

தமிழகத்தில் 2019-ம் ஆண்டைவிட 2020-ம் ஆண்டில் காசநோயின் பாதிப்பு 37 சதவீதம் குறைந்துள்ளது.
தமிழகத்தில் காசநோயினால் பாதிக்கப்படும் 84 சதவீதம் பேர்முதல் சிகிச்சையிலேயே குணப்படுத்தப்படுகின்றனர். தொடர்சிகிச்சைகள் மூலம் மீதமுள்ளவர்கள் குணமடைந்து வருகின்றனர். இவைதவிர சிகிச்சை காலத்தில் நோயாளிகளுக்கு ஊட்டச்சத்து அளிப்பதற்கான நிதியுதவிகளும் வழங்கப்பட்டு வருகின்றன. இதன்மூலம் தமிழகத்தில் காசநோயைக் குணப்படுத்தும் சதவீதம் அதிகரித்துள்ளது.
கடந்த ஆண்டில் நாடு முழுவதும் 17.98 லட்சம் பேருக்கு அந்நோயின் தாக்கம் இருந்தது தெரியவந்துள்ளது. கடந்த சில ஆண்டுகளாகவே உத்தரப்பிரதேசம், மகாராஷ்டிரம், ராஜஸ்தான், குஜராத் உள்ளிட்ட வட மாநிலங்களில்தான் காசநோய் பாதிப்பு அதிகமாக இருந்து வருகிறது. குறிப்பாக உத்தரப்பிரதேசத்தில் மட்டும் 3.60 லட்சத்துக்கும் மேற்பட்டோர் காசநோயால் பாதிக்கப்பட்டுள்ளனர். தமிழகத்தில் 70,122 பேருக்கு அந்நோயின் பாதிப்பு இருந்தது. அவர்களில், தனியார் மருத்துவமனைகளில் 16,190 பேரும், அரசு மருத்துவமனைகளில் 53,932 பேரும் முதல்கட்ட சிகிச்சை பெற்றதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
2019-ம் ஆண்டைவிட 2020-ம்ஆண்டில் தமிழகத்தில் காசநோய்பாதிப்பு 37 சதவீதம் குறைந்துள்ளது. இதுதொடர்பாக சுகாதாரத் துறை அதிகாரிகளிடம் கேட்டபோது, “காசநோய்க்கும், கரோனாதொற்றுக்கும் ஒரே மாதிரியான அறிகுறிகள் இருப்பதால், பலர்முன்கூட்டியே பரிசோதனை செய்து கொண்டதுகூட அந்நோயின்பாதிப்பு குறைந்ததற்கு காரணமாக இருக்கலாம் என மருத்துவ நிபுணர்கள் தெரிவித்துள்ளனர். ஊரடங்கு காலத்தில் ஒருவரிடமிருந்து மற்றொருவருக்கு நோய் தொற்று பரவுவது பெரும்பாலும் கட்டுப்படுத்தப்பட்டது. அதுவும் காசநோய் பாதிப்பு குறைந்ததற்கு முக்கிய காரணியாக அமைந் துள்ளது” என்றனர்.