

டெல்லியில் விவசாயிகள் நடத்திய டிராக்டர் பேரணியின்போது, அவர்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதல் மத்திய அரசின் திட்டமிட்ட சதி என்று மக்கள் அதிகாரம் அமைப்பு குற்றம் சாட்டியுள்ளது.
வேளாண் சட்டங்களைத் திரும்பப் பெற வலியுறுத்தி டெல்லியில் போராட்டம் நடத்தி வரும் விவசாயிகள், குடியரசு நாளில் மாபெரும் டிராக்டர் பேரணி நடத்தினர். அந்தப் பேரணியின்போது வெடித்த வன்முறையில் போலீஸார் மற்றும் விவசாயிகள் என இரு தரப்பினரும் தாக்குதலுக்கு உள்ளாயினர். இதில், இரு தரப்பினரினும் பலர் காயமடைந்த நிலையில், விவசாயி ஒருவர் உயிரிழந்தார்.
இந்தநிலையில், திருச்சி பாலக்கரை ரவுண்டானா பகுதியில் இன்று மக்கள் அதிகாரம் மற்றும் பல்வேறு சமூக நல அமைப்பினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
"டெல்லி டிராக்டர் பேரணியின்போது விவசாயிகள் மீது நடத்தப்பட்ட தாக்குதல் மற்றும் அதற்கு ஆதரவாக தமிழ்நாட்டில் போராட்டங்களில் ஈடுபட்டவர்கள் மீது போலீஸார் எடுத்த நவடிக்கைகள் ஆகியவற்றையும், மத்திய அரசைக் கண்டித்தும் மற்றும் வேளாண் சட்டங்களைத் திரும்பப் பெற வேண்டும்.
டெல்லியில் அமல்படுத்தப்பட்டுள்ள 144 தடை உத்தரவு, இணையச் சேவை முடக்கம் ஆகியவற்றை திரும்பப் பெற வேண்டும். டெல்லியில் விவசாயிகள் தொடர்ந்து போராட்டம் நடத்த அனுமதிக்க வேண்டும். பெரு நிறுவனங்களுக்கு ஆதரவாக மத்திய அரசு செயல்படக் கூடாது" என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் ஆர்ப்பாட்டத்தில் வலியுறுத்தப்பட்டன.
ஆர்ப்பாட்டத்துக்குத் தலைமை வகித்த மக்கள் அதிகாரம் அமைப்பின் திருச்சி மண்டல ஒருங்கிணைப்பாளர் செழியன், செய்தியாளர்களிடம் கூறும்போது, "அமைதி வழியில் கடந்த 60 நாட்களுக்கும் மேலாக விவசாயிகள் டெல்லியில் போராட்டம் நடத்தி வருகின்றனர். இந்தநிலையில், டிராக்டர் பேரணியின்போது ஏற்பட்ட வன்முறையும், விவசாயிகள் மீது நடத்தப்பட்ட தாக்குதலும் மத்திய அரசின் திட்டமிட்ட சதி. விவசாயிகள் போராட்டத்தில் மர்ம நபர்களை அரசு அனுமதித்துள்ளது.
மர்ம நபர்கள் ஊடுருவியதை விவசாய சங்கங்கள் வீடியோ ஆதாரத்துடன் வெளிப்படுத்தியுள்ளனர். எனவே, மத்திய அரசைக் கண்டித்தும், விவசாயிகளுக்கு ஆதரவாகவும், வேளாண் சட்டங்களைத் திரும்பப் பெற வலியுறுத்தியும் போராட்டம் நடத்தப்பட்டது" என்றார்.
இந்த ஆர்ப்பாட்டத்தில் அகில இந்திய விவசாய ஒருங்கிணைப்புக் குழுவின் மண்டல ஒருங்கிணைப்பாளர் சிவசூரியன், ஜனநாயக சமூகநல கூட்டமைப்பின் தலைவர் சம்சுதீன், மக்கள் கலை இலக்கியக் கழக மாவட்டச் செயலாளர் ஜீவா மற்றும் புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணி, தமிழ் புலிகள் கட்சியினர் உட்பட பலர் கலந்து கொண்டனர்.