Published : 29 Jan 2021 03:14 AM
Last Updated : 29 Jan 2021 03:14 AM

சென்னை மின்சார ரயில்களில் சீசன் டிக்கெட்டுகள் மீண்டும் வழங்கப்படுமா?- லட்சக்கணக்கான பயணிகள் எதிர்பார்ப்பு

சென்னை

மின்சார ரயில்களில் பொதுமக்களுக்கு சீசன் டிக்கெட் மீண்டும் வழங்கப்படுமா என லட்சக்கணக்கான பயணிகள் எதிர்பார்த்துள்ளனர்.

புறநகர் மின்சார ரயில்களில் பயணிக்கும் ஒட்டுமொத்த ரயில் பயணிகளில் 40 சதவீதம் பேர் சீசன் டிக்கெட்களைப் பயன்படுத்தி வந்தனர். இந்நிலையில், கடந்தஆண்டு மார்ச் 25 முதல் அமல்படுத்தப்பட்ட கரோனா ஊரடங்கின்போது, மின்சார ரயில்களின் சீசன் டிக்கெட் வசதியும் நிறுத்தப்பட்டது.

தற்போது, படிப்படியாக ஊரடங்கு தளர்வு அளிக்கப்பட்டு, வழக்கம்போல் மின்சார ரயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன. இருப்பினும், அலுவலக நேரங்களில் மின்சார ரயில்களில் பொதுமக்கள் பயணிப்பதற்கான நேரக்கட்டுப்பாடு இருந்து வருகிறது. தற்போது அரசு மற்றும் தனியார் துறைகளில் அத்தியாவசியப் பணிகளுக்கு செல்வோர் மற்றும் இதர பணியாளர்களுக்கு மட்டுமே அவர்கள் பணியாற்றும் நிறுவனங்களின் அத்தாட்சி கடிதத்தின்பேரில் சீசன் டிக்கெட் வழங்கப்படுகிறது. மற்ற பொதுப் பயணிகளுக்கு சீசன் டிக்கெட் வழங்கப்படுவதில்லை.

இது தொடர்பாக பயணிகள் சிலர் கூறும்போது, ‘‘மாநகரப் பேருந்துகளை ஒப்பிடும்போது, மின்சார ரயில்களில் கட்டணம்குறைவு என்பதால், லட்சக்கணக்கான மக்கள் மின்சார ரயில்களில் பயணம் செய்து வருகின்றனர்.

தினசரி பயணிப்போர் பெரும்பாலும் சீசன் டிக்கெட் எடுத்து விடுவது வழக்கம். தற்போது சீசன் டிக்கெட் மற்றும் ரிட்டர்ன் டிக்கெட் வழங்கப்படுவது இல்லை. இதனால் டிக்கெட் வாங்குவதற்கு தினமும் நீண்ட நேரம் வரிசையில் நிற்க வேண்டி உள்ளது.

எனவே, பொதுமக்களின் வசதியைக் கருத்தில் கொண்டு சீசன் மற்றும் ரிட்டர்ன் டிக்கெட்வழங்க நடவடிக்கை எடுக்கவேண்டும். மேலும், பொதுமக்கள் பயணிப்பதற்கான நேரக்கட்டுபாடுகளையும் நீக்க வேண்டும்’’ என்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x