற்றிலும் புறக்கணித்து, இந்தியில் மட்டுமே எழுதி இருந்தார்கள்.

இன்றைய இளைஞர்கள், தமிழ் மொழி மீது உள்ள வேட்கையால் தாங்கள் அணிகின்ற பனியனில் ‘ழ’ என்று வள்ளுவர், பாரதி படங்களையும் நாகரிக வண்ணத்தில் அச்சிட்டு அணிவதைப் பெருமையாகக் கருதுகின்றனர்.

எந்த ஒரு மொழியும் அழிந்துவிடக் கூடாது. அவரவர் தாய்மொழி பாதுகாக்கப்பட வேண்டும் என்பதில் உறுதியாக இருப்பவன் என்கிற உணர்வில், இதுபோன்ற பிறமொழிக் கலப்பில் தமிழக அரசு ஈடுபடுவதைக் கண்டிக்கின்றேன்.

உலகத்தின் இணைப்பு மொழி தான் ஆங்கிலமே தவிர, தமிழ் மொழியுடன் கலப்பில் பிணையும் மொழி அல்ல என்பதை, சென்னை மாநகராட்சி அதிகாரிகள் உணர வேண்டும்.

சென்னையின் அடையாளமாகத் திகழும், நம்ம CHENNAI சிற்பத்தில், ‘நம்ம சென்னை' என தமிழில் முதலிலும், அடுத்து, CHENNAI - TAMILNADU என ஆங்கிலத்திலும் மாற்றி அமைத்திட நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் கேட்டுக் கொள்கின்றேன்”.

இவ்வாறு வைகோ வலியுறுத்தியுள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x