

வடலூர் சத்திய ஞானசபையில் தைபூச ஜோதி தரிசனம் நடந்தது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
கடலூர் மாவட்டம் வடலூரில் அருட்பிரகாச வள்ளலார் நிறுவிய சத்திய ஞானசபையில் ஆண்டுதோறும் தைப்பூச விழா நடைபெறுவது வழக்கம். இந்த ஆண்டு தைபூச திருவிழாவையொட்டி நேற்று(ஜன.27) காலை பார்வதிபுரம் மக்கள் வரிசை தட்டுடன் மேளதாளம் முழங்க வந்தனர். பின்னர் பார்வதிபுரம் கிராம பெரியவர்கள் வடலூர் வள்ளலார் சத்திய ஞானசபையில் காலை 10 மணிக்கு கொடியேற்றினர். இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர். இரவு தருமச்சாலை மேடையில் சன்மார்க்க சொற்பொழிவு நடைபெற்றது.
இன்று (ஜன.28) தைப்பூச திருவிழாவையொட்டி காலை 6 மணி, 10 மணிக்கு 7 திரைநீக்கி ஜோதி தரிசனம் நடைபெற்றது. இதனை தொடர்ந்து பகல் 1 மணி, இரவு 7 , மணி 10 மணி, நளை(ஜன.29) காலை 5.30 ஆகிய நேரங்களில் 7 திரைநீக்கி ஜோதி தரிசனம் நடைபெறும்.
ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு அருட்பெரும்ஜோதி, தனிப்பெரும் கருணை என்ற முழக்கத்துடன் ஜோதி தரிசனம் செய்தனர். மாவட்ட நிர்வாகத்தின் கரோனா கட்டுப்பாடு காரணமாக அன்ன தானம் செய்தவர்கள் உணவு வகைகளை பேக்கிங்கில் வழங்கினார். ராட்டினம் போன்ற பொழுது போக்கு அம்சங்களுக்கும், தற்காலிக கடைகளுக்கும் தடைவிதிக்கப்பட்டிருந்தது. சிறப்பு ரயில், சிறப்பு பேருந்துகள் இயக்கப்படவில்லை. எஸ்பி. ஸ்ரீஅபிநவ் தலைமையில் போலீஸார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர். மாவட்ட நிர்வாகம் கரோனா தடுப்புக்காக பல்வேறு கட்டுப்பாடுகளை கடுமையாக கடைபிடித்ததால் சென்ற ஆண்டை விட இந்த ஆண்டு பக்தர்கள் கூட்டம் குறைவாக இருந்தது.
வரும் 30-ம் தேதி பகல் 12 மணி முதல் மாலை 6 மணிவரை மேட்டுக்குப்பத்தில் வள்ளலார் சித்திப்பெற்ற திருஅறைதரிசனம் நடைபெறும்.முன்னதாக வடலூர் சத்திய ஞானசபையில் இருந்து வள்ளலார் பயன்படுத்திய பொருட்கள் அடங்கிய பெட்டியை பூக்களால் அலங்கரித்து மேளதாளம் முழங்க வள்ளலார் சித்திபெற்ற திரு அறையில் உள்ள மேட்டுக்குப்பம் கொண்டு செல்லப்படும். அங்கு பக்தர்கள் வழிபாட்டுக்கு பின்னர் மீண்டும் வடலூர் கொண்டு வரப்படும். தைப்பூச விழா ஏற்பாடுகளை வடலூர் தெய்வநிலைய அதிகாரிகள் செய்திருந்தனர்.