

சிவகங்கை மாவட்டம் மானாமதுரை அருகே சாலையோரங்களில் மது அருந்துவோரை எச்சரித்து கிராம மக்கள் அறிவிப்புப் பலகை வைத்துள்ளனர்.
மானாமதுரை அருகே பனிக்கனேந்தல் கிராமத்தில் 150க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசிக்கின்றன. மேலும், அக்கிராமத்திற்கு அருகிலேயே மதுக்கடை செயல்பட்டு வருகிறது. அங்கு மது வாங்கும் மதுப்பிரியர்கள் மானாமதுரையில் இருந்து பனிக்கனேந்தல் செல்லும் சாலையில் அமர்ந்து குடிக்கின்றனர்.
இதனால் பனிக்கனேந்தல் பாதையில் செல்வதற்குப் பெண்கள், சிறுவர்கள் அச்சப்படுகின்றனர். இதுகுறித்துப் பலமுறை அதிகாரிகளிடம் மனு கொடுத்தும் நடவடிக்கை இல்லை. இதையடுத்து கிராம மக்களே மது அருந்துவோரை எச்சரிக்கும் வகையில் ஆங்காங்கே அறிவிப்புப் பலகைகளை வைத்துள்ளனர்.
அதில், ''சாலையோரங்கள், கண்மாய்க் கரைகள், பனிக்கனேந்தல் கிராம எல்லைக்கு உட்பட்ட பகுதிகளில் மது அருந்துவது தடை செய்யப்பட்டுள்ளது. மீறினால் போலீஸார் மூலம் நடவடிக்கை எடுக்கப்படும்'' என எழுதப்பட்டுள்ளது.