Published : 29 Jan 2021 03:13 AM
Last Updated : 29 Jan 2021 03:13 AM

இந்தி திணிப்பு , ஜல்லிக்கட்டு தடை என தமிழ் கலாச்சாரத்துக்கு எதிரானது காங்கிரஸ்: தமிழக பாஜக பொறுப்பாளர் சி.டி.ரவி குற்றச்சாட்டு

தமிழகம், தமிழ் கலாச்சாரத்துக்கு எதிரான கட்சி காங்கிரஸ் என்று பாஜக தேசிய பொதுச் செயலாளரும், அக்கட்சியின் தமிழக பொறுப்பாளருமான சி.டி.ரவி குற்றம்சாட்டியுள்ளார்.

சென்னை கமலாலயத்தில் செய்தியாளர்களிடம் சி.டி.ரவி நேற்று கூறியதாவது:

காங்கிரஸ் முன்னாள் தலைவர்ராகுல் காந்தி, தமிழ் கலாச்சாரத்துக்கு எதிராக பாஜக செயல்படுவதாக பேசியுள்ளார். அவர் வரலாற்றை திரும்பிப் பார்க்க வேண்டும். இந்தி எதிர்ப்பு போராட்டம் மூலம்தான் காங்கிரஸை வீழ்த்தி 1967-ல் திமுக ஆட்சியைப் பிடித்தது. மத்தியில் காங்கிரஸ் ஆட்சியில் இருந்தபோது இந்தி மொழியை திணித்தது. அதை எதிர்த்துதான் திமுக போராடியது.

ஜல்லிக்கட்டு போட்டிக்கு கடந்த 2011-ல் மத்தியில் ஆட்சியில் இருந்த காங்கிரஸ் அரசு தடை விதித்தது. ஜல்லிக்கட்டு போட்டியை காட்டுமிராண்டித்தனம் என்று காங்கிரஸ் மத்திய அமைச்சர்கள் விமர்சித்தனர். இதுபோல, அனைத்திலும் தமிழகத்துக்கு, தமிழ் கலாச்சாரத்துக்கு எதிராக செயல்படும் கட்சி காங்கிரஸ்தான். ஆனால், இப்போது ஓட்டு அரசியலுக்காக நாடகமாடுகிறது.

முருகப் பெருமானின் கந்த சஷ்டி கவசம் பாடலை திமுக ஆதரவாளர்கள் இழிவுபடுத்தினர். அதன் பின்னணியில் திமுக இருக்கிறது. இதை மக்களிடம் அம்பலப்படுத்தவே வெற்றிவேல் யாத்திரை நடத்தினோம். அதன் விளைவாக இன்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலினே முருகனின் வேலுடன் காட்சி தருகிறார். தமிழ்க் கடவுள் வேறு, இந்துக் கடவுள் வேறு அல்ல. உலகத்துக்கே பொதுவான கடவுள் முருகப் பெருமான்.

பாஜக ஆட்சியில் இருக்கும் கர்நாடகாவைவிட தமிழகத்துக்கு அதிக மருத்துவக் கல்லூரிகள் ஒதுக்கப்பட்டுள்ளன. ஸ்மார்ட் சிட்டி திட்டத்திலும் கர்நாடகாவைவிட தமிழகத்துக்கு அதிக முக்கியத்துவம் தரப்பட்டுள்ளது.

இவ்வாறு சி.டி.ரவி கூறினார்.

தமிழக பாஜக தலைவர் எல்.முருகன், துணை தலைவர் அண்ணாமலை, குஷ்பு, மாநில ஊடகப் பிரிவு தலைவர் ஏஎன்எஸ் பிரசாத் உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x