

ஜெயலலிதா வாழ்ந்த வேதா இல்லம் நினைவிடமாக மாற்றப்பட்ட நிலையில் இன்று திறந்து வைக்கப்பட்டது. திறப்புவிழா நடத்தினாலும், பொதுமக்கள் பார்வையிட அனுமதி இல்லை, பிரதான கட்டிடத்துக்குள் நுழையக்கூடாது என்ற உயர் நீதிமன்ற உத்தரவால் பொதுமக்கள் அனுமதிக்கப்படவில்லை.
தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் தாயார் சந்தியா 1970-களில் வாங்கிய வீடு பின்னர் ஜெயலலிதாவால் மேலும் கட்டிடமாக கட்டி முடிக்கப்பட்டது. ஜெயலலிதா நடிகையாக வாழ்ந்த காலத்திலும், அரசியலில் நுழைந்த பின்னரும், கட்சியின் பொதுச் செயலாளரானதும், முதல்வர் ஆன பின்னரும் இதே வீட்டில் வசித்தார்.
போயஸ் இல்லம் என்று பொதுமக்களால் அழைக்கப்பட்டாலும் அந்த இல்லத்தின் பெயர் ‘வேதா இல்லம்’ ஆகும்.
அவர் மறைந்த பிறகு, அவர் வாழ்ந்த வேதா இல்லத்தை நினைவு இல்லமாக மாற்றி பொதுமக்கள் பார்வைக்காகத் திறக்கப்படும் என்று 2017-ம் ஆண்டு முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவித்தார். 10 கிரவுண்டு அதாவது 24,422 சதுர அடி பரப்பளவு கொண்ட வேதா இல்லத்தைக் கையகப்படுத்தும் பணியும் தொடங்கியது.
கடந்த வருடம் மே 22-ஆம் தேதி வேதா இல்லத்தை நினைவிடமாக மாற்ற அவசரச் சட்டமும் பிறப்பிக்கப்பட்டது. இதற்காக உருவாக்கப்படும் அறக்கட்டளைக்கு முதல்வர் எடப்பாடி பழனிசாமி தலைவராகவும், துணை முதல்வர் பன்னீர்செல்வம் மற்றும் செய்தித் துறை அமைச்சர் கடம்பூர் ராஜு உறுப்பினர்களாகவும் இருப்பர் எனக் கூறப்பட்டது.
இதனிடையே ஜெயலலிதா சொத்தை நிர்வகிப்பதற்காக ஒரு நிர்வாகியை நியமிக்க வேண்டும் என்று தொடரப்பட்ட வழக்கில், வருமான வரித்துறை சார்பில், ஜெயலலிதா பேரில் ரூ.36 கோடியே 90 லட்ச ரூபாய் வரி பாக்கி உள்ளது. அதனால், வேதா இல்லத்தை அரசு கையகப்படுத்துவதற்கு அனுமதிக்க முடியாது என்று தெரிவிக்கப்பட்டது.
இதனிடையே கடந்த ஆண்டு மே 29-ஆம் தேதி உத்தரவிட்ட உயர் நீதிமன்றம் தீபா, தீபக் இருவரும் ஜெயலலிதாவின் நேரடி வாரிசுகள் என்று உத்தரவிட்டது. இந்த தீர்ப்பைத் தொடர்ந்து, வேதா நிலையத்தைக் கையகப்படுத்துவது தொடர்பான விசாரணைகளைக் கைவிட்டு, வீட்டு சாவியை தன்னிடம் ஒப்படைக்க வேண்டும் என்று ஜெயலலிதாவின் வாரிசான தீபக் சென்னை உயர் நீதிமன்றத்தில் ஜூலை 16-ம் தேதி வழக்குத் தொடர்ந்தார். இந்த வழக்கு நிலுவையில் உள்ளது.
இந்நிலையில், ஜெயலலிதாவின் வீட்டை நினைவு இல்லமாக மாற்ற, வீட்டைக் கையகப்படுத்துவதற்காக அதன் இழப்பீடு தொகையான ரூ. 67.90 கோடியை கடந்த ஜூன் மாதம் சிட்டி சிவில் நீதிமன்றத்தில் தமிழக அரசு டெபாசிட் செய்தது. உரியவர்கள் இந்த இழப்பீட்டுத் தொகையை சிவில் நீதிமன்றத்தின் மூலம் பெற்றுக்கொள்ளலாம் என்றும், இந்த தொகையைச் செலுத்தியதன் மூலம் வேதா இல்லம் அரசுடைமையாக்கப்பட்டதாகவும் தமிழக அரசு அறிவித்தது.
ஜெயலலிதா நினைவு இல்லத்தை புதுப்பிக்க ரூ.35,00,000 நிதி ஒதுக்கப்பட்டது. ஜெயலலிதா வாழ்ந்த வேதா இல்லத்தை நினைவு இல்லமாக்க எதிர்ப்பு தெரிவித்து தீபக் தொடர்ந்த வழக்கில் ஒரு பகுதியாக அவரது பொருட்கள் மதிப்பிடப்படவில்லை என்பதால் நினைவு இல்லத்தை திறக்கலாம், ஆனால் பிரதான கட்டிடத்துக்குள் யாரும் நுழைய கூடாது. பொதுமக்களையும் அனுமதிக்கக்கூடாது.
நினைவு இல்லத்தை திறந்தப்பின் அதைப்பூட்டி சாவியை பதிவாளரிடம் ஒப்படைத்துவிட வேண்டும் என்று உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது. அதன் அடிப்படையில் இன்று வேதா இல்லம் திறக்கப்பட்டது. காலை 10-30 மணிக்கு முதல்வர் பழனிசாமி நினைவு இல்ல கல்வெட்டை திறந்து வைத்தார். வேதா இல்லத்துக்குள் முதல்வர் அமைச்சர்கள் முக்கிய அதிகாரிகள் மட்டும் அனுமதிக்கப்பட்டனர்.
உள்ளே செருப்பை கழற்றிவிட்டு நுழைந்த எடப்பாடி பழனிசாமி, ஓபிஎஸ், சபாநாயகர் தனபால், அமைச்சர்கள், முன்னாள் அமைச்சர்கள், முக்கிய நிர்வாகிகள், அதிகாரிகள் அங்கு வைக்கப்பட்டிருந்த ஜெயலலிதா உருவப்படத்திற்கு மலர் தூவி அஞ்சலி செலுத்தினர். பின்னர் ஜெயலலிதா நினைவு இல்ல கல்வெட்டை முதல்வர் பழனிசாமி திறந்து வைத்தார். வீட்டினுள் நுழைந்த முதல்வர் பழனிசாமி, ஓபிஎஸ் உள்ளிட்ட அமைச்சர்கள் அங்கு வைக்கப்பட்டிருந்த ஆளுயர் குத்துவிளக்கை ஏற்றி வைத்து வணங்கினர்.
ஜெயலலிதா நினைவு இல்லத்தில் பொதுமக்களை அனுமதி குறித்த வழக்கும், நினைவு இல்லத்தை திறக்கக்கூடாது தங்களிடம் இல்லத்தை ஒப்படைக்கவேண்டும் என்கிற தீபக் தொடர்ந்த வழக்கும் நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது. பொதுமக்களை அனுமதிக்ககோரி தமிழக அரசின் முறையீட்டை தலைமை நீதிபதி அமர்வு நாளை விசாரிக்க உள்ளது.