Published : 28 Jan 2021 10:07 PM
Last Updated : 28 Jan 2021 10:07 PM

ராஜா முத்தையா மருத்துவக் கல்லூரியை அரசு மருத்துவக் கல்லூரியாக மாற்றினால் போதாது; அரசுக் கட்டணம் அமலாக வேண்டும்: டாக்டர்கள் சங்கம்

சென்னை

சிதம்பரம் ராஜா முத்தையா மருத்துவக் கல்லூரியைச் சுகாதாரத்துறைக்கு மாற்றம் செய்து தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. இதை வரவேற்றுள்ள சமூக சமத்துவத்திற்கான டாக்டர்கள் சங்கம், அரசாணையோடு நின்றுவிடாமல் கல்விக் கட்டணத்தை உடனடியாகக் குறைக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளது.

தமிழக அரசின் இதர மருத்துவக் கல்லூரிகளில் எம்பிபிஎஸ் படிப்பிற்கு கல்விக் கட்டணம் ஆண்டுக்கு ரூ.13,600 மட்டுமே. ஆனால், தமிழக அரசே ஏற்று நடத்தும் ராஜா முத்தையா மருத்துவக் கல்லூரியில் கல்விக் கட்டணம் ரூ 5.44 லட்சமாகும். கடலூர் அரசு பல் மருத்துவக் கல்லூரிக்கு (பழைய பெயர் ராஜா முத்தையா பல் மருத்துவக் கல்லூரி), அரசு பல் மருத்துவக் கல்லூரியின் கட்டணமான ரூ.11,610-ஐ மட்டுமே கட்டணமாக நிர்ணயிக்க வேண்டும் என்ற கோரிக்கை தொடர்ந்து எழுப்பப்பட்டு வந்தது.

இக்கல்லூரிகளில் பயிலும் முதுநிலை மருத்துவம்/ முதுநிலை பல் மருத்துவம் பயிலும் மாணவர்களின் கல்விக் கட்டணத்தையும், இதர அரசு மருத்துவக் கல்லூரிகளுக்கு இணையாகக் குறைக்க வேண்டும், ராஜா முத்தையா மருத்துவக் கல்லூரி, பல் மருத்துவக் கல்லூரிகளை தமிழ்நாடு டாக்டர் எம்.ஜி.ஆர். மருத்துவப் பல்கலைக் கழகத்துடன் உடனடியாக இணைக்க வேண்டும் என மாணவர்கள், பெற்றோர்கள் பல ஆண்டுகளாகப் போராடி வருகின்றனர். இந்நிலையில் கடந்த வாரம் போராடும் மாணவர்களை நிர்வாகம் வெளியேற்றியது. இதனால் போராட்டம் வலுத்தது.

இந்நிலையில் சிதம்பரம் ராஜா முத்தையா மருத்துவக் கல்லூரியைச் சுகாதாரத்துறைக்கு மாற்றம் செய்து தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. இனி சிதம்பரம் ராஜா முத்தையா மருத்துவக் கல்லூரி, கடலூர் அரசு மருத்துவக் கல்லூரி என அழைக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. மாணவர்களின் தொடர் போராட்டம் காரணமாக தமிழக அரசு நடவடிக்கை எடுத்துள்ளதை கல்வியாளர்கள் வரவேற்றுள்ளனர்.

தமிழக அரசின் அறிவிப்பை வரவேற்றுள்ள சமூக சமத்துவத்திற்கான டாக்டர்கள் சங்கம், சுகாதாரத்துறையுடன் இணைக்கும் கால வரம்பை நிர்ணயிக்காதது குறித்து அதிருப்தி தெரிவித்துள்ளது.

இதுகுறித்து சமூக சமத்துவத்திற்கான டாக்டர்கள் சங்கப் பொதுச் செயலாளர் ஜி.ஆர்.ரவீந்திரநாத் இன்று விடுத்துள்ள அறிக்கை:

“ராஜா முத்தையா மருத்துவக் கல்லூரி, பல் மருத்துவக் கல்லூரி தொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள அரசாணை வரவேற்புக்குரியது. ஆனால், அக்கல்லூரிகளை மக்கள் நல்வாழ்வுத் துறையோடும், தமிழ்நாடு டாகடர் எம்ஜிஆர் மருத்துவப் பல்கலைக்கழகத்தோடும் இணைப்பது தொடர்பாக காலவரம்பை நிர்ணயிக்கவில்லை. இது ஏமாற்றம் அளிக்கிறது.

இந்த அரசாணை கடந்த 2020 மார்ச் மாதமே வெளியிடப்பட்டிருக்க வேண்டும். 7 மாதங்களுக்கு மேல் காலதாமதமாகியுள்ளது. மருத்துவ மாணவர்களின் போராட்டத்தால்தான் தற்பொழுதாவது இந்த அரசாணை வெளியாகியுள்ளது.

எனவே, கல்லூரிகளைச் சுகாதாரத்துறை மற்றும் தமிழ்நாடு டாக்டர் எம்ஜிஆர் மருத்துவப் பல்கலைக்கழகத்தின் கீழ் மாற்றுவதற்கான கால வரம்பையும் தமிழக அரசு உடனடியாக அறிவிக்க வேண்டும். கட்டண வசூலை உடனடியாக நிறுத்த வேண்டும்.

இதர அரசு மருத்துவக் கல்லூரிகளின் கட்டணம்தான் ராஜா முத்தையா மருத்துவக்கல்லூரி (RMMC), ராஜா முத்தையா பல் மருத்துவக் கல்லூரிக்கும் (RMDC) என்பதை உடனடியாக அறிவிக்க வேண்டும். ஈரோடு பெருந்துறை மருத்துவக் கல்லூரியின் கல்விக் கட்டணக் குறைப்பு தொடர்பான அறிவிப்பையும் மக்கள் நல்வாழ்வுத்துறை உடனடியாக வெளியிட வேண்டும்.

7 மாதத்திற்கு முன்பே போட்டிருக்க வேண்டிய அரசாணையை இப்பொழுது போட்டு, மருத்துவ மாணவர்களை ஏமாற்றிடலாம் என அரசு கருதக் கூடாது”.

இவ்வாறு ஜி.ஆர்.ரவீந்திரநாத் தெரிவித்துள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x