

கனமழையினால் சேதமடைந் துள்ள 4 தொடக்கப் பள்ளிக் கட்டிங்களில் வகுப்புகள் நடத்த முடியாததால், மாற்று இடங்களாக வீடுகள் மற்றும் சமூதாயக்கூடத்தில் அப்பள்ளிகள் செயல்பட்டன.
காஞ்சிபுரம் மாவட்டத்தில், கனமழையின் தாக்கத்தால் பல்வேறு பகுதிகள் பாதிக்கப் பட்டன. மேலும், மழையின் தீவிரம் காரணமாக பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு தொடர்ந்து விடுமுறை அளிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில், கடந்த இரண்டு நாட்களாக மழை நின்றுள்ளதால் நேற்று வழக்கம்போல் பள்ளிகள் செயல்படும் என மாவட்ட நிர்வாகம் தெரிவித்திருந்தது.
மேலும், மழைநீர் வடியாமல் உள்ளதாக மவுலிவாக்கம், கோவளம் ஆகிய உயர்நிலைப் பள்ளிகள் மற்றும் திருமுடி வாக்கம், செம்மஞ்சேரி மேல்நிலைப் பள்ளிகளும். செம்மஞ்சேரி குடிசை மாற்று வாரியம், மாங்காடு, கீழ்ஒட்டிவாக்கம் ஆகிய நடுநிலைப் பள்ளிகள் மற்றும் இடையாத்தூர், இரும்புலிச்சேரி ஆகிய தொடக்கப் பள்ளிகளுக்கு நேற்று விடுமுறை அளிக்கப்பட்டிருந்தது. மேலும், திருப்போரூர் ஒன்றியம் ஆமையம்பட்டு, கழிப்பட்டூர் ஆகிய தொடக்கப்பள்ளிக் கட்டிடங்கள் தண்ணீர் சூழ்ந்துள்ளதால், அப்பள்ளிகள் சமூதாயகூடத்தில் செயல்பட்டன. இதேபோல், வாலாஜாபாத் ஒன்றியம் கண்ணடன் குடிசை தொடக்கப் பள்ளி அங்கன்வாடி மையத்திலும், உத்திரமேரூர் ஒன்றியம் விசூர் தொடக்கப் பள்ளி வாடகை வீட்டிலும் செயல்பட்டன. மேற்கூறிய பள்ளிகளின் வளாகத்தில் தேங்கியுள்ள மழைநீரை அகற்றும் பணிகளில் கல்வித்துறை அதிகாரிகள் ஈடுபட்டுள்ளனர்.
இதுகுறித்து, காஞ்சிபுரம் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் உஷா கூறியதாவது: உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகள் என மொத்தம் 337 பள்ளிகள் உள்ளன. இதில், தலா இரண்டு உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளியின் கட்டிடங்கள் மழைநீரால் சேதமடைந்துள்ளன அப்பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அறிவிக்கப்பட்டது. மேலும், அப்பள்ளிகளின் சீரமைப்பு பணிகள் மற்றும் வடிகால் வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளது என்றார்.
மாவட்ட தொடக்கப் பள்ளி அலுவலர் விஜயலட்சுமி கூறியதாவது: மாவட்டத்தில் 1,347 நடுநிலை மற்றும் தொடக்கப் பள்ளிகள் உள்ளன. இதில், திருப்போரூர் வட்டத்தில் உள்ள இரண்டு தொடக்கப்பள்ளிகள் சமுதாயக்கூடத்தில் செயல்பட்டு வருகின்றன. இந்தப் பள்ளியின் கட்டிங்கள் அருகில் உள்ள ஏரியின் வெள்ளப்பெருக்கில் முழ்கியுள்ளது. அதனால், வெள்ளநீர் வடிவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப் பட்டுள்ளது. மேலும், விசூர் பள்ளி வாடகை வீட்டிலும் மற்றொரு பள்ளி அங்கன் வாடி மையத்திலும், சில பள்ளிகள் அருகில் உள்ள உயர்நிலைப் பள்ளிகளில் கூடுதல் கட்டிடங்களிலும் செயல்பட்டன. எனினும், பாதிப்படைந்துள்ள பள்ளிக் கட்டிடங்களின் சீரமைப்புப் பணிகள் வேகமாக நடைபெற்று வருகின்றன என்றார்.