

தைப்பூச திருவிழாவில் கழுகுமலை அருள்மிகு கழுகாசலமூர்த்தி கோயிலில் தேரோட்டம் நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.
தென் பழனி என்றழைக்கப்படும் கழுகுமலை கழுகாசலமூர்த்தி கோயிலில் கடந்த 19-ம் தேதி தைப்பூசத் திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. தினமும் சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் அலங்கார தீபாராதனை, இரவு பல்வேறு வாகனங்களில் சுவாமி, அம்பாள் வீதி உலா வரும் நிகழ்ச்சி ஆகியவை நடந்து வந்தது. திருவிழாவின் 8-ம் நாளான கடந்த 26-ம் தேதி சுவாமி பச்சை சார்த்தி தீபாராதனை மற்றும் வீதி உலா நடந்தது.
10-ம் திருநாளான இன்று தேரோட்டம் நடந்தது. இதையொட்டி அதிகாலை 5 மணிக்கு கோயில் நடை திறக்கப்பட்டது. தொடர்ந்து, திருவனந்தல் பூஜை, திருப்பள்ளி எழுச்சி பூஜை நடந்தது. பின்னர், சுவாமி கழுகாசலமூர்த்தி மற்றும் அம்பாள்கள் தேருக்கு எழுந்தருளல் நிகழ்ச்சி காலை 8 மணிக்கு நடந்தது. பின்னர் காலை 9 மணிக்கு தேரோட்டம் தொடங்கியது.
தேரோட்டத்தில், கழுகுமலை பேரூராட்சி முன்னாள் தலைவர் சுப்பிரமணியன், மாவட்ட ஊராட்சி குழு உறுப்பினர் சந்திரசேகர், கோயில் நிர்வாக அதிகாரி கார்த்தீஸ்வரன் உட்பட திரளான பக்தர்கள் கலந்து கொண்டு “வெற்றி வேல் வீரவேல்” என்ற கோஷங்கள் முழங்கி வடம் பிடித்து தேர் இழுத்தனர்.
கோ ரதத்தில் விநாயகப்பெருமான் முன் செல்ல, சட்ட ரதத்தில் உற்சவர் மூர்த்தியுடன் வள்ளி, தெய்வானை தேரில் தெற்கு ரத வீதி, பஸ் நிலைய சாலை, கோயில் மேலவாசல் தெரு, அரண்மனை வாசல் தெரு, கீழபஜார் வழியாக வந்து தேர் நிலையை அடைந்தது. தொடர்ந்து சுவாமி, அம்பாள்களுக்கு சிறப்பு தீபாராதனை நடந்தது.
பின்னர் கோயிலில் மூலவருக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் அலங்கார தீபாராதனை நடந்தது. நேற்று அரசு விடுமுறை என்பதால் விருதுநகர், சிவகாசி, கோவில்பட்டி, சங்கரன்கோவில், புளியங்குடி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளை சேர்ந்த பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து தரிசனம் செய்தனர். தொடர்ந்து இரவு 8 மணிக்கு இந்திர வாகனத்தில் சுவாமி வீதியுலா நடைபெறுகிறது.