Published : 19 Nov 2015 07:58 PM
Last Updated : 19 Nov 2015 07:58 PM

நிவாரணப் பணி எப்படி?- வில்லிவாக்கம் வழியே ஒரு பார்வை

வடகிழக்குப் பருவமழை, தமிழகத்தையே புரட்டிப் போட்டிருக்கிறது. சென்னை, கடலூர் உள்ளிட்ட பல மாவட்டங்களில் மிகப் பெரிய சேதங்கள் ஏற்பட்டுள்ளன.

மீட்புப் பணிகள், வெள்ளத்தை வெளியேற்றும் நடவடிக்கைகளுக்குப் பிறகு, பாதிக்கப்பட்ட பகுதிகளில் கொஞ்சம் கொஞ்சம் வெள்ளம் வடிந்துவரும் நிலையில், மக்கள் இயல்பு நிலைக்குத் திரும்புகின்றனர். இந்தத் தருணத்தில் நிவாரணப் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன.

குறிப்பாக, சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் நிவாரணப் பணிகள் எப்படி நடைபெற்று வருகின்றன என்பதை அறிய, அதிகம் பாதிக்கப்பட்டவற்றில் ஒரு பகுதியை விசிட் செய்யலாம் என நினைத்தேன்.

வேளச்சேரி, ஓ.எம்.ஆர்., வில்லிவாக்கம் பகுதிகளில் வசிக்கும் மக்கள் பெரிய அளவில் அவதிப்பட்டு வருவதால், சாம்பிளுக்கு வில்லிவாக்கம் தொகுதியை இன்று (வியாழக்கிழமை) நேரில் பார்வையிட்டேன்.

வில்லிவாக்கம்- கள நிலவரம்

வில்லிவாக்கம் தொகுதியில் அன்னை சத்யா நகர், சிட்கோ நகர் முழுக்கவும் தண்ணீர் வெள்ளமாகக் காட்சி அளிக்கிறது. சூடாகத் தயாரிக்கப்பட்ட உணவுகள், அங்கே வசிப்பவர்களுக்குத் தொடர்ந்து வழங்கப்படுகின்றன. ஆவின் நிறுவனம் பால் பாக்கெட்டுகளை அளித்து வருகிறது. பிரெட் மற்றும் தண்ணீர் பாக்கெட்டுகள் அளிக்கப்பட்டு வருகின்றன.

24 மணி நேர மருத்துவ முகாம்கள் இயங்குகின்றன. அங்கே அடிப்படை மருந்துகள், சுகாதாரத்துக்கான தடுப்பூசிகள், நிலவேம்புக் குடிநீர் ஆகியவை வழங்கப்படுகிறது. மோட்டார்கள் கொண்டு தண்ணீர் தொடர்ந்து வெளியேற்றப்பட்டு வருகிறது. தமிழ்நாடு காவல்துறையும், தீயணைப்புத் துறையும் முழுவீச்சில் இயங்கி வருகிறது.

திமுக, 'வெள்ள நிவாரண குழு' என்ற பெயரில், மக்களுக்கு தண்ணீர் மற்றும் உணவுப் பொட்டலங்களை வழங்கி வருகிறது. பாஜக சார்பில் ஆர்.எஸ்.எஸ். அமைப்பு, உணவுப் பொட்டலங்களை அளித்து வருகிறது.

பொதுமக்களின் அதிருப்தி குரல்கள்

இந்த நிவாரணப் பணிகள் மட்டும் போதாது என்பதே பொதுமக்களின் குரலாக ஒலிக்கிறது.

சிட்கோ நகர், 58வது தெருவைச் சேர்ந்த முதியவர் ராமசாமி, "இதுவரைக்கும் இப்படி ஒரு தண்ணியப் பாத்ததே இல்லை. 1981-ல ஒரு தடவை தண்ணி வந்தது. ஆனால் இவ்வளவு மோசமா இல்லை. ஏன் இந்த தடவை இப்படித் தண்ணி வந்துதுன்னு தெரியலை. இனியும் இப்படி நடக்காம அரசுதான் கவனமா முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கணும்" என்றார்.

