Published : 28 Jan 2021 07:16 AM
Last Updated : 28 Jan 2021 07:16 AM

குழந்தைகளுக்கான பாலியல் துன்புறுத்தல்களை தைரியமாக வெளியே சொல்லும் விழிப்புணர்வு வர வேண்டும்: ‘அச்சம் தவிர்' என்ற இணையவழியிலான நிகழ்வில் சமூக ஆர்வலர்கள் கருத்து

சென்னை

‘லெட்ஸ் தேங்க் ஃபவுண்டேஷன்’ சார்பில் ‘அச்சம் தவிர்' எனும்இணைய வழியிலான நிகழ்வில்,‘குழந்தைகளுக்கான பாலியல் துன்புறுத்தல்களைத் தைரியமாக வெளியே சொல்லும் விழிப்புணர்வு வர வேண்டும்’ என்று சமூக ஆர்வலர்கள் கருத்து தெரிவித்தனர்.

குழந்தைகளுக்கு எதிரான பாலியல் குற்றங்கள் தொடர்பான விழிப்புணர்வை உண்டாக்கும் நோக்கில் ‘அச்சம் தவிர்' எனும் நிகழ்வின் தொடக்க விழா கடந்த செவ்வாய்க்கிழமையன்று இணையம் வழியே நடைபெற்றது. இந்த நிகழ்வில் பங்கேற்றவர்கள் பேசியதாவது:

சமூக ஆர்வலர் மதுவந்தி: நம் வீடுகளில் குழந்தைகளுக்கு ‘குட் டச்’, ‘பேட் டச்’ எதுவென நாம் சொல்லித்தர வேண்டும். வீடுகளிலும் வெளியிடங்களிலும் குழந்தைகள் மேல் நிகழ்த்தப்படும் பாலியல் குற்றங்கள் குறித்து தைரியமாக வெளியே சொல்ல வேண்டும். இந்த தைரியத்தை குழந்தைகளுக்கு பெற்றோர், ஆசிரியர்கள் உருவாக்க வேண்டும்.

கோயமுத்தூர் அமர்வு நீதிபதியும் cwc உறுப்பினருமான ஏ.எம்.மீனாட்சி: குழந்தைகளுக்கான பாலியல் துன்புறுத்தல்கள் தடுக்கப்பட வேண்டும் என்பதற்காக அரசுபல்வேறு திட்டங்களை முன்னெடுத்து வருகிறது. இந்த திட்டங்கள் குறித்த விழிப்புணர்வை.பொதுமக்களிடத்தில் கொண்டு சேர்க்க வேண்டியது நம் ஒவ்வொருவரின் கடமையாகும். குழந்தைகள் மேல் நிகழ்த்தப்படும் பாலியல் துன்புறுத்தல்கள் குறித்து ‘சைல்ட் வெல்ஃபேர் கமிட்டி’ மூலமாக விசாரணை செய்து சிறந்த முறையில் நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறோம்.

திரைக் கலைஞர் கவுதமி: குழந்தைகளில் ஆண் - பெண் எல்லோருமே சமம்தான். எல்லா குழந்தைகளும் நம் குழந்தைகள் என்கிற உணர்வோடு நாம் அவர்களிடம் பழக வேண்டும். பாலியல் துன்புறுத்தலுக்கு எதிராக நாம் அனைவரும் தட்டிக் கேட்க வேண்டும். அப்போதுதான் குழந்தைகள் தைரியமாகத் தங்களுக்கு ஏற்பட்ட பாதிப்பை வெளியே சொல்லத் துணிவார்கள்.

சின்னத்திரை தொகுப்பாளர் ஈரோடு மகேஷ்: எல்லா மாற்றமும் நம் வீட்டிலிருந்துதான் தொடங்க வேண்டும். பெண் குழந்தைகளை வீடுகளில், ‘என்ன ஆம்பள மாதிரி செய்றே?’ என்று அவர்களை மட்டம்தட்டாமல் பெண் குழந்தைகளை தைரியமாகவும் துணிச்சலாகவும் நாம் வளர்க்க வேண்டும். ‘அச்சம் தவிர்’ என்ற இந்த வார்த்தையோடு சேர்த்து பாரதி சொன்ன ‘ரௌத்திரம் பழகு’ என்பதையும் நம் குழந்தைகளுக்கு கற்றுத்தர வேண்டும்.

சிறப்பு அரசு வழக்கறிஞர் ரமேஷ்: இந்திய தண்டனைச் சட்டம் உருவாக்கியபோது குழந்தைகளுக்கான குற்றங்கள் பற்றிஎந்த தண்டனைகளும் உருவாக்கப்படவில்லை. இப்படியான தனிப்பிரிவுகள் அப்போது தேவைப்பட வில்லை. 2012-ம் ஆண்டில்தான் குழந்தைகளுக்கான பாலியல் குற்றங்களுக்கான ‘போக்சோ’ சட்டம் உருவாக்கப்பட்டது. இந்தச் சட்டத்தின்படி குழந்தைகளுக்கான பாலியல் குற்றங்கள்செய்பவர்களுக்கு கடுமையானதண்டனைகள் வழங்கப்படு கின்றன.

பேராசிரியரும் பேச்சாளரு மான ஜெயந்த பாலகிருஷ்ணன்: உளவியல்ரீதியாகப் பாதிக்கப்பட்ட குழந்தைகள் எதையும் வெளியே சொல்லப் பயப்படுவார்கள். பெண் குழந்தைகளுக்கு மட்டுமல்ல, ஆண் குழந்தைகளுக்கும் கண்ணுக் குத் தெரியாத உடல்ரீதியான துன்புறுத்தல்கள் 50 சதவீதம் வீடுகளில்தான் நடைபெறுகின்றன. தனக்குப் பிடிக்காததை வேண்டாம் என்று சொல்லி, மறுப்பதற்கு குழந்தைகளுக்கு சிறுவயதிலேயே நாம் கற்றுத்தர வேண்டும்.

ஓய்வு பெற்ற காவல்துறை அதிகாரியும் எழுத்தாளருமான திலகவதி ஐபிஎஸ்: குழந்தைகளுக் கான பாலியல் குற்றங்களுக்கு இன்றைக்கு சட்டத்தில் எப்படியான தண்டனைகள் வழங்கப்படுகின்றன என்பது குற்றம் செய்பவர்களுக்கு தெரியவந்தால் நிச்சயம் அவர்கள் இப்படியான தவறுகளைச் செய்யதயங்குவார்கள். நாம் ஒவ்வொரு வரும் பொறுப்புணர்வை எடுத் துக்கொண்டு குழந்தைகள் மீதான பாலியல் துன்புறுத்தல்களுக்கு எதிரான நடவடிக்கைகளை ஒருங் கிணைக்க வேண்டும்.

இவ்வாறு அவர்கள் பேசினர்.

இந்நிகழ்வை நடிகரும் சின்னத்திரை தொகுப்பாளருமான மா.கா.பா.ஆனந்த் தொகுத்து வழங்கினார். நிறைவாக ‘லெட்ஸ் தேங்க் ஃபவுண்டேஷன்’ நிறுவனர் பிரதீப் நன்றி கூறினார். இந்த நிகழ்வின் மீடியா பார்ட்னராக ‘இந்து தமிழ் திசை' நாளிதழ் செயல்பட்டது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x