Published : 29 Jan 2021 03:13 AM
Last Updated : 29 Jan 2021 03:13 AM

சீர்காழியில் தாய், மகனை கொன்று 16 கிலோ தங்கம் கொள்ளை: என்கவுன்ட்டர் நடந்த இடத்தில் நீதிபதிகள் ஆய்வு; 3 கொள்ளையர்கள் சிறையில் அடைப்பு

சீர்காழியில் தாய், மகனைக் கொன்று, 16 கிலோ தங்க நகைகள் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவத்தில் கைது செய்யப்பட்ட 3 கொள்ளையர்களும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு, சிறையில் அடைக்கப்பட்டனர். என்கவுன்ட்டர் நடந்த இடத்தில் 2 நீதிபதிகள் ஆய்வு செய்தனர்.

மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி ரயில்வே சாலையில் வசிப்பவர் தன்ராஜ் (50). நகை வியாபாரி. நேற்று முன்தினம் காலை இவரது வீட்டுக்குள் புகுந்த ராஜஸ்தான் மாநிலத்தை சேர்ந்த மணிபால்சிங், ரமேஷ், மணிஸ், கருணாராம் ஆகிய 4 பேர், தன்ராஜின் மனைவி ஆஷா, மகன் அகில் ஆகியோரை கத்தியால் கழுத்தை அறுத்து கொலை செய்தனர்.

தன்ராஜ் மற்றும் அவரது மருமகள் நெக்கல் ஆகியோரை கத்தியால் குத்தி, மிரட்டிய கொள்ளையர்கள், வீட்டில் இருந்த 16 கிலோ தங்க நகைகள், ரூ.6.5 லட்சத்தை கொள்ளையடித்துக் கொண்டு, தன்ராஜின் காரில் ஏறி தப்பினர்.

இவர்களில், கருணாராம் மட்டும் கொலை நடந்ததால் பயந்துபோய், மற்ற 3 பேரையும் விட்டுவிட்டு கும்பகோணத்துக்கு தப்பிச் சென்றார்.

இந்த நிலையில், காரில் தப்பிச் சென்ற மணிபால்சிங், ரமேஷ், மணிஸ் ஆகிய 3 பேரும் ஓலையாம்புத்தூரில் காரை நிறுத்திவிட்டு, எருக்கூரில் உள்ள வயல் பகுதியில் மறைந்திருந்தனர். இதுகுறித்து கிராம மக்கள் கொடுத்த தகவலின்பேரில், எருக்கூருக்கு சென்ற மயிலாடுதுறை காவல் கண்காணிப்பாளர் நாதா மற்றும் போலீஸார், கொள்ளையர்கள் 3 பேரையும் கைது செய்தனர். அப்போது, போலீஸாரை தாக்கிவிட்டு தப்ப முயன்ற மணிபால்சிங்கை போலீஸார் என்கவுன்ட்டரில் சுட்டுக் கொன்றனர்.

இதற்கிடையே, கும்பகோணத்துக்கு தப்பிச் சென்ற கருணாராமை வாகன சோதனையின்போது பிடித்த கும்பகோணம் நகர போலீஸார், அவரை சீர்காழி போலீஸாரிடம் நேற்று முன்தினம் இரவு ஒப்படைத்தனர்.

இதையடுத்து, சீர்காழி ஒருங்கிணைந்த நீதிமன்றத்தில் கொள்ளையர்கள் ரமேஷ், மணிஸ், கருணாராம் ஆகிய 3 பேரையும் சீர்காழி போலீஸார் நேற்று ஆஜர்படுத்தினர். அவர்களை 15 நாட்கள் காவலில் வைக்க நீதிபதி உத்தரவிட்டதைத் தொடர்ந்து, 3 பேரும் நாகை மாவட்ட சிறையில் அடைக்கப்பட்டனர்.

நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துவதற்காக அழைத்துவரப்பட்ட ரமேஷ், மணிஸ் ஆகியோரது வலது கைகளில் கட்டு போடப்பட்டிருந்தது. வைத்தீஸ்வரன்கோவில் காவல் நிலையத்தில் விசாரணை நடத்தியபோது, இருவரும் கழிப்பறையில் வழுக்கி விழுந்து, காயமடைந்ததாக போலீஸார் கூறினர்.

இந்நிலையில், எருக்கூரில் மணிபால்சிங் என்கவுன்ட்டர் செய்யப்பட்ட இடத்தில் நாகை மாவட்டமுதன்மை அமர்வு நீதிபதி ஜெகதீசன், சீர்காழி ஒருங்கிணைந்த நீதிமன்ற நீதிபதி அமிர்தம் நேற்றுஆய்வு செய்தனர். கொள்ளையர்களிடம் இருந்து கைப்பற்றப்பட்ட 16 கிலோ தங்க நகைகள், ரூ.6.5 லட்சம், துப்பாக்கி ஆகியவற்றையும் அவர்கள் பார்வையிட்டனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x