அங்கிருந்த பெண்மணி ஒருவர், "எங்க தெருவுக்கு மட்டும் எதுவும் கிடைப்பதில்லை. தண்ணீர் மட்டுமே கிடைத்திருக்கிறது. இது மிகவும் உள்ளடங்கிய நிலையில் இருப்பதால் இங்கே யாருமே வருவதில்லை. ஓட்டு கேட்க வரும்போது பார்த்துக் கொள்கிறேன்" என்றார்.

சிட்கோ நகர் பெண்கள் சிலர், தங்கள் தெருக்களின் நிலை குறித்து கவலை தெரிவித்தனர். '' நான்கு நாட்களாக மின்சாரமே இல்லை. இரவில் சரியாகத் தூங்க முடிவதில்லை. குழந்தைகளும், முதியோர்களும் மிகுந்த அவதிக்கு உள்ளாகினர். தேங்கி நிற்கும் கழிவு நீரால் கொசுக்கள் உற்பத்தியாகத் தொடங்கிவிட்டன.

அசுத்த நீரை அவசரகதியில் வெளியேற்ற வேண்டும். மின்சாரம் இல்லாததால் மின்விசிறி இன்றி, குழந்தைகள் தூங்க முடியவில்லை. சாக்கடை, கழிவுப் பொருட்கள் உள்ளிட்ட ஏராளமான பொருட்கள் தண்ணீரில் மிதந்த வண்ணம் உள்ளன. அரசு இதில் தீவிர கவனம் செலுத்த வேண்டும்" என்றனர்.

தெருக்கோடியில் நிறுத்தும் அரசு: தமிழிசை சவுந்தராஜன்

தொகுதி நிலவரத்தை அறியவும், நிவாரணப் பணிகளை வழங்கவும் பல்வேறு கட்சித் தலைவர்கள் வருகை தருகின்றனர். நான் சென்றபோது, அங்கு தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் வந்தார். அவரிடம் பேசினேன்.

"மழை பெய்யத் தொடங்கிய உடனேயே பாஜக தொண்டர்கள், தங்கள் தொகுதி நிலவரங்களைத் தலைமைக்கு அறிவித்தனர். இதன்படி, வில்லிவாக்கம், ஓ.எம்.ஆர்., எண்ணூர் பகுதிகளில் பொதுமக்களுக்கு உணவுகள் வழங்கப்பட்டு வருகின்றன.

மழைநீர் வடிகால்வாய்கள் கட்டுமானத்துக்காக சுமார் ரூ.5 ஆயிரம் கோடி, நிவாரண உதவிக்கும், மறு சீரமைப்புக்கும் ரூ.500 கோடி, கொசு ஒழிப்புக்கு ரூ.2 கோடி உள்ளிட்ட அரசுத் திட்டங்கள் என்னவாயின? கோடிகளை ஒதுக்குகிறோம் என்று கூறியே அரசாங்கம், மக்களை தெருக்கோடிக்கு கொண்டு வந்து நிறுத்திவிட்டது" என்று தமிழிசை சவுந்தரராஜன் குற்றம்சாட்டினார்.

ஏன் அதிக தண்ணீர் வந்தது? - எம்எல்ஏ விளக்கம்

தொகுதியில் உணவுப் பொட்டலங்களை வழங்கிக் கொண்டிருந்த வில்லிவாக்கம் தொகுதி எம்.எல்.ஏ. பிரபாகரனிடம் பேசினேன். ஏன் அதிக தண்ணீர் வந்தது என்பதற்கான காரணத்தை விளக்கினார்.

