Published : 28 Jan 2021 07:16 AM
Last Updated : 28 Jan 2021 07:16 AM

70 லட்சம் குழந்தைகளுக்கு 43 ஆயிரம் மையங்கள் அமைப்பு: ஜன.31-ல் போலியோ சொட்டு மருந்து முகாம்

சென்னை

தமிழகத்தில் போலியோ சொட்டு மருந்து முகாம் இம்மாதம் 31-ம்தேதி நடைபெறுகிறது. 43 ஆயிரம் மையங்கள் மூலம் 70 லட்சம் குழந்தைகளுக்கு சொட்டு மருந்து கொடுக்கப்பட உள்ளது.

இந்தியாவில் போலியோவை ஒழிப்பதற்காக 5 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு ஆண்டுதோறும் 2 தவணைகளில் போலியோ சொட்டு மருந்து வழங்கப்பட்டு வந்தது. போலியோ ஒழிக்கப்பட்ட நாடுகளின் பட்டியலில் இந்தியாவும் சேர்ந்துள்ளது. அதனால், கடந்த 2 ஆண்டுகளாக ஆண்டுக்கு ஒருமுறை மட்டும் போலியோ சொட்டு மருந்து வழங்கப்படுகிறது.

இந்த ஆண்டுக்கான போலியோ சொட்டு மருந்து முகாம் கடந்த 17-ம்தேதி நடைபெற இருந்தது. 16-ம் தேதி கரோனா தொற்று தடுப்பூசி போடும் பணி தொடங்க இருந்ததால் போலியோ சொட்டு மருந்து முகாம் தள்ளிவைக்கப்பட்டது. இந்நிலையில், தமிழகம் உட்பட நாடுமுழுவதும் போலியோ சொட்டுமருந்து முகாம் வரும் 31-ம் தேதி நடைபெற உள்ளது.

இதுதொடர்பாக தமிழக பொது சுகாதாரத் துறை இயக்குநர் செல்வ விநாயகம் நேற்று வெளியிட்ட செய்திக்குறிப்பு:

தமிழகத்தில் அரசு மருத்துவமனைகள், ஆரம்ப சுகாதார நிலையங்கள், அங்கன்வாடி மையங்கள், சத்துணவு மையங்கள், பள்ளிகள் என 43 ஆயிரத்து 51 மையங்களில் போலியோ சொட்டு மருந்து வழங்கப்படுகிறது. முகாம் நாளன்று பயணத்தில் இருக்கும்குழந்தைகளின் வசதிக்காக பேருந்து, ரயில், விமான நிலையங்கள், சோதனைச்சாவடிகளில் சொட்டு மருந்து வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

தொலைதூரம் மற்றும் எளிதில் செல்ல முடியாத பகுதிகளில் வசிக்கும் குழந்தைகளுக்காக நடமாடும் குழுக்களுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து வழங்கும் பணியில் சுகாதாரப் பணியாளர்கள், அங்கன்வாடி பணியாளர்கள், ஆசிரியர்கள் மற்றும் தன்னார்வலர்கள் என 2 லட்சத்துக்கும் மேற்பட்டோர் ஈடுபட உள்ளனர்.

தமிழகத்தில் உள்ள 5 வயதுக்குட்பட்ட 70.20 லட்சம் குழந்தைகளுக்கு சொட்டு மருந்து வழங்கஇலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.தேசிய தடுப்பூசி அட்டவணைப்படிஓரிரு நாட்களுக்கு முன் போலியோசொட்டு மருந்து வழங்கப்பட்டிருந்தாலும் முகாம் நாளில் மீண்டும் கண்டிப்பாக சொட்டு மருந்து வழங்கப்பட வேண்டும்.

சில தினங்களுக்கு முன்பு பிறந்த குழந்தைகளுக்கும் முகாம்நாளில் சொட்டு மருந்து கொடுப்பது அவசியமாகும். போலியோ சொட்டு மருந்து முகாம் தமிழகத்தில் சிறப்பாக நடைபெறுவதால் தொடர்ந்து 17-வது ஆண்டாக தமிழகம் போலியோ பாதிப்பு இல்லாத நிலையை அடைந்துள்ளது.

போலியோ சொட்டு மருந்து முகாம் பாதுகாப்பான முறையில் நடைபெற தகுந்த கரோனா தடுப்பு வழிமுறைகளைப் பின்பற்ற வேண்டும். முகக் கவசம் அணிந்து, சமூக இடைவெளியைக் கடைபிடிக்க வேண்டும். கூட்டமாக இருப்பதைத் தவிர்க்க வேண்டும். சொட்டு மருந்து கொடுக்கும் ஒவ்வொரு குழந்தையுடன் ஒருவரை மட்டுமே அனுமதிக்க வேண்டும். பெரியவர்கள், குழந்தைகளுக்கு காய்ச்சல், இருமல் உள்ளிட்ட கரோனா தொற்று அறிகுறிகள் இருந்தால் முகாம்களில் அனுமதிக்கக் கூடாது. இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

சென்னை மாநகரில் 5 வயதுக்கு உட்பட்ட 6.84 லட்சம்குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து கொடுப்பதற்கு 1,644 மையங்கள் ஏற்படுத்தப்பட் டுள்ளன.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x