

முன்னாள் எம்.எல்.ஏ. நிலக் கோட்டை ஏ.எஸ்.பொன்னம்மாள் மறைவுக்கு அரசியல் கட்சித் தலை வர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர்.
இது தொடர்பாக அவர்கள் நேற்று வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:
கருணாநிதி (திமுக தலைவர்):
அனைத்துக் கட்சித் தலைவர்களாலும் அக்கா என்று அழைக்கப்பட்ட பொன்னம்மாள் மறைவு செய்தி கேட்டு மிகவும் அதிர்ச்சி அடைந்தேன். இளம் வயதிலேயே காங்கிரஸில் இணைந்து சோழவந்தான், நிலக்கோட்டை தொகுதியிலிருந்து சட்டப்பேரவைக்கு தேர்ந்தெடுக்கப் பட்டு மக்களுக்காக உழைத்தவர். திமுக ஆட்சியில் அவருக்கு தமிழக அரசின் காமராஜர் விருது வழங்கப்பட்டது. அவரது மறைவால் வாடும் குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் (தமிழக காங்கிரஸ் தலைவர்)
ஏழு முறை எம்.எல்.ஏ.வாக இருந்த ஏ.எஸ்.பொன்னம்மாளின் மறைவு செய்து கேட்டு மிகவும் துயரம் அடைந்தேன். 35 ஆண்டுகள் எம்.எல்.ஏவாக மக்கள் பணியாற்றிய அவர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றபோது ராகுல் காந்தி தொலைபேசியில் நலம் விசாரித்தார். அவருக்கு சிகிச்சை அளிக்க தயாராக இருப்பதாக தெரிவித்ததை இப்போது நினைவுகூர விரும்புகிறேன். பொன்னம்மாளின் மறைவு தமிழகத்துக்கும், காங்கிரஸ் கட்சிக்கும் ஈடு செய்ய முடியாத பேரிழப்பாகும்.
ராமதாஸ் (பாமக நிறுவனர்)
முதுபெரும் காங்கிரஸ் தலைவர்களில் ஒருவரும், எளிமைக்கு பெயர் பெற்றவருமான பொன்னம்மாளின் மறைவுச் செய்தியறிந்து மிகவும் துயரம் அடைந்தேன். காமராஜரின் நம்பிக்கையைப் பெற்ற அவர், சட்டப்பேரவையில் வாதம் புரிந்து உண்மையை நிலைநாட்டியவர். அவரது மறைவு காங்கிரஸுக்கு பேரிழப்பாகும்.
திருமாவளவன் (விடுதலைச் சிறுத்தைகள் கட்சி தலைவர்)
காமராஜர், கக்கன் ஆகியோரின் அன்பைப் பெற்ற பொன்னம்மாள் மறைவு அதிர்ச்சியும், வேதனையும் அளிக்கிறது. தலித் சமூகத்தில் பிறந்து 7 முறை எம்.எல்.ஏ.வாகி அனைத்து தரப்பினரின் மனங்களையும் வென்றவர். பொதுவாழ்வில் நேர்மைக்கும், எளிமைக்கும் இலக்கணமாக வாழ்ந்த அவர் பெண்களுக்கு முன்னுதாரணமாக விளங்கியவர்.