"சிட்கோ நகர், அன்னை சத்யா நகர், பலராமபுரம், வள்ளியம்மாள் நகர் உள்ளிட்ட நகர்கள்தான் அதிகமாகப் பாதிக்கப்பட்டுள்ளன. இந்தளவுக்கு இங்கே தண்ணீர் வந்ததற்கு சில காரணங்கள் உள்ளன. வில்லிவாக்கம் 100 அடி சாலை விரிவாக்கம் செய்யப்பட்டபோது அங்கிருந்த கால்வாயை கட்டி முடிக்கவில்லை.

கொரட்டூர், அம்பத்தூர், திருவள்ளூர் ஆகிய இடங்களில் இருந்து தண்ணீர் வருவதற்கு தனியாகக் கால்வாய் இருக்கிறது. அங்கே 100 மீ கால்வாய் கட்டப்படவில்லை. அங்கு தேங்கும் தண்ணீரும் ஊருக்குள் வருகிறது.

அடுத்ததாக சென்னை குடிநீர் கழகத்துக்கு சொந்தமான இடத்தில் ஒரு குளம் இருந்தது. மெட்ரோ ரயில் பணிகளுக்காக அங்கே மணலைக் கொட்டி மேடாக்கினர். அதனால் அங்கே தேங்க முடியாத தண்ணீர் சிட்கோ நகருக்குள் வந்துவிட்டது. காரணங்களைக் கண்டறிந்த பின்னர், துரித கதியில் நிவாரணங்கள் அளிக்கப்படுகின்றன. மக்களுக்கு மருத்துவ, உணவு வசதிகள் செய்யப்பட்டுள்ளன. 20 ஆயிரம் அம்மா குடிநீர் பாட்டில்கள் வழங்கப்பட்டுள்ளன'' என்றார்.

களிம்புகளை கேட்கும் மக்கள்

கீழ்ப்பாக்கம் மருத்துவக் கல்லூரி மருத்துவர்களால், பருவமழை கால சிறப்பு மருத்துவ முகாம் நடத்தப்பட்டு வருகிறது.

பணிகள் குறித்து கீழ்ப்பாக்கம் மருத்துவக் கல்லூரி டீன் நாராயண பாபுவிடம் பேசினேன். "மருத்துவ முகாம்கள் 24 மணி நேரமும் தொடர்ந்து செயல்பட்டு வருகின்றன. தடுப்பூசிகள், நோய்க்கான மாத்திரைகள், நோய்த் தடுப்பு மருந்துகள், நிலவேம்புக் குடிநீர் ஆகியவை வழங்கப்பட்டு வருகின்றன. மழையால் கை கால்கள் பிடித்துக் கொண்டு வலி ஏற்படுவதால், மக்கள் அதிக அளவில் களிம்புகளைக் கேட்டு வாங்கிச் செல்கிறார்கள்" என்றார்.

தீயணைப்புத் துறை அதிகாரியின் ஆதங்கம்

தீயணைப்புத் துறை உயரதிகாரி ஒருவரிடம் பேசினேன். "தண்ணீர் வடிந்துவிடும் என்ற நம்பிக்கையில், சிலர் வீட்டை விட்டு நகராமலேயே இருக்கின்றனர். மீட்க வரும் தீயணைப்புத் துறையினரிடம், நிலைமையின் தீவிரம் புரியாமல், வாதாடுகின்றனர். மக்கள் கொஞ்சம் புரிந்துகொண்டு ஒத்துழைப்பு கொடுத்தால் போதும். எங்கள் கடமையைச் சரியாகச் செய்ய முடியும்" என்றார்.

அமைச்சர்கள் குழு, அரசியல் தலைவர்கள் தவிர ஏராளமான தனியார் அமைப்புகளும், தன்னார்வலர்களும் தண்ணீரில் தவிப்பவர்களை மீட்டு, உணவுப் பொருட்களை வழங்கி வருவதைப் பார்க்கும்போது மனிதம் மீதான நம்பிக்கை துளிர்விட்டது.

படங்கள்:எல்.சீனிவாசன்

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x