Last Updated : 28 Jan, 2021 08:03 PM

 

Published : 28 Jan 2021 08:03 PM
Last Updated : 28 Jan 2021 08:03 PM

மானாமதுரை அருகே நெல் கொள்முதல் நிலையம் திறப்பதில் தாமதம்: நெல் மூட்டைகளுடன் இரவு பகலாகக் காத்திருக்கும் விவசாயிகள்

சிவகங்கை மாவட்டம் மானாமதுரை அருகே நெல் கொள்முதல் நிலையம் திறப்பதில் தாமதம் ஏற்பட்டதால் நெல் மூட்டைகளுடன் இரவு பகலாக விவசாயிகள் காத்திருக்கின்றனர்.

சிவகங்கை மாவட்டத்தில் நடப்பாண்டில் 1.90 லட்சம் ஏக்கருக்கு மேல் நெல் சாகுபடி செய்யப்பட்டது. இந்தப் பருவத்தில் அதிக மழை பெய்ததால் சாகுபடி பரப்பும் அதிகரித்தது. இருந்தபோதிலும் பல இடங்களில் வெள்ளநீர் சூழ்ந்து 90 ஆயிரம் ஏக்கருக்கு மேல் நெற்பயிர்கள் அழுகின. வெள்ளத்தில் தப்பித்த நெற்பயிர்களை விவசாயிகள் அறுவடை செய்து வருகின்றனர்.

ஏற்கெனவே கதிரறுக்கும் இயந்திரங்கள் பற்றாக்குறையால் பல இடங்களில் விவசாயிகளே அறுக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. மேலும், கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு கதிரறுக்கும் இயந்திரங்களின் வாடகையும் மணிக்கு ரூ.1,500 வரை கூடுதலாக அதிகரித்துள்ளது. இதனால் விவசாயிகள் மிகுந்த சிரமத்தில் நெல் அறுவடைப் பணியைச் செய்து வருகின்றனர்.

மேலும் நெல் கொள்முதல் நிலையங்கள் திறப்பதில் தாமதம் ஏற்பட்டுள்ளதால் அறுவடை செய்த நெல் மூட்டைகளை வியாபாரிகளிடம் அடிமாட்டு விலைக்கு விற்று வருகின்றனர். இந்நிலையில் தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகம் மூலம் மாவட்டத்தில் 30க்கும் மேற்பட்ட இடங்களில் அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையங்களைத் திறக்க நடவடிக்கை எடுக்கபப்ட்டு வருகிறது.

முத்தனேந்தலில் ஜன.25-ம் தேதி அரசு கொள்முதல் நிலையம் அமைக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து தீத்தாம்பேட்டை, முத்தனேந்தல், வாகுடி, வெள்ளிக்குறிச்சி பகுதி விவசாயிகள் தங்களது நெல் மூட்டைகளைக் கொள்முதல் நிலையம் அமைந்துள்ள பகுதிகளுக்குக் கொண்டு வந்தனர். ஆனால் அங்கு நெல்லைப் புடைத்தெடுக்கும் இயந்திரம் மட்டும் இருந்தது. எடை போடும் இயந்திரமோ, அதிகாரிகளோ இல்லை. இதையடுத்து 500 மூட்டைகளுடன் இரவு பகலாக விவசாயிகள் காத்திருக்கின்றனர்.

இதுகுறித்து முத்தனேந்தல் விவசாயிகள் கூறுகையில், “இந்த ஆண்டு மழை வெள்ளத்தால் நெற்பயிர்கள் சேதமடைந்தன. மீதியுள்ள நெற்பயிர்களை அறுவடை செய்து வந்தால் வியாபாரிகள் அடிமாட்டு விலைக்குக் கேட்கின்றனர். இதையடுத்து பலமுறை கோரிக்கை வைத்துக் கொள்முதல் நிலையம் அமைக்க அரசு நடவடிக்கை எடுத்துள்ளது. அதுவும் தற்போது வரை திறக்கவில்லை. இதனால் நெல் மூட்டைகளை இரவு பகலாகப் பாதுகாத்து வருகிறோம்" என்று கூறினர